வாங்க வரலாறு பேசுவோம்...பரப்புரைப் பயணம்

இப்போதைய பேசுபொருளாய் எதிர்மறையாய் உருவாக்கப்பட்டிருக்கிற அரசியல் சூழலை, நேர்மறையாய் எடுத்துச் செல்லும் நோக்கத்தோடு திராவிடர் விடுதலைக் கழகம் தமிழ்நாட்டின் நான்கு முனைகளில் இருந்து பரப்புரை பயணம் நடத்துகிறது. நிறைவாக மயிலாடுதுறையில் மாநாடு நடைபெறவுள்ளது.

ஏனென்றால், பெரியார் மறைந்து அரை நூற்றாண்டுகளைக் கடந்துவிட்டோம். இப்போதும் தமிழ்நாட்டின் விவாதப் பொருள் பெரியாரை சுற்றியே இருக்கிறது. தமிழ்நாட்டின் எல்லா போராட்டக் களங்களிலும் பெரியார் இடம்பெறுகிறார், அவரது கருத்துக்கள் பேசப்படுகின்றன. தமிழ்நாட்டை ஆதிக்கம் செலுத்தத் துடிக்கும் இந்தித் திணிப்புக்கு எதிராக அரண்போல நிற்கிறார் பெரியார். மதவாத சக்திகள் தமிழ்நாட்டை வன்முறைக் காடாக்க முயற்சிக்கும் களங்களில் சமத்துவ நெருப்பாக அவர்களின் எண்ணத்தை சுட்டுப் பொசுக்குகிறார் பெரியார். பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களைக் கல்வியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று துடிக்கும் வருணாசிரமாவதிகளுக்கு தமிழ்நாட்டில் மரண அடி கொடுத்து எதிர்த்து நிற்கிறது பெரியார் விதைத்துவிட்டுச் சென்ற கல்வி குறித்தான விழிப்புணர்வு சிந்தனைகள்.

பெரியாரை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியாத ஆரியக் கூட்டத்திற்குக் கூலிப்படை போல கிடைத்திருக்கிறார்கள் சிலர். அவர்களை வைத்து ”தமிழைக் கொச்சைப்படுத்தி விட்டார் பெரியார், அவர் ஒன்றும் ஜாதியை எதிர்க்கவில்லை, பெரியார் தமிழர் இல்லை என்பதால் திராவிடம் என்ற மாயையைத் திணித்துவிட்டார், திராவிடம்தான் தமிழ்நாட்டை நாசப்படுத்திவிட்டது, பார்ப்பனர்கள் தமிழர்களே, பெரியார் பெண்ணுரிமையைப் பேசவில்லை, மாறாக பெண்களை இழிவுபடுத்தியதுதான் அவர் செய்த வேலை” என்றெல்லாம் பெரியாருக்கு எதிரான அவதூறைக் கட்டமைக்க முயன்று கொண்டிருக்கிறது அந்த கூட்டம். அதற்கு தமிழ்தேசியம் என்று அவர்களே பெயரும் சூட்டிக்கொண்டனர்.

ஒருகாலத்தில் பார்ப்பனர்களே நேரடியாக செய்துவந்த இத்தகைய அவதூறுகளை, வெறுப்புப் பிரச்சாரத்தை இப்போது தமிழ்தேசியத்தின் பெயரால் செய்யும்போது, பெரியார் பிம்பத்தை உடைத்துவிடலாம் என்பது அவர்களின் மனக்கணக்கு. ஆனால் வாழ்ந்த காலத்திலும் சரி, மறைந்துவிட்ட பின்பும் சரி எதிர்ப்புப் பிரச்சாரத்தால்தான் பெரியார் வேகமாக வளர்ந்திருக்கிறார். இப்போது பெரியார் குறித்து சீமான், மணியரசன் போன்றோர் வைக்கும் விமர்சனங்களை வாய்ப்பாக வைத்துக் கொண்டு, ”பெரியார் இன்னும் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார்?” என்ற தலைப்பில் வரலாற்றை எடுத்துச் சொல்ல தமிழ்நாட்டின் ஐந்து முனைகளில் இருந்து புறப்படுகிறது திராவிடர் விடுதலைக் கழகத்தின் பரப்புரை குழுக்கள்.

