(23.06.2024 அன்று கொளத்தூரில் நடைபெற்ற கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் 77வது பிறந்தநாள் விழாவில் மூத்த பத்திரிகையாளர் சிவசுப்ரமணியம் ஆற்றிய வாழ்த்துரை.)
உலகில் எவ்வளவு பெரிய பல்கலைக்கழகமாகக் கூட இருக்கலாம். அங்கு சென்றால் விளையாட்டுக்கு என்று ஒரு துறை, இதழியலுக்கு ஒரு துறை, அறிவியலுக்கு ஒரு துறை, அறிவியலுக்குள் இயற்பியல், வேதியியல் என்று தனித்தனியாக பல்வேறு துறைகள் இருக்கும். ஆனால் ஒட்டுமொத்த துறையும் ஒரே இடத்தில் இருக்கிறது என்றால் அது உக்கம் பருத்திக்காடுதான்.
இசை, மொழி, இலக்கியம், தமிழ்த்தேசியம், வரலாறு, திராவிடம், ஆரியம் என எதைப்பற்றிக் கேட்டாலும், அதுகுறித்து நீண்ட நெடிய ஒரு விளக்கத்தினை தோழர் கொளத்தூர் மணியிடம் இருந்து பெற முடியும். தந்தை பெரியார் தனது வாழ்நாளில் அவரது சிந்தனைகளை மிகப்பெரிய ஆவணமாக எழுதி வெளியிட்டு இருக்கிறார். அதில் இருப்பதைக் கடந்து மேலும் பல தகவல்களை உள்வாங்கியிருக்கும் அறிவுப் பெட்டகமாக திகழ்கிறார் தோழர் கொளத்தூர் மணி. அவர் வழியாகவே அதை ஒரு நூலாக எழுத முயற்சித்தும் அது நிறைவேறவில்லை. இருந்தாலும் தோழர் கொளத்தூர் மணியின் வரலாறை நான் எழுதலாம் என்றிருக்கிறேன். என்னை பத்திரிகை துறையில் ஒரு குறிப்பிட்ட நபராக மாற்றியது தந்தை பெரியாரின் சிந்தனைகள்தான். அதற்கு என்னை தூக்கிவிட்டு, பின்புலமாக இருப்பது தோழர் கொளத்தூர் மணி மட்டும்தான். 1992ஆம் ஆண்டு ஈரோட்டில் உள்ள தோழர் இரத்தினசாமியின் உழவு இயந்திர அங்காடியில்தான் முதல்முறையாக தோழர் கொளத்தூர் மணி அவர்களை சந்தித்தேன். எனக்கு அப்போது 21 வயது இருக்கும். எல்லோரிடமும் இயல்பாக பேசியதைப் போலவே என்னிடமும் பேசினார்.
அப்போது வீரப்பனை பார்க்கலாம் என்றிருக்கிறேன் என்றேன். அதற்கு அவர் அது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. அவரைப் பார்ப்பதற்கு உறுதியாக இருந்தால் இரண்டு ஆண்டு சிறையில் இருக்க வேண்டும் என்றார். இதை நான் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. உடனடியாக சரி என்று கூறினேன். ஏனென்றால் அண்ணனுக்கு யோசித்து சொல்கிறேன் என்றால் பிடிக்காது. மற்றொன்றையும் அவர் சொன்னார். நீங்கள் மட்டும் உள்ளே சென்றால் பரவாயில்லை, நானும் உள்ளே செல்ல வேண்டிய நிலை வரும் என்றார்.
இதற்கு பயந்தால் வீரப்பன் யார்? அவரின் நோக்கம் என்ன? என்பதைப் பற்றி எதுவும் தெரியாமல் போய்விடும். அதனால் இரண்டு பேரும் செல்ல தயாராகிவிட்டால் சென்று பார்த்து விடுவோம் என்றார் அண்ணன் கொளத்தூர் மணி. அதற்குப் பிறகு நாங்கள் இருவரும் இரண்டு மாத காலம் சந்தித்து பல்வேறு விசயங்களை பேசி பரிமாறிக் கொண்டோம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கர்னல் கிட்டு ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஈழத்துக்கு வரும் போது இந்தியக் கடற்படை அவரை கப்பலோடு வைத்து கொன்றுவிடுகிறது. இந்த நிகழ்வு நடந்து ஒரு சில நாட்களுக்கு பிறகு ஈரோடு இரத்தினசாமியின் துனைவியார் பிரேமா அவர்கள், “மணி அண்ணன் கேமரா, டேப் ரெக்கார்டர் இவையெல்லாம் எடுத்துக்கொண்டு உடனடியாக மேட்டூர் படிப்பகம் வரச்சொன்னார்” என்று சொன்னார். உடனே நானும் மேட்டூர் படிப்பகம் விரைந்தேன். நான் கூட கிட்டு தொடர்பான செய்தியாக இருக்கும் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் அது வீரப்பன் தொடர்பான செய்திதான். இன்று வருவதாகச் சொன்ன நபர் வரவில்லை. நாளை மறுநாள் வாங்க, ஏதோ பிரச்சனை போல் உள்ளது என்று சொன்னார். நானும் அவர் சொன்ன நாளில் மீண்டும் வந்தேன். தனது மோட்டார் சைக்கிளில் என்னை அழைத்துச் என்று அந்த நபரிடம் அறிமுகப்படுத்தினார். பின்னர் மூன்று நான்கு மணிநேர பயணத்திற்கு பின்னர் வீரப்பனை சந்தித்தேன்.
வீரப்பனை சந்தித்தவுடன் அவர் சொன்னார், கொளத்தூர் மணி கிட்ட சொல்லி இருக்கேன், அவர் ஒரு நல்ல ஆளாகத்தான் அனுப்புவார் என்று சின்னப்பொன்னான் சொன்னார். அண்ணன் சொன்ன ஆளு நல்ல ஆளாகத்தான் இருப்பார் என்ற நம்பிக்கையில் நான் உங்களை சந்திக்கிறேன் என்றார் வீரப்பன். பின்னர் அண்ணனை நலம் விசாரித்துவிட்டு நான் அவர் பார்த்ததில்லை, என்னை மாதிரியே அவரும் பலரைப் பஞ்சாயத்துகளை நடத்தி வருகிறார். அவரும் ஒரு மரியாதைக்குரிய நபராக இருக்கிறார் என்பது தெரியும் என்றார். அந்த நம்பிக்கை வீரப்பனோடு 8 ஆண்டுகள் நெருங்கியத் தொடர்பில் இருந்தது. பெரும்பாலும் அவர் என்னிடம் எதையும் மறைத்ததில்லை. காரணம் நான் மணி அண்ணனால் அறிமுகப்படுத்தப்பட்டவன் என்பதால்.
2000-இல் எதிர்பாராதவிதமாக கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திவிடுகிறார். இந்த நேரத்தில் உளவியல் ரீதியாக பல பேருடன் உரையாடும் போது இந்த பிரச்சனைக்கு அண்ணன் கொளத்தூர் மணிதான் சரியாக இருப்பார் என்று புரிந்தது. ஏனென்றால் இரு மாநில அரசுகள் சம்மந்தப்பட்டிருந்தது. கலைஞர் என்பவர் ஆயிரம் ஐஏஎஸ்களுக்கு நிகரானவர். கர்நாடகாவின் எஸ்.எம்.கிருஷ்ணாவும் சளைத்தவர் அல்ல. இங்கு வீரப்பன், 130-140 கொலைகளை செய்துவிட்டு இரண்டு மாநில ஐஏஎஸ் – ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அல்வா கொடுத்துக் கொண்டிருந்தார். இரண்டு மாநில அரசுகளும் எங்களை நம்பி நக்கீரன் குழுவின் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நான் அண்ணனை சந்தித்தேன். அண்ணா இது எங்களால் முடியாதது. இரண்டு பக்கமும் மிகப்பெரிய அரசியல் நடந்துவருகிறது.
இதற்கிடையில் இனக் கலவரம் நடந்துவருகிறது. கிட்டத்தட்ட 45-50 நாட்களுக்கு மேலாக தமிழ்நாடு – வட இந்தியாவுக்கான போக்குவரத்து கர்நாடகா வழியாக இல்லை. கர்நாடகாவில் கொள்முதல் செய்யப்பட்ட பல இலட்ச ரூபாய் சரக்குகள் தமிழ்நாட்டிற்குள் கொண்டுவர முடியாமல் நிற்கிறது. அதே போல தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா செல்ல முடியவில்லை. இப்படி பதட்டமான சூழல் நிலவுகிறது. இதை சரியான முறையில் கையாள வேண்டும் என்றால் நீங்கள் வந்தால்தான் சரியாக இருக்கும் என்றேன்.
“நான் எப்படி வர முடியும்? நீங்கள் ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறீர்கள். இதில் எனக்கு என்ன தொடர்பு இருக்கிறது என்றார்” அவர். கர்நாடகாவில் இருந்து சில அமைப்புகளும் தலைவர்களும் அண்ணன் கொளத்தூர் மணியை சந்தித்துப் பேசினார்கள். தமிழ்நாடு காவல்துறையின் சில அதிகாரிகளும் அண்ணனை சந்தித்து நீங்கள் பேசினால்தான் சரியாக இருக்கும் என்றனர். இதை நான் வீரப்பனிடமும் சொல்லவில்லை, கோபாலிடமும் சொல்லவில்லை. அண்ணனிடம் மட்டும் சொல்கிறேன். அண்ணா இன்று இரவு நாங்கள் கிளம்புகிறோம், நீங்க ஈரோடு வந்துருங்க, நம்ம போவோம் என்றேன். ]
வீரப்பனுக்கே சொல்லாமல் வருவது எப்படி சரியாக இருக்கும் என்றார் அண்ணன் கொளத்தூர் மணி. திமுகவுக்கும் திராவிடர் கழகத்திற்கும் முரண்பாடான காலம் அது. இந்த நேரத்தில் இது சரியாக இருக்குமா? நான் நேற்றைக்கு கூட ஆசிரியரை சந்தித்த போது ”உங்கள் தலையில் நிறைய சுமை இருக்கிறது. அதை இறக்கி வைக்கப் பாருங்கள். மீண்டும் அந்த சுமையை ஏற்றப் பார்க்காதீர்கள்” என்று சொல்கிறார். அதனால் நான் இதை செய்தால் சரியாக இருக்குமா? என்று கேட்டார். பின்னர் நீண்ட நேரம் கர்நாடகா காட்டுக்குள் நடக்கும் பிரச்சனைகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.
திடீரென மணி அண்ணன் அவர்கள், “ சரி, இது என்னுடைய சொந்த விருப்பம். இதில் வரக்கூடிய பிரச்சனைகளை கடந்து நாட்டு நலன் மற்றும் தமிழ் மக்களின் நலன் முக்கியமாக இருக்கிறது. அதனால் நான் வருகிறேன்” என்றார். அதற்குப்பிறகுதான் எனக்கும் நம்பிக்கை வந்தது.
அன்று இரவு இருவரும் புறப்பட்டோம். ஈரோடு சக்தி நகரில் உள்ள குடும்ப நண்பர் ஒருவரின் இல்லத்தில் அண்ணன் இருந்தார். மாலை ஐந்து மணிக்கு காரில் சித்தோடு சத்தியமங்கலம் வழியாக சென்றோம். சித்தோடில் தமிழ்நாடு விடுதலைப் படையை சேர்ந்த இனியன் என்பவர் தங்கியிருப்பதாக சொன்னார். என்னுடைய காரை ஓட்டுவதற்கு பாலமுருகன் என்ற தம்பி இருந்தார். அவர் நம் இயக்கத்தைச் சேர்ந்தவர். நான் சொல்லியிருந்த தகவலின்படி பெருந்துறை சாலையில் காரை இயக்கினார். எங்களுடைய ஆசிரியர், பெருந்துறை சாலையில் ஏன் செல்கிறது என்று கேட்டார்? இல்லை இன்னொருவர் இருக்கிறார்? யார்? மணி அண்ணன் என்றவுடனே, அப்பாடா அவர் வந்தால் நமக்கு பிரச்சனை இல்லை, ஒன்றாக செல்லலாம் என்றார். பின்னர் அனைவரும் ஒன்றாக சென்றோம்.
தமிழ்நாடு விடுதலைப் படை அமைப்பைச் சார்ந்த இனியன், இவரை எதற்கு அழைத்து வந்தீர்கள்? நம்ம அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், இவர் எதற்கு? என்று கேட்டார். காரணம், அவரின் மனநிலை எல்லாமே நாம் தமிழ்த்தேசியம், கொளத்தூர் மணி திராவிடம் என்ற கருத்துதான். சித்தோடில் இருந்து சத்தியமங்கலம் வரைக்கும் எங்களது ஆசிரியரிடம் பேசிவந்த மணி அண்ணன், பின்னர் இனியனொடு பேச தொடங்கினார். பேசியதற்கு பிறகு இனி இவர்களோடு பேச கூடாது. மணி அண்ணனோடு பேசிக்கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்துவிட்டார். அந்தளவுக்கு தனது அனுபவங்களையும், நிகழ்கால நகர்வுகளையும் பகிர்ந்து கொண்டார்.
மறுநாள் காலையில் வீரப்பனை சந்திக்கிறோம். முதலில் வீரப்பன் குழுவில் இருந்து ஒருவர் வந்தார், அவரிடம் மணி அண்ணன் வந்திருக்கிறார் என்றோம். இதைக் கேட்ட உடனேயே வீரப்பன் விரைவாக வந்தார். அதாவது 1993இல் என்னை வீரப்பனிடம் அறிமுகப்படுத்தி வைத்தது மணி அண்ணன். 2000இல் விரப்பனிடம் அண்ணனை அறிமுகப்படுத்த வேண்டிய சூழல் எனக்கு நேர்ந்தது.
(தொடரும்)
- விடுதலை இராசேந்திரன்