தமிழ்நாட்டில் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று பார்ப்பனர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் பல்வேறு எதிர்வினைகளை உருவாக்கிவிட்டது. இந்து மக்கள் கட்சியைச் சார்ந்த அர்ஜுன் சம்பத் என்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒருவரை முன்னிறுத்தி, நடத்தப்பட்ட போராட்டம் இது. ஆர்ப்பாட்டத்துக்கு சில நாட்களுக்கு முன் ஆளுநர் மாளிகைக்குச் சென்று பார்ப்பனர்கள் தங்களுக்குப் பாதுகாப்புக் கேட்டு, ஆளுநரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் அர்ஜுன் சம்பத்தைக் காணவில்லை. வீதிக்கு வந்துப் போராடுவதற்கு மட்டும் ‘அர்ஜுன் சம்பத்கள்’ தேவைப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டில் இப்போது பார்ப்பனர்கள் சந்திக்கும் ஆபத்துகள் எவை என்று, அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எவரும் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. மாறாகத் தமிழ்நாட்டில் சிறப்புடன், இந்தியாவுக்கே முன்மாதிரியாக செயல்படும் ‘திராவிட மாடல் ஆட்சி’ தான் அவர்களை உறுத்திக் கொண்டிருக்கிறது. “திராவிடம் பேசும் கும்பலை விரட்டியடிக்க வேண்டும்; அமைதி காக்கக் கூடாது, பரசுராமன்களாக மாற வேண்டும்” என்று மதுவந்தி என்ற ஒரு பார்ப்பனப் பெண் பேசியிருக்கிறார். பரசுராமன் என்ற ‘பிராமணன்’ கோடாரியால் ‘சத்திரியர்களை’ வெட்டி வீசினான் என்று புராணம் கூறுகிறது.

கஸ்தூரி என்ற பார்ப்பன நடிகை, அரசர்களுக்கு அந்தப்புரச் சேவைக்கு வந்தவர்கள் தெலுங்கர்கள் என்று பேசியது கடும் கண்டனங்களுக்கு உள்ளாகி இப்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

பார்ப்பனர்களுக்குப் பாதுகாப்புக் கோரி நடத்தப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டத்தில் ‘தெலுங்கர்கள்’ எதிர்ப்புப் பேச்சு எப்படி வருகிறது? பாஜகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான அமர்பிரசாத் ரெட்டி, இதற்கு முதல் கண்டனக் குரலை எழுப்பினார். அதைத் தொடர்ந்து அனைத்து தெலுங்கர்களையும் கூறவில்லை என்றார். யாரை குறிவைத்துப் பேசினார்? தமிழ்நாடு முதல்வரின் குடும்பம் என்பதை, தனது பேச்சில் மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார். தெலுங்கு வம்சாவழி வந்த முதல்வர் குடும்பம் எப்படித் தமிழர்களின் தலைவராக இருக்க முடியும் என்ற ஆணவமும், திமிரும் அதில் அடங்கி இருந்தது.

திராவிட எதிர்ப்பாளர்களே தமிழ்ப் பாதுகாப்பு என்ற முகமூடிக்குள் பதுங்கி உண்மையான எதிரியான பார்ப்பனியத்தைத் திசை திருப்ப, தெலுங்கர்கள், கன்னடர்கள் தமிழர்களின் எதிரி என்று எதிரியை மடைமாற்றம் செய்கிறார்கள். பார்ப்பனர்களுக்கு இது பாதுகாப்பாகிவிட்டது. சேரன்மாதேவி குருகுலத்தில் வ.வே.சு.அய்யர், ‘வர்ணாசிரம பாகுபாடுகளைப் பின்பற்றியதை அன்று காங்கிரசில் இருந்த பெரியாரும், வரதராஜுலு நாயுடுவும் எதிர்த்தனர். அப்போதே பெரியார் என்ற கன்னடரும், வரதராஜுலு நாயுடு என்ற தெலுங்கரும் தான் இதை எதிர்க்கிறார்கள் என்று மடைமாற்றிப் பேசினார் வ.வே.சு.அய்யர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வ.வே.சு அய்யரின் சீடராகவே பேசிவருகிறார். இப்போது நடிகை கஸ்தூரி பேசியதைக் கருத்துரிமை என்று கூறி அவர் கைதைக் கண்டிக்கிறார். பார்ப்பனர்கள் கூட மவுனம் காக்கிறார்கள். ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த அர்ஜுன் சம்பத்திடமிருந்து கூட இதுவரை கண்டனம் வரவில்லை. சீமான் கொதிக்கிறார்.

பிராமணர்களை பார்ப்பனர்கள் என்று கூறக்கூடாது என்று ஆர்ப்பாட்டத்தில் பலரும் கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர். ‘பிராமணர்கள்’ என்பவர்கள் இந்திய அரசியல் சட்டத்தின் படி ‘குடிமகன்கள் அல்ல’. காயத்ரி மந்திரம் ஓதி உபநயனம் செய்து பூணூல் அணிவிக்கப்பட்டவுடன் அவர்கள் ‘இந்தியக் குடிமக்கள் நிலைமைக் கடந்து இரண்டாவது பிறவி எடுத்து “பிராமணர்கள்” ஆகிவிடுகிறார்கள். அரசியல் சட்டத்தைப் பின்னுக்குத்தள்ளி ‘மனு சாஸ்திரமே’ தங்களுக்கான சட்டம் என்று அறிவிக்கிறார்கள். ‘பிராமணன்’ ஆக உயர்ந்துவிட்டால், ‘பிராமணர’ல்லாத ஏனைய மக்கள் ‘சூத்திரர்கள்’ என்றும், ‘பிராமணர்’களுக்கு கட்டுப்பட்டவர்கள் என்றும், ஏழு வரையறைகளை மனுசாஸ்திரம் கூறுகிறது. அதில் ஒன்று ‘பிராமணரின் வைப்பாட்டி மக்கள்’ என்பதாகும். அரசியல் சட்டத்தை புறந்தள்ளிவிட்டு ‘மனு’வின் சட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பார்ப்பனர்கள் ‘சூத்திரர்களை’ மிரட்டுகிறார்கள். கட்டாயப்படுத்துகிறார்கள். இந்திய அரசியல் சட்டம் மட்டுமே தங்களைக் கட்டுப்படுத்தும் என்று சமத்துவத்தை ஏற்கும் குடிமக்கள், ‘மனுசாஸ்திரப்படி’ ‘பிராமணனை’ ஏற்க முடியாது என்று சுயமரியாதையோடு கூறுகிறார்கள். இதில் குற்றமிழைப்பது “பிராமணர்களா”? அதை ஏற்க மறுக்கும் மானமுள்ள இந்தியக் குடிமக்களா?

காந்தி, இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் போன்ற ‘சனாதன’ ஆதரவாளர்களே ‘பூணூல்’ அணிவதை எதிர்த்தனர். பாரதியும், வைணவத்தில் சீர்திருத்தம் செய்வதாகக் கூறிய இராமானுஜரும் ‘பூணூல்’ பார்ப்பனர்களுக்கு மட்டுமே தனி உரிமையல்ல என்று, ‘பிராமண’ மேலாதிக்கத்தை எதிர்த்தனர். பார்ப்பனப் பெண்களே ‘பிராமண தர்மப்படி’ சூத்திரர்கள் தான். அவர்கள் வேதங்களைக் கேட்கக் கூடாது, உபநயன உரிமை கிடையாது. இசை, நாட்டியம் உள்ளிட்ட கலைகளில் பெண்கள் ஈடுபடுவதை பிராமணிய சட்ட நூலான ‘மனுதர்மம்’ இழிவாகப் பேசுகிறது. பெண்கள் சுதந்திரமாக செயல்படக்கூடாது, தகப்பனுக்கும், கணவனுக்கும், மகனுக்கும் அடங்கிப் போக வேண்டும் என்று வரையறுக்கிறது. மனுதர்மப்படி பெண்கள் மறுமண உரிமை தண்டனைக்குரியக் குற்றம். ‘மனுதர்மக் கட்டளைகளை முற்றாகப் புறந்தள்ளி, திரைப்படங்களில் நடித்துக் கொண்டு, அரசியல் சட்டத்தின் விவாகரத்து உரிமைகளைப் பயன்படுத்திக் கொண்டு வரும் பார்ப்பனப் பெண்கள் ‘பிராமணர்களுக்காக’ போர் முழக்கம் செய்ய என்ன உரிமை இருக்கிறது என்று கேட்கிறோம். பெண்களை அவமதித்தாலும் எங்கள் தர்மமே மேலானது” என்று கூறுகிறார்களா?

மக்கள் கோரிக்கைகளை கடவுளிடம் அர்ச்சனை வழியாகக் கொண்டு செல்லும் சக்தி தங்களுக்கு இருப்பதாகக் கூறும் பார்ப்பனர்கள், கடவுளை கைவிட்டு வீதிக்கு வந்து போராடுவது ஏன்? ‘கடவுள் சக்தி’ பாமர மக்களை ஏமாற்றுவதற்கு தான் என்கிறார்களா?

சரி, முதல்வர் குடும்பத்தை இவ்வளவு கீழ்த்தரமாக பேசிய கஸ்தூரியின் பேச்சுக்குப் பிறகும் சமூக நாகரீகத்தோடு தமிழ்நாடு அமைதியாகவே கடந்துதான் போகிறது. பார்ப்பனர்களுக்கு தமிழ்நாடு பாதுகாப்பானது என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா? காந்தி கொலை செய்யப்பட்ட போது வட நாட்டில் பார்ப்பனர்கள் தாக்கப்பட்டார்கள். அப்போது அமைதி வேண்டுகோள் விடுத்து பார்ப்பனர்களைப் பாதுகாத்தது தமிழ்நாட்டில் பெரியாரும், திராவிட இயக்கமும் தான் என்பதைப் பார்ப்பனர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

 - விடுதலை இராசேந்திரன்