கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

விருதுநகர் அழகேந்திரன் ஆணவப் படுகொலையைக் கண்டித்தும், ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் ஒன்றை இயற்றக் கோரியும் 15.07.2024 அன்று மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை மாவட்டக் கழகச் செயலாளர் மா.பா.மணி அமுதன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி வரவேற்புரையாற்றினார். மாவட்டக் கழக காப்பாளர் தளபதி முன்னிலை வகித்தார்.maniamudhan dvk against honor killingமேலும் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கையை வலியுறுத்தி சேலம் மாநகரத் கழகத் தலைவர் பாலு, திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு, திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி, சிவகங்கை மாவட்ட கழகச் செயலாளர் பெரியார் முத்து, தேனி மாவட்ட அமைப்பாளர் தேனி ராயன், ஆதித்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் சந்துரு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் வெ.கனியமுதன், ஆதித்தமிழர் பேரவை மாநிலப் பொதுச் செயலாளர் கோவை ரவிக்குமார் உள்ளிட்டோர் பேசினார்கள்.

நிறைவாக கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் கண்டன உரையாற்றினார். அவர் பேசுகையில் “தொடர்ந்து தமிழ் நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஜாதி ஆணவப் படுகொலைகள் நடைபெற்று வருகிறது. இந்த குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி கழகம் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. திமுகவை ஆதரித்து பரப்புரை செய்த பெரியார் தொண்டர்களாகிய நாங்கள் “ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தனிச் சட்டம்” இயற்றக் கோரிக்கை வைக்கிறோம். இயற்றப்படும் தனிச் சட்டத்தின் மூலம் ஆணவப் படுகொலைகளுக்கு துணை போகும் ஜாதி சங்கங்களின் ஜாதி வெறி செயல்பாட்டிற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைய வேண்டும், திராவிட மாடல் அரசு இதனைப் பரிசீலனை செய்ய வேண்டும்” என்று பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம், திருப்பூர், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கழகத் தோழர்களும், விடுதலை சிறுத்தைகள், ஆதித்தமிழர் பேரவை, அதிமமுக, ஆதித்தமிழர் கட்சி, பழங்குடி தமிழர் இயக்கம் உள்ளிட்ட தோழமை இயக்கத் தோழர்களும் திரளாகப் பங்கேற்றனர்.

- பெ.மு. செய்தியாளர்