தந்தை பெரியாரை அவமதிக்கும் சீமானைக் கண்டித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை 5.1.2025 அன்று மாலை சென்னையில் சைதைத் தேரடி தெருவில் பொதுக்கூட்டம் நடத்தியது. அனைத்துப் பெரியார் இயக்கத் தோழர்களும் பொதுக்கூட்டத்துக்கு திரண்டு வந்திருந்தனர். ஏராளமான இளைஞர்கள் பெரியார் படம் போட்ட டீ சட்டையுடன் உணர்வுபூர்வமாக பங்கேற்றனர். பொதுக்கூட்டத்தில் பேசிய ஒவ்வொருவரின் உரையும் அழுத்தமானதாகவும், உணர்வுபூர்வமாகவும் இருந்தது. சீமான் என்ற ஏமாற்றுப் பேர்வழி நாக்கில் நரம்பின்றி சாக்கடை மொழியில் பெரியாரைப் பேசுவதை இனியும் அனுமதிக்க முடியாது என்று எச்சரிப்பதாக இருந்தது இக்கூட்டம். கூட்டம் கருங்கடலில் மூழ்கி இருந்த நிலையில் ‘சீமான் ரசிகர்கள்’ கூட்டத்துக்கு ஆள் வரவில்லை என்று பொய்யாக வெளியிட்ட ‘ட்வீட்’டுகளை மக்கள் மத்தியில் படித்துக்காட்டிய போது கூட்டத்தினர் கைத்தட்டி எள்ளி நகையாடினர்.

கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, தலைமைக்குழு உறுப்பினர் அன்பு தனசேகர் உள்ளிட்ட கழகத் தோழர்களும், திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் அருள்மொழி, துணைப் பொதுச் செயலாளர் மதிவதனி, உள்ளிட்ட அனைத்து பெரியாரிஸ்டுகள், இணையதள செயற்பாட்டாளர்கள் என்று ஏராளமான தோழர்கள் திரண்டிருந்த காட்சி உணர்ச்சிமயமாக இருந்தது.

சிற்பி செல்வராஜ் தலைமையில் நடந்தக் கூட்டத்தில் புதுவை தீனா, இரா.உமா, பசும்பொன் பாண்டியன், இந்திரகுமார் தேரடி, மைனர் வீரமணி ஆகியோர் உரையாற்றினர்.

புதுவை தீனா தனது உரையில் புதுவை சிறையில் சீமான் இருந்த போது சிறைக்குள் அவரின் ‘ஒழுக்கக்கேடுகளை’ விளக்கிப் பேசினார். அப்போது காவல்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற சிறை அதிகாரி, சீமான் ஒவ்வொரு நாளும் எப்படி ஒழுக்கக்கேடராக செயல்பட்டார் என்பதை தன்னிடம் விளக்கியதை சுட்டிக்காட்டினார்.

கருஞ்சட்டைத் தமிழர் உமா பேசுகையில், அண்மையில் புத்தகக் காட்சியில் ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ பதிப்பகம் நடத்திய விழாவில் பேசிய சீமான், பெரியாரையும், கலைஞரையும் கீழ்த்தரமாகப் பேசியதை வன்மையாகக் கண்டித்தார். அந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் புறக்கணிக்கப்பட்டு புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் புதுவை மாநில தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டது. கலைஞரை மிக மோசமான மொழிகளில் சீமான் பேசியுள்ளார். புத்தகக் கண்காட்சிக்கு கலைஞர் முதல்வராக இருந்தபோது ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும் அரசின் நிதிப் பங்களிப்போடு தான் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. இலக்கியம், நூல் திறனாய்வு பற்றி பேசப்பட வேண்டிய மேடையை தி.மு.க. அரசியல் எதிர்ப்பு மேடையாக்கினார் சீமான். கடும் எதிர்ப்புகள் எழுந்தன. டிஸ்கவரி பதிப்பக உரிமையாளர் வேடியப்பன், முதலில் பாடப்பட்டது புதுவை அரசு தமிழ்த்தாய் வாழ்த்து என்பது எனக்கு தெரியாது என்றும் அவர் அரசியல் பேசியதை குறுக்கிட்டு தடுக்க முடியாத நிலை ஏற்பட்டது என்றும் அறிக்கை விடுத்துள்ளார். பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் இந்த அறிக்கையைக் கடுமையாக கண்டித்தார் உமா. ’டிஸ்கவரி புக் பேலஸ்’ புத்தகக் கண்காட்சியில் இடம்பெற கண்காட்சி நடத்தும் பபாசி அமைப்புத் தடை விதிக்க வேண்டும். நடந்த நிகழ்வுக்கு மன்னிப்புக் கோர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அ.தி.ம.மு.க. தலைவர் பசும்பொன் பாண்டியன் பேசுகையில் ஈழ விடுதலைப் போராட்டத்துக்காக தான் கைது செய்யப்பட்டதை நினைவு கூர்ந்தார். திராவிடத்தை ஆதரித்த அயோத்திதாசப் பண்டிதரை சீமான் கண்டிப்பாரா? மாட்டார். பெரியாரைப் பிறமொழிக்காரர் என்று பேசும் சீமான், அம்பேத்கரும் பிறமொழிக்காரர் என்று பேசுவாரா? பேச மாட்டார். இப்படிக் கண்டித்தால் தமிழ்நாட்டில் மேடைப் போட முடியாது என்று அவருக்குத் தெரியும். மருத்துவர் ராமதாசைக் கண்டித்து அவர் பேச மாட்டார். வலிமையாக உள்ள ஜாதித் தலைவர்களை கண்டிக்காமல் கலைஞர் குடும்பம் சிறுபான்மைச் சமூகத்தை சார்ந்த குடும்பம் என்பதால் அவர் எதிர்ப்பு வராது என்ற திமிரில் பேசுகிறார். “சீமானே.. நாங்கள் இருக்கிறோம், அந்தத் திமிரை அடக்குவதற்கு’ என்று பலத்தக் கரவொலிக்கு இடையே எச்சரிக்கை செய்தார்.

தொடர்ந்து இந்திரகுமார் தேரடி கருத்துச் செறிவான உரை நிகழ்த்தினார். பெரியாரைப் பற்றிய சீமானின் பொய்யுரைகளை ஆதாரத்தோடு மறுத்தார். ‘யூ டூ புருட்டஸ்’ யூடிபூப் நடத்திவரும் மைனர், சீமான் கட்சியினர் நடத்தும் நிறுவனங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலுறவு வன்முறைகளை ஆதாரங்களுடன் விளக்கினார். பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளித்தும் காவல்துறை குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே செயல்படுவதை வீடியோ ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார்.

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேசினார், விஜய் கட்சியினால் தனது வாக்குகள் சரிந்துவிட்டதால் மீண்டும் அரசியலில் தன்னை விவாதப் பொருளாக மாற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு பேசிவருகிறார். அவரது சுயவிளம்பரமே இதற்கான நோக்கம் என்பதைத் தெரிந்தே பேசுகிறோம். இத்தகைய கீழ்த்தரமான பேச்சுகளால் தனது வாக்குச்சரிவை அவரால் ஒருபோதும் நிமிர்த்திவிட முடியாது என்றார். ஈழப் போராட்டம் தீவிரமான 1980, 1990 களில் சீமான் எங்கே போனார்? களத்தில் நின்றாரா? சீமான் பேசும் தமிழ்த்தேசியம் தன்னாட்சியா? தன்னுரிமையா? தனித்தமிழ்நாடா? எப்போதாவது இந்திய தேசியத்தை இவர் எதிர்த்துப் பேசியது உண்டா? தனித்தமிழ்நாடு கேட்ட பெரியார், தமிழ்நாடு நீங்கலாக இந்திய படத்தை எரித்தார். உன்னால் முடியுமா? என்று சுப.வீ கேட்ட போது கைத்தட்டலால் அரங்கம் அதிர்ந்தது.

சென்னையில் வண்ணாரப்பேட்டையில் பாரதியார் பிறந்தநாளை சீமான் கொண்டாடியதன் பின்னால் உள்ள அரசியலையும் – முரண்பாடுகளையும் அம்பலப்படுத்தினார் சுப.வீ.

நாங்கள் எப்போதும் நினைவு நாளை மட்டுமே நினைவில் போற்றுவோம் என்று கூறும் நாம் தமிழர் கட்சி வழமைக்கு மாறாக பாரதியின் பிறந்தநாளைக் கொண்டாடியது ஏன்? அதைப் பெரியார் மீது வசைபாடும் கூட்டமாக மாற்றியது ஏன்? பாரதியார் பிறந்தநாள் டிசம்பர் 11. அந்த நாளில் கூட்டம் நடத்தாமல் டிசம்பர் 20இல் நடத்தியது ஏன்? இதற்கு பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது. டிசம்பர் 16ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை இழிவுப்படுத்திப் பேசினார். நாடு முழுவதும் கொந்தளித்தது. அந்த நேரத்தில் அமித்ஷாவைக் காப்பாற்ற அவர் அம்பேத்கரை இழிவுப்படுத்தி பேசியதற்கு எதிரானப் போராட்டங்களை திசை திருப்ப பெரியார் எதிர்ப்பை முன்வைக்கவே பாரதி பிறந்தநாள் கூட்டத்தை நடத்தியுள்ளார் சீமான்.

சரி; எப்போது பாரதி மீது சீமானுக்குப் பற்று வந்தது? அவர் கட்சி தொடங்கிய போது வெளியிட்ட அதிகாரப்பூர்வமான மலரில் அக்கட்சி பாராட்டி ஏற்கும் தலைவர்கள் படம் இடம்பெற்றுள்ளன. முதலில் இடம்பெற்றுள்ள படம் பெரியார் படம். 64 பேரில் பாரதி படம் இடம்பெறவில்லை. பெரியாரை ஏற்றுக்கொண்ட சீமான் - பெரியாரை மிகக் கேவலமாக பேசுகிறார். பாரதியை அங்கீகரிக்காதவர் பாரதிக்கு விழா எடுக்கிறார்.

சரி, ”நீங்கள் பேசும் பாரதி தமிழ்த்தேசியம் பேசியவரா? பாரத்தாய்க்கு வாழ்த்துப் பாடியவர். அவர்தான் உங்கள் தமிழ்த்தேசியத்தின் வழிகாட்டியா? தமிழ் மொழிக் குறித்து பாரதி பாடியது 5 பாடல்கள் மட்டுமே. அவர் எழுதிய பக்திப் பாடல்கள் 23, அதில் 21 பாடல்கள் இந்துமதம் சார்ந்தது. அவரது உரைநடையில் சமஸ்கிருதம் ஒன்று மட்டுமே தெய்வ மொழி என்கிறார். சீமான் இதை ஏற்றுக்கொள்கிறாரா?” என்று கேட்டார்.

சீமான் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியக் கருத்துகளைத் தலைப்பு வாரியாகத் தொகுத்து காணொளிக் காட்சி ஒன்று திரையிடப்பட்டது. சீமானின் முகத்திரையைக் கிழித்துக்காட்டியது அந்த காணொளி.

அடர்த்தியாக திரும்பும் இடமெல்லாம் கருஞ்சட்டையுடன் – பெரியார் படம் போட்ட சட்டையுடன் இளைஞர்கள் திரண்டிருந்தக் காட்சி, பெரியாரை இளைய சமுதாயம் கையில் எடுத்துவிட்டதை உறுதிப்படுத்தியது.

- பெ.மு. செய்தியாளர்