தமிழகத்தில் ஒரு கலாசாரம் நிலவுகிறது. இங்கு அ.தி.மு.க. அல்லது தி.மு.க இரண்டில் எதாவது ஒரு கட்சி ஆட்சிக்கு வருகின்றது. இதில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முந்தைய ஆட்சியில் போட்ட அனைத்து திட்டங்களையும் அடியோடு மாற்றுகின்றன. தி.மு.க. ஆட்சியில் அவர்கள் அடித்த கொள்ளை போக எதாவது உருப்படியாக செய்த காரியம் எதுவென்றால் அண்ணா நூற்றாண்டு நூலகம் கொண்டு வந்தது தான். இன்றுள்ள நவீன உலகத்திற்கு ஏற்றவாறு வீடியோ லைப்ரரி, குழந்தைகள் பிரிவு, போட்டி தேர்வு பிரிவு, கண் பார்வை அற்றவர்களுக்கான பிரிவு என பல நவீன வசதிகளோடு இந்த நூலகம் அமைந்துள்ளது. சென்னையில் பழமையான நூலகமான கன்னிமாராவை விட பல மடங்கு நவீன வசதிகளைக் கொண்டு அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது.
இந்த நூலகத்தை உருக்குலையச் செய்யும் விதமாக இந்த அரசு இந்த நூலகத்தை கூவத்தை ஒட்டியுள்ள ஏதோ ஒரு இடத்திற்கு (டி.பி.ஐ. வளாகம்) மாற்றுவதாக கூறுகிறது. நூலகம் இருக்கும் இடத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றப்போவதாகவும் கூறுகிறது. நூலகத்துக்கென்று பிரத்தியோகமாகக் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தை மருத்துவமனையாக அதுவும் குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றுவது என்பது எப்படி சரியாக இருக்கும்? எழும்பூரில் உள்ள தாய் சேய் மருத்துவமனையில் நாய்கள் புகுந்து குழந்தைகளை தூக்கிச் செல்லும் அளவிற்கு அது பாதுகாப்பற்றதாகவும், சுகாதாரம் அற்றதாகவும் உள்ளது. அந்த மருத்துவமனைக்கு கூடுதல் நிதி ஒதுக்கினாலே உழைக்கும் ஏழை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதை விடுத்து கருணாநிதியின் பெயர் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக நூலகத்தையே இழுத்து மூடுவது என்பது இன்றைய தமிழக முதல்வருக்கு உள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்.
அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டதில், புத்தகங்கள் வாங்கியதில் பல்வேறு முறைகேடுகளை தி.மு.க. அரசு அரங்கேற்றி உள்ளது என கடந்த ஒரு வருட காலமாகவே தேனி மாவட்ட நூலக கண்காணிப்பாளர் திரு அறிவரசு பாண்டியன் அவர்கள் புகார் தெரிவித்தும், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தும் போராடி வருகிறார். இந்த ஊழலை வெளிக்கொண்டு வந்ததிற்காகவே சென்ற அரசால் பழிவாங்கப்பட்டு இன்னும் தற்காலிக பணிநீக்கதில் இருக்கிறார். அவரது புகாரின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்து ஊழலில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் மீதும், அதிகாரிகள் மீதும் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் ஊழல் செய்த அதிகாரிகளை தண்டிப்பதை விட்டு விட்டு, ஏழை, எளிய மாணவர்கள் கல்வி ஒளி பெற வாய்ப்பாக உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இட மாற்றுவது என்பதன் பெயரில் நூலகத்தை உருத் தெரியாமல் அழிக்கப்பார்க்கிறது ஆளும் அரசு.
இன்று தமிழகம் முழுவதும் (மாவட்ட நூலகங்கள் உட்பட) உள்ள நூலகங்கள் அனைத்தும் உரிய நிதி ஒதுக்கப்படாமலும், உரிய முறையில் பராமரிக்கப்படாமலும், பணியாளர்களின் அலட்சியப் போக்காலும் தள்ளாடுகின்றன. குறிப்பாக கிராமப்புற நூலகங்களை திறப்பது கூட கிடையாது. அறிவு வளர்ச்சிக்கான இது போன்ற வாயில்களை அரசு திட்டமிட்டே அடைத்து வருகிறது. அதற்குப் பதிலாக டாஸ்மாக் கடைகளை ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் ஒரு முறை இரட்டிப்பாக அதிகரித்து வருகிறது. தற்போது புதிதாக வசதி படைத்தவர்களுக்கு தனி டாஸ்மாக் கடைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆட்சியாளர்களின் இது போன்ற தான்தோன்றித்தனமான போக்குகளை முறியடிக்க மாணவர்களும் இளைஞர்களும் களம் இறங்க வேண்டும்.
தொடர்பிற்கு: கு.கதிரேசன்
செல்: 9843464246