கீற்றில் தேட...

கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் b&w tamil youtube சேனலுக்கு அளித்த நேர்காணலில், மேதகு பிரபாகரன் பெரியார் கொள்கைகளையே ஈழத்தில் செயல்படுத்தினார் என்பதை விரிவாக விளக்கினார் . கடந்த வார தொடர்ச்சி...

நெறியாளர்: ஈழத்தில் பிரபாகரன் நடத்திய விடுதலைப் போராட்டத்துக்கும் இங்கே தமிழ்த் தேசிய போரட்டத்துக்கும்‌ வேறுபாடு இருக்கிறது என்று நீங்கள் கருதுகிறீர்களா?

பொதுச்செயலாளர்: அடிப்படையில் ஒரு தேசத்தின் விடுதலை என்பது மக்களின் சமத்துவத்தையும், உரிமையும் அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும். இதற்கு நேர்மாறாக மக்களிடையே பிளவுகளையும், பாகுபாடுகளையும் அடையாளப்படுத்தும் கொள்கைகளைக் கொண்ட தேசியம் என்பது விடுதலைக்கு நேர் முறணானது. பிரபாகரன் போராடிய ஈழ விடுதலை என்பது ஐக்கிய‌ நாட்டு சபை அங்கீகரித்த தேசிய‌ சுய‌நிர்ணய உரிமையை வலியுறுத்தி நடத்திய போராட்டமாகும்‌.

இந்தியாவை இந்து நாடாக மாற்றி அமைப்பதற்கு இப்போது இங்கே முயற்சிகள் நடைபெற்றுக்‌ கொண்டு இருக்கினறன.இந்தியா என்ற‌ சொல்லுக்கு முசுலிம்களும், கிருத்தவர்களும் உள்ளடக்கிய‌ நாடு என்று பொருள்படுகிறது, எனவே இந்தியா என்ற சொல்லை ஏற்க மாட்டோம் என்று இந்து தேசம் என்பதை அடையாளப்படுத்தும் பாரத தேசம்‌ என்ற‌ சொல்லை மட்டும் ஏற்போம் என்று, இங்கே பாஜக, சங்பரிவாரங்களும் கூறுகிறார்கள்.

தமிழ்த் தேசியம் பேசுகிற‌ சில குழுக்கள் தெலுங்கு, கன்னடம், பேசும் மக்கள் தமிழ்நாட்டில் பல தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்களை தமிழர்களாக ஏற்க மாட்டோம் என்று தமிழ்தேசியத்தில் பாகுபாடுகளை திணிக்கிறார்கள். இந்த அடையாளத்தை இரண்டு தேசியங்களுக்கும் அறிவியல் வரலாற்றுப் பார்வை இல்லை.சிங்களர்களிடம்‌ இதே பார்வை தான்‌ இருந்தது என்று கூறுகிறார் பிரபாகரன்.

 2005-ம் ஆண்டு பிரபாகரன் நிகழ்த்திய மாவீரர் நாள் உரையில் இதை தெளிவுப்படுத்துகிறார்.

“சிங்களத் தேசம் இன்னும் மகாவம்சம் மனவுலவில், அந்தப் புராண கருத்துலகில் புதைந்து போய்க் கிடக்கிறது. இலங்கைத் தீவானது தேரவாத பௌத்தத்தின் தெய்வீகக் கொடையென்றும் சிங்கள இனத்திற்கே உரித்தான சொத்துடைமை என்றும் மகாவம்சம் திரித்துவிட்ட புனைக்கதையில் சிங்கள மக்கள் இன்னும் சிக்குண்டு கிடக்கிறார்கள்.

அசைவற்றதாக இறுகிப்போன இந்தப் புராணக் கருத்து நிலையிலிருந்து சிங்களத் தேசம் விடுபடப் போவதில்லை.இந்த கருத்தியல் குருட்டுத் தனத்தால் இலங்கைத் தீவின் உண்மை வரலாற்றையும் அங்கு நிலவும் சமுதாயம் மொய்ந் நிலைகளையும் சிங்கள மக்களாலும் அவர்களது அரசியல், மதத் தலைமைகளும் தெளிவாக புரிந்து கொள்ள முடியவில்லை

 இலங்கை தீவில் வடகிழக்கு மாநிலத்தை தாயகத் தேசமாகக் கொண்டு தமிழீழ மக்கள் என்ற வரலாற்றுத் தொன்மைமிக்க ஓர் இனம் இருப்பதையும் அவர்கள் ஒரு தனித்துவ தேசமாக வாழ்ந்து வருவதையும் இவர்களுக்கு அடிப்படையான அரசியல் உரிமைகள், சுதந்திரங்கள் உள்ளன என்பதையும் சிங்களவர்கள் புரிந்துகொள்ளவே ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை”

பிரபாகரன் பேசிய ஈழவிடுதலை புராண, மத கற்பிதங்களுக்கு அப்பாற்பட்ட வரலாற்றுப் பார்வை கொண்டது என்பதை பிரபாகரன் மிகத்தெளிவாக விளக்கி இருக்கிறார்.

பிரபாகரன் பேசிய‌ ஈழவிடுதலை என்பது இங்கே பேசும் மதவாத தேசியம் மற்றும் பாசிச தமிழ்தேசியங்களுக்கு நேர் எதிரானது மாறாக வரலாற்று பார்வை கொண்டது என்பதை பிரபாகரன் தெளிவுப்படுத்துகிறார். உண்மையான பெளத்தம் சிங்கள‌ இனவெறிக்கு எதிரானது என்றும்‌ பிரபாகரன் கூறுகிறார்‌.

"ஜெயவர்த்தன (முன்னால் இலங்கை அதிபர்) உண்மையான பெளத்தராக இருந்து இருப்பார் என்றால் நான் ஆயுதம்‌ எந்த வேண்டிய அவசியம் இருக்காது” என்று சண்டே இந்திய ஆங்கில ஏட்டுக்கு (17-3-1984) அளித்த பேட்டியில் கூறுயுள்ளார்‌. சிங்கள அரசுதான்‌ எங்களுக்கு எதிரியே தவிர சிங்கள‌ மக்கள் அல்ல என்றும் பிரபாகரன் மேலும் தெளிவுபடுத்துகிறார்.

“சிங்கள மக்களின் ஆதரவை பெறவே விரும்புகிறோம். எங்களது நோக்கம் நியாயமானதும்‌ சட்ட வழிப்பட்டதாகும். ஆனால் இனவெறி பிடித்த அரசியல்வாதிகளாலும், மதவெறி பிடித்த புத்த குருமார்களாலும் தமிழர்களுக்கு எதிராக நஞ்சூட்டப்பட்ட சிங்கள மக்களை எங்களுக்கு ஆதரவாக திரட்ட‌ முடியவில்லை என்று ஒரு பேட்டியில் கூறுகிறார் (தி வீக் ,(23/03/1986)” -மதவெறியும் இனவெறியும்‌ மக்கள் விடுதலைக்கு எதிரானது என்ற பிரபாகரனின்‌ தெளிவான பார்வை இதில் பளிச்சிடுகிறது.

நெறியாளர்: பிரபாகரன் கேட்ட தமிழீழ விடுதலை என்பது சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டது என்று கூறுகிறீர்கள், இங்கே சில குழுக்கள் முன்வைக்கும் தமிழ்த்தேசியத்தை எந்த வகையில்வேறுப்படுத்துகிறீர்கள்‌?

 பொதுச்செயலாளர்: இங்கே தமிழ்த்தேசிய பேசுகிறவர்கள் உண்மையான‌ எதிரி யார்‌ என்பதை வரையறுப்பது இல்லை. எதிரிகளை திசைச் திருப்பி மடை மாற்றுகிறார்கள்.இந்தியாவின் தேசிய இனங்களின்‌ உரிமைகளை மறுத்து வைத்திருப்பதே இந்தியம் தான்‌. இந்தியா என்பது பார்ப்பன‌ பனியாக்களின் அதிகார மையம். தமிழர்களின்‌ அரசியல்‌ உரிமைகளைப் பறித்து வைத்திருப்பது இந்தியா ஒன்றியம். சமஸ்கிருத பண்பாட்டை பார்ப்பனியம் தமிழர்களிடம் திணித்து அவர்களின் மொழி, இன‌ அடையாளங்களை அடிமைப்படுத்துகிறது.

தமிழர் பெயரில், இல்லத் திருமணங்களிலோ, கோயில்களிலோ, வழிபாட்டு சடங்குகளிலோ, கொண்டாடும்‌ பண்டிகைகளிலோ, சூட்டும் பெயர்களிலோ, தமிழர் அடையாளம்‌ மறுக்கப்பட்டு பார்ப்பனிய‌ சமஸ்கிருதமே ஆட்டிப்படைக்கிறது. இந்த பார்ப்பனிய‌ பண்பாட்டை சமரசம் செய்து கொண்டு திராவிட எதிர்ப்பை முன்னிறுத்தும் தமிழ்த்தேசியம் உண்மையான மக்களின் விடுதலைக்கானது அல்ல. இந்த உண்மையான‌து தமிழர் விடுதலையை தான் அண்ணா கேட்ட திராவிட நாடும், பெரியார் கேட்ட தமிழ்நாடும் இந்த உண்மையான விடுதலைக்கு தான்.பாசிஸ்டு தமிழ்தேசியங்கள் தங்களுக்கு தாங்களே சுய பெருமை பேசி மார்தட்டிக் கொள்வதை பிரபாகரன் வெறுக்கிறார். அவர் இவ்வாறு ஒரு பேட்டியில் கூறுகிறார்,

“தமிழ்ப் பகுதிகளில் நீங்கள் ஒரு கிராமப்புற வீரனாகக் கருதப்படுகிறீர்கள். உங்கள் வாழ்நாளிலேயே ஒரு வரலாறாக உருவெடுப்பதற்கான காரணங்கள் என்ன என நினைக்கிறீர்கள்?

பிரபாகரன் :அதை மக்கள்தான் கூறவேண்டும். அடிப்படையில் அது போன்ற உணர்ச்சிகரமான பேச்சுக்களை நான் வெறுக்கிறேன். அது ஒருவரது தற்பெருமையை வளர்த்துவிடும். ஒரு விடுதலைப் போராளி அது போன்ற சுயபெருமைகளிலிருந்தும் தன்னலப் போக்கிலிருந்தும் விடுபட்டு உயரிய போராட்டத்தில் முழு மனதோடு ஆழ்ந்துவிட வேண்டும். நாங்கள் தமிழ் மக்களின் அடையாளங்கள் மட்டுமே. 5-10-1985 சண்டே இந்தியா ஆங்கில வார ஏடு”.

இங்கே தமிழ்தேசிய‌ பாசிஸ்டுகள் பேசும் பாட்டன்‌ ,முப்பாட்டன் பழங்கால பெருமைகளையும், இவர்கள் பேசுவதும் சிங்கள இன வெறியர்கள் பேசுவதும் ஒரே பாசிச பார்வைதான்‌ இதை பிரபாகரன் ஏற்கவில்லை.அவரது பார்வை நவீனத்துவம் நிறைந்தது அறிவியல் வளர்ச்சியை உள்ளடக்கியது. அவர் இவ்வாறு கூறுகிறார்,

”அசுர வேகத்தில் வளர்ந்துவரும் அறிவியலும் அதனால் எழுந்த புதிய உலகப் பார்வையும் மனிதனை ஒரு புதிய யுகத்திற்கு இன்று இட்டுச்செல்கின்றன. இந்த அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப, கால மாற்றத்திற்கு ஏற்ப, சமூகப் பண்பாட்டுப் புறநிலைகளுக்கு ஏற்பச் சிந்தனை உலகமும் மாற்றங்களைச் சந்திக்கிறது. ஆனால், சிங்களத் தேசத்திலே அதன் சிந்தனை உலகிலும் சரி, அதன் சமூக உலகிலும் சரி எதுவித மாற்றமும் நிகழவில்லை‌. (2006 மாவீரர் நாள் உரை).அதே உரையில் மேலும் கூறுகிறார்.

 அண்டவெளி ஆராய்ச்சிகள், சந்திரமண்டல ஆய்வுகள், அணுக்கருப் பரிசோதனைகளெனப் புதிய பாதையிலே பயணிக்கின்றன. மனித சமுதாயம் முன்னெப்போதும் காணாத புதிய சவால்களுக்கு முகம்கொடுத்து, இயற்கையின் எண்ணற்ற புதிர்களுக்கு விடைகள் காணவும் தீராத வியாதிகளுக்குத் தீர்வுகள் தேடவும் புதிய பயணத்திலே இறங்கியிருக்கிறது.

அரிய உயிரினங்களையும் தாவர வகைகளையுங்கூடக் காத்து, பூகோள முழுமையையும் பாதுகாக்கின்ற புனித முயற்சியிலே காலடி எடுத்து வைத்திருக்கிறது. ஆனால், சிங்களத் தேசம் மாத்திரம் நேரெதிர்த் திசையிலே, அழிவு நோக்கிய பாதையிலே சென்று கொண்டிருக்கிறது. தன்னையும் அழித்து, தமிழினத்தையும் அழித்து வருகிறது. இதனால், அழகிய இலங்கைத்தீவு இரத்தத் தீவாக மாறியிருக்கிறது”.

பெரியார் பேசிய‌ பகுத்தறிவையும், பெண் விடுதலையையும் உள்ளடக்கியதே தனது கொள்கை என்றும் பிரபாகரன் கூறுகிறார்‌.

”உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு, வளர்ச்சி விரைவுபடுத்தலையும் ஒரு சுதந்திரமான, பகுத்தறிவு பெற்ற சமூகமே. சேகுவேரா என்னை மிகவும் வசீகரித்த கொரில்லா வீரர்.”- தி வீக் ஆங்கில வார ஏடு 23-03-1986.

இப்போது தமிழ்தேசியம் பேசும் சீமான் என்ற‌ கோமாளி தன்னை முதலமைச்சராக கற்பனை செய்து கொண்டு இருக்கிறார். ஆனால் தன்னை தேடிவந்த முதலமைச்சர்‌ பதவியை உதறி தள்ளிவிட்டு விடுதலை போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நடத்தியவர் பிரபாகரன்.ராசீவ் ஜெயவர்த்தன ஒப்பந்தத்தின் படி தமிழீழ பகுதிக்கான முதலமைச்சர் பதவி பிரபாகரனுக்கு வந்தது.அதை ஏற்க‌ மறுத்தார் பிரபாகரன். ”உரிமையற்ற ஒரு மாநிலத்தில்‌ நான் முதலமைச்சராக இருக்க மாட்டேன்” என்று கூறினார்.

அந்த ஒப்பந்தத்தை ஏற்க‌ மறுத்ததன் காரணமாக தான்‌ இந்திய இராணுவத்தின் அடக்கு முறைகளை எதிர்கொண்டு கடும் வீரர்களை உயிர்ப்பலி தர வேண்டியக் சூழல் உருவானது. முதல்வர் பதவியை ஏற்க மறுத்தற்கு பிரபாகரன் கொடுத்த கடும் விலை இது.ஆனால் இங்கே முதல்வர்‌ பதவிக்காகவே தமிழ்தேசியம் பேசுகிறார்கள்.விடுதலைப்புலிகள் இயக்கம் பாலுறவு அத்துமீறல்கள் நடந்தால்‌ அதற்கு‌ மரணதண்டனை வழங்கியது.இங்கே பிரபாகரனை பேசுகிற பொது ஒழுக்கம் இல்லாத சீமான் ஈழத்தில் இருந்திருந்தால் புலிகள்‌ இயக்கம் மரண தண்டனை வழங்கி இருக்கும்‌.

தனித் தமிழ்நாடு கேட்ட பெரியார் இந்திய தேசியத்தை எதிர்த்தார். தமிழ்நாடு நீங்கலாக இந்திய தேசிய வரைப்படத்தை எரித்தார்.இந்தி திணிப்பை எதிர்த்து தேசியக் கொடி எரிப்பு போராட்டத்தை அறிவித்தார். பெரியார் போராட்டத்துக்காகவே தேசிய‌ சின்னங்கள் அவமதிப்புச் சட்டத்தை அவசரஅவசரமாக கொண்டு வந்து மூன்று ஆண்டுகள் சிறை என்று அரசு அறிவித்தது. அதையும் மீறி அரசியல் சட்டத்தை பெரியார் தொண்டர்கள் கொளுத்தினார்கள். பெரியார் இயக்கத்தின் வீர வரலாறுகளை தமிழ் கோமாளிகள் கொச்சைப்படுத்துகிறார்கள். இவர்கள் கூறுகிற திராவிடத்தில் அடங்கியுள்ள தென் மாநிலங்களும் ஒன்றியத்துக்கு அடிமைப்பட்ட மாநிலங்களாகவே இருக்கின்றன. இவர்கள் எப்படி தமிழ் தேசியத்தின் எதிரிகளாவர்கள்?

நெறியாளர்: தமிழ்தேசியம் பேசுகிறவர்கள் தமிழ்நாட்டில் நடக்கும் திராவிட ஆட்சியை மட்டுமே எதிரிகளாக சித்தரிக்கிறார்களே ?

பொதுச்செயலாளர்: தமிழ்நாட்டில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சி ஒன்று மட்டுமே ஒன்றிய ஆட்சியின்‌ மதவாத அரசியலையும்,மாநில உரிமையை பறிப்பையும், சமஸ்கிருத திணிப்பையும், கல்வி திட்ட திணிப்பையும், நிதி உரிமை பறிப்பையும் எதிர்த்து குரல் கொடுக்கிறது. சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுகிறது. ஆளுநரின் அடாவடித்தனத்தை எதிர்த்து நிற்கிறது.உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறது.தமிழ்நாட்டின் தன்னுரிமைக்காக நடத்தும் ஒரே ஆட்சி திராவிட மாடல் ஆட்சி தான்‌.இதை போலி தமிழ்தேசியர்கள் எதிர்ப்பது பச்சை துரோகம்.

நெறியாளர்: ஈழத் தமிழர்களுக்கு திராவிட இயக்கம் துரோகம் செய்து விட்டது என்று கூறுகிறார்களே ?

பொதுச்செயலாளர்: இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஈழபிரச்சினைக்காக‌ இரண்டு‌முறை பதவியை இழந்தது திமுக ஆட்சி. இந்திய அமைதிப்படை ஈழத்தில் இருந்து திரும்ப பெறச் செய்ததில் தமிழ்நாட்டு முதல்வராக இருந்த கலைஞருக்கு பெரும் பங்குண்டு. தமிழ்நாடு திரும்பிய அமைதிப் படையை வரவேற்க மறுத்தவர் கலைஞர். அதற்காக கலைஞர் மீது வழக்கு தொடர்ந்தார்கள். திரும்பி வந்த அமைதிப் படையினரை சென்னை துறைமுகத்தில் இறங்குவதற்கு அனுமதி ‌மறுத்தது கலைஞர்‌ ஆட்சி.

 தமிழீழ பிரச்சினைக்கு தீர்வு காண இந்திய பிரதமர் விபி சிங்கிடம் வலியுறுத்தி அவரது ஆலோசனையின்‌ பேரில் விடுதலைப்புலிகள் பிரதிநிதிகள் உடன்‌பேச்சு வார்த்தை நடத்தியவர்‌ கலைஞர். அடுத்த சில நாட்களிலே பத்மநாபா கொலை சென்னையில் நடந்ததால் அந்த முயற்சிகள்‌ தடைபட்டன.இந்திய‌ மற்றும்‌ சர்வதேச நாடுகளுடன் இணைந்து திட்டமிட்டு நடத்தப்பட்டது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை.

இதில் அதிகாரம் ஏதும் இல்லாமல் தமிழ்நாட்டு முதல்வராக இருந்த கலைஞர் எடுத்த முயற்சிகள் பயன்தராமல் போய்விட்டதே உண்மை வரலாறு. திராவிடர் இயக்கத்திற்கும் நீண்ட நெடிய‌ வரலாறு உண்டு. 1950 முதல் ஈழ தமிழர்களுக்காக குரல் கொடுத்து வந்த திமுக. கடல்‌ தண்ணீர்‌ உப்பாக இருப்பதற்கு காரணம் ஈழத் தமிழர்களின்‌ கண்ணீர் தான் என்று எழுதினார் அண்ணா. ஈழ தந்தை செல்வா பெரியார்‌ அண்ணா கலைஞரிடம் நெருக்கமாக நட்பு‌க் கொண்டிருந்தார். ஈழத் தந்தை செல்வா மறைவிற்குப் இறுதி வணக்கம் செலுத்த‌ முதல்வராக இருந்த கலைஞர்‌ தமிழ்நாட்டு அரசு‌ சார்பாக ஒரு குழுவை அனுப்பி வைத்தார்.

இப்படி ஈழத் தமிழர்களுக்கும் திராவிட இயக்கங்களுக்கு நீண்ட‌ வரலாறு உண்டு. இறுதிக்கட்ட போரில் நாமும் கலைஞரை கடுமையாக விமர்சித்தது உண்டு ஆனாலும் அதை இப்போது மறு‌பரிசீலனை செய்ய‌ வேண்டி இருக்கிறது.