பெரியார் பற்றிய வரலாற்றை எடுத்துச் சொல்வது மட்டுமின்றி, பெரியாரை விமர்சித்துக்கொண்டே திரைமறைவில் தமிழர்- தமிழ்நாட்டின் கல்வி- வேலைவாய்ப்பு- சமூக நீதி உரிமைகளுக்கு எதிராக ஒன்றிய அரசு செய்து கொண்டிருக்கும் நாசகர முயற்சிகளையும், அதற்குத் துணைபோகும் சங்கிகளின் நண்பர்களின் உண்மை முகத்தையும் தோலுரித்துக் காட்ட புறப்படுகிறது கழகம்.

துண்டறிக்கைகள், பெரியார் பற்றிய இளைஞர்களுக்கு எளிதாக புரிந்து கொள்ளக் கூடிய கழகப் புத்தகங்கள், பறை இசை, நாடகங்கள் போன்ற கலை நிகழ்ச்சிகள் வழியாக பரப்புரைப் பயணத்தின் நோக்கத்தை மக்கள் மத்தியில் எடுத்த செல்ல உள்ளது. ஒவ்வொரு நாளும் காலை முதல் மாலை வரை ஒரு மாவட்டத்தில் 4 கூட்டங்கள் தொடர்ச்சியாக ஐந்து முனைகளில் நடக்கும்.

சென்னை, விழுப்புரம், சேலம், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 500 பரப்புரை கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 15.3.2025 அன்று தொடங்கி 22.3.2025 மயிலாடுதுறையில் நிறைவு பொதுக்கூட்டமாக நடைபெற உள்ளது. கழகத் தோழர்களும், ஆதரவாளர்களும் பெருந்திரளாகப் பங்கேற்று பரப்புரைப் பயணத்தின் நோக்கத்தை வெற்றி பெறச் செய்வீர்...

ஏன் இந்த பரப்புரைப் பயணம்?

தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கி சமுதாய இயக்கமாக தமிழர் நலனுக்காக அரை நூற்றாண்டுக்கு மேலாக ஓயாது உழைத்தவர் பெரியார்.

ஜாதிய ஏற்றத்தாழ்வு இல்லாத, பாலினப் பாகுபாடு இல்லாத ஒரு சமத்துவ சமூகம் மலர வேண்டும் என்று தன் வாழ்நாளை ஒப்படைத்துக்கொண்டு பாடுபட்டவர் பெரியார்.

மக்கள் ஆதரிப்பதைப் பேசி, அவர்களின் நன்மதிப்பை பெற வேண்டும் என்ற எண்ணத்திற்கு மாறாக மக்கள் பின்பற்றிய மூடத்தனங்களை மிகக் கடுமையாக எதிர்த்தவர் பெரியார்.

தன் மீது கல், முட்டை, செருப்பு போன்றவை வீசப்பட்டபோது கூட ஓடி ஒளிந்து கொள்ளாமல், தனக்கு சரியெனப்பட்டதை வெளிப்படையாகப் பேசியவர் பெரியார்.

குடலிறக்க வலியோடும், மூத்திரச் சட்டியோடும் வாழ்நாளின் கடைசிவரை தமிழ் மக்களின் தன்மானத்திற்காகப் பேசியவர் பெரியார்.

கல்வி எட்டாக்கனியாக இருந்த தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டி ஒரு நூற்றாண்டில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு உருவாகக் காரணம் பெரியார்.

எல்லாவற்றுக்கும் மேலாக சுயமரியாதைச் சிந்தனையைத் தமிழர்களுக்குக் கடத்தியவர் தந்தை பெரியார்.

ஆனால் இன்றைக்குப் பெரியாரைக் கொச்சைப்படுத்த ஆரியத்தின் கைக்கூலிகளாக ஒரு கூட்டம் தமிழ்தேசியத்தின் பெயரால் கிளம்பியிருக்கிறது.

ஜாதி இழிவைத் தமிழர்கள் மீது திணித்தப் பார்ப்பனர்களை சமத்துவம் போதித்தவர்கள் என்று நா கூசாமல் பேசுகிறது அந்தக் கூட்டம்.

புலவர்களிடையே முடங்கிக் கிடந்த திருக்குறளைப் பட்டிதொட்டியெங்கும் பரப்பியப் பெரியாரைப் பார்த்து திருக்குறளை இழிவுபடுத்தியவர் என்கிறது அந்த கூட்டம்.

பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டத்தை தமிழ்நாடு மட்டும் விட்டொழித்ததற்கு காரணமான பெரியாரைப் பார்த்து ஜாதியவாதி எனப் பழிக்கிறது அந்த கூட்டம்.

பெரியார் மீதும் திராவிட இயக்கத்தின் மீதும் ஆரியப் பகைவர்கள் வைத்த அதே வசைச்சொற்களைத்தான் இன்று தமிழ் தேசியத்தின் பெயராலும் சிலரால் வைக்கப்படுகிறது.

அவர்கள் முன்வைப்பது தமிழ் தேசியமும் அல்ல; தமிழர்கள் நலனுக்கானதும் அல்ல; திராவிடத்திற்கு நேரெதிரான ஆரியத்திற்குத் துணைபோகும் சந்தர்ப்பவாதம் அவை.

நீட்டைத் திணித்து, புதிய கல்விக் கொள்கையைத் திணித்து, மும்மொழிக் கொள்கையைத் திணித்து தமிழர்களின் கல்வி உரிமையைப் பறிப்போரைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை.

இந்தித் திணிப்பால் ஏற்படப்போகும் தமிழர்களின் தனித்துவமான பண்பாட்டு அழிப்பைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை.

ஜிஎஸ்டியைத் திணித்து, மாநில உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்துக் கொண்டிருக்கும் பாஜகவின் நாசகர செயலைப்பற்றி அவர்கள் வாய் திறக்க மாட்டார்கள்.

தமிழ்நாடு என்றொரு மாநிலத்தையே இல்லாமல் செய்யத் துடிக்கும் ஒன்றிய பாஜக அரசின் சதித் திட்டங்களைப் பற்றிப் பேச மறுப்பார்கள் அவர்கள்.

வட மாநிலங்களில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து தென்மாநிலங்களின் எண்ணிக்கையைக் குறைத்து ஒடுக்க நினைக்கும் ஒன்றிய அரசின் முயற்சி குறித்து அவர்கள் வாய் திறக்கவில்லை.

ஆனால் ஒன்றிய ஆட்சியாளர்களை நோக்கி உரிமைக்குரல் எழுப்பினால், அவர்களின் ஏவல் நாய்கள் போல இங்கே திராவிடத்திற்கு எதிராக கூச்சலிடுவதுதான் இவர்களின் வாடிக்கை

அதனால் சமீப காலமாக பெரியாரைக் கடித்துக் குதறி, அவர் மீது தமிழர்கள் கொண்டிருக்கிற பிம்பத்தை உடைத்துவிடலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள்

இந்துத்துவ மதவெறியை எதிர்த்து தமிழ்நாட்டின் நலன்களுக்கு அரணாக நிற்கும் திராவிட இயக்கங்கள் தமிழர்களுக்கு எதிரானதாம்!

தமிழினத் தலைவர் பெரியாரைத் தூற்றிப்பேசி, அம்பலப்பட்டு நிற்கும் இந்த போலித் தமிழ்த்தேசிய கும்பலின் முகத்திரையையும் அவர்கள் ஆரிய முதலாளிகளையும் தோலுரிக்கவே இந்த பயணம்.

பெரியாரும் திராவிடமும் இந்த மக்களுக்கு செய்த நன்மைகள் என்ன? ஆரியம் செய்துகொண்டிருக்கும் அழிவுகள் என்ன என்பதை இந்த பரப்புரையின் வாயிலாக விளக்குகிறது திராவிடர் விடுதலைக் கழகம்!

அனைவரும் வாரீர்!.... ஆதரவு தாரீர்!!...