கேரளா, சாலக்குடி தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பென்னி பெஹனன். காங்கிரஸ் எம்பியான பென்னி பகுத்தறிவு சிந்தனை மற்றும் விமர்சன சிந்தனைகளை ஊக்குவிப்பதற்கான மசோதா 2024-யைக் கடந்த வெள்ளியன்று மக்களவையில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து பென்னி பெஹனன் கூறுகையில் ‘‘சமூகத்தில் அதிகரித்து வரும் மூட நம்பிக்கைகளையடுத்து பகுத்தறிவு சிந்தனையை ஊக்குவிப்பதற்கான அவசரத் தேவை எழுந்துள்ளது. கடந்த 2014 முதல் விமர்சன சிந்தனைகள் ஊக்குவிக்கப்படவில்லை. நான் உயிரியல் ரீதியாகப் பிறக்கவில்லை, கடவுள்தான் என்னை இங்கு அனுப்பினார் என்று மோடி பேசும் நிலையில் பகுத்தறிவு சிந்தனைகளை ஏற்படுத்துவதற்கான முக்கிய மசோதாவாகும் இது.

நாட்டின் முதல் பிரதமரான நேரு தான் பகுத்தறிவு சிந்தனை மற்றும் அறிவியல் மனப்பான்மையை ஊக்குவித்தார். பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு, விமர்சன சிந்தனைகள், மாறுபட்ட கருத்துகள் ஏற்கப்படுவது இல்லை. ஏனெனில் பிரதமரும் அவரது கட்சியினரும் பகுத்தறிவில்லாத, மூட நம்பிக்கைகளையே ஊக்குவித்து வருகின்றனர்.அரசின் கொள்கைகள், திட்டங்கள், சமூக திட்டங்களில் அனுபவ ஆதாரங்கள், பகுத்தறிவு பகுப்பாய்வை ஊக்குவிக்கும் வகையில் இது கொண்டுவரப்பட்டுள்ளது’’ என்றார்.

 ஆழ்ந்து உறங்கும் ஒன்றிய சுகாதாரத் துறை

கொரோனா பேரிடருக்குப் பிறகு உலக நாடுகள் அனைத்தும் சுகாதாரத் துறைக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கும் மனநிலைக்கு வந்திருக்கின்றன. ஆனால் பாஜக ஆளும் இந்திய ஒன்றியம், கொரோனா பேரிடரில் இருந்து துளியும் பாடம் கற்கவில்லை. நடப்பு நிதியாண்டில் சுகாதாரத் துறைக்கான நிதியை 3 விழுக்காடு குறைத்திருக்கிறது ஒன்றிய அரசு. கடந்த நிதியாண்டில் மட்டும் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 10 விழுக்காடு பயன்படுத்தப்படவில்லை. பயன்படுத்தப்படாமல் விடப்பட்ட தொகை ரூ.8,550.21 கோடி.

இது மதுரை உட்பட 16 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டிய தொகையை விட அதிகம். ஒன்றிய அரசு 16 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு கடந்த நிதியாண்டில் ஒதுக்குவதாக, நிர்மலா சீதாராமனால் அறிவிக்கப்பட்ட தொகையே ரூ.6800 கோடிதான். வீணாய்க் கிடந்தாலும் பரவாயில்லை, மக்கள் நலனுக்குப் பயன்பட்டுவிடக்கூடாது என்பது மோடி அரசின் எண்ணமா?

- விடுதலை இராசேந்திரன்