தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி பிராமண சங்கத்தின் தலைவராக இப்போது “அவதாரம்” எடுத்து நேரடியாகப் பெரியாரைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டார். ஆரியரைப் பற்றி தவறான கருத்தை பெரியார் பரப்பினாராம் ஆரியர்-திராவிடர் வெவ்வேறு இனம் என்றும் ஆரியர் இந்தியாவுக்கு படையெடுத்து வந்தனர் என்றும் கடந்த 60 ஆண்டுகளாக திராவிட சித்தாந்தம் பேசுவோர் கற்பனைக் கதையை உருவாக்கிப் பரப்புகிறார்.
ஆரியர் வந்தேறிகள் என்று ஈ.வெ ராமசாமி கருத்துத் திணிப்பு செய்தார் என்றும் வாய்க் கொழுப்புடன் பேசி உள்ளார். இந்த உளறல்களை கேட்டுக் கேட்டுப் புளித்துப் போய் விட்டது. பிகாரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த ஆளுநரே உமக்கு வரலாறு ஏதாவது தெரியுமா?
1. பார்ப்பனர்களே தங்களை ஆரியர்கள் என்று பெருமையுடன் அறிவித்துக் கொண்ட கதை தெரியுமா?
அவர்கள் ஆரிய சமாஜம் என்ற அமைப்பை உருவாக்கிக் கொண்டார்களே அது உமக்குத் தெரியுமா?
அதன் நிறுவனர் தயானந்த சரசுவதி ஆரியர்களாகிய வேதமும் சமஸ்கிருதமும் இரண்டு கண்கள் என்று அறிவித்தது தெரியுமா?
ஆரியர்களாகிய நாம் வேதக் காலத்துக்கு திரும்ப வேண்டும் அறைகூவல் விடுத்தது தெரியுமா?
2. 1875-ல் பிரம்ம ஞான சபை (தியாசபிக்கல் சோசையிட்டி) என்ற அமைப்பை கர்னல் ஒல்கட் என்ற வெளிநாட்டுக்காரர் தொடங்கியது தெரியுமா? அதில் பார்ப்பனர்கள் அணிவகுத்தது தெரியுமா?
அந்த சபையில் இருந்த பிராமணர்கள் ஆரிய வர்த்தத்தை சேர்ந்தவர்கள் என்று அறிவித்துக் கொண்டது தெரியுமா?
ஆரியர் ஆதி சங்கரை தென்னாட்டில் பிறந்ததற்காக “திராவிட சிசு“ என்று பார்ப்பனர்கள் பெருமை கொண்டாடினார்களே அது எந்த அடிப்படையில்? இது ஆரிய-திராவிட பார்வை தானே!
நாங்கள் ஆரியர்கள் என்று கோல்வவாக்கரே கூறுகிறார்!
ஆளுநரின் தாய் சபையான ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு கருத்தியலை உருவாக்கிய கோல்வாக்கரே நாங்கள் ஆரியர்கள் என்று அறிவித்துள்ளார். ஆரிய இட்லர் சொன்ன அதே கருத்தை, ஆரிய கோல்வாக்கரும் கூறுகிறார்.நம்முடைய மக்களின் மூலாதாரம் எது என்பது சரித்திர மேதைகளுக்கே தெரியவில்லை. ஒரு வழியில் நாம் அநாதிகள்; துவக்கம் இல்லாதவர்கள்; பெயர் இல்லாமல் வாழ்ந்திருக்கிறோம். நாம் நல்லவர்கள். நாம் அறிவுத்திறம் கொண்டவர்கள். இயற்கையின் விதிகளை அறிந்தவர்கள் நாம்தான். ஆன்மாவின் விதிகளை அறிந்தவர்களும் நாம்தான். மனிதனுக்கு எவை எவை நன்மை பயக்குமோ, அவற்றை எல்லாம், மனித சமூகம் நன்மை பெறுவதற்காக வாழ்க்கைக்குக் கொண்டு வந்தது நாம்தான்! அப்போது நம்மைத்தவிர, மற்றவர்கள் எல்லாம் இரண்டு கால் பிராணிகளாகத்தான் அறிவற்றவர்களாகவே இருந்தனர். எனவே தனிமைப்படுத்தி நமக்குப் பெயர் எதையும் அவர்கள் சூட்டவில்லை. சில நேரங்களில் - நமது மக்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட நாம் ஆரியர்கள் அதாவது அறிவுத் திறம் மிக்கவர்கள் என்று அழைக்கப்பட்டோம். நம்மைத் தவிர மற்றவர்கள் எல்லாம் மிலேச்சர்கள்.(ஆதாரம் Bunch of Thoughts).
ஆரியர்கள் அந்நியர்கள் வந்தேறிகள் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறிய கருத்தை இதோ பட்டியலிடுகிறோம்.
“தென்னிந்தியாவில் வசித்து வந்த ஆரியரல்லாதார்களையே குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் இராமாயணக் கதையில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.” (-ரோமேஷ் சந்திர தத்தர் C .L.E.,I.C.S., எழுதிய ‘புராதன இந்தியா’ 52 ஆவது பக்கம்).
“திராவிடர்கள் தங்கள்மீது படையெடுத்து வந்த ஆரியர்களோடு கடும்போர் புரிய வேண்டியிருந்தது”. இந்த விஷயம் ரிக் வேதத்திலேயே அநேக சுலோகங்களாக இருக்கின்றன. - (டாக்டர் ரோமேஷ் சந்திர மஜும்தார் M.A., யின் ‘பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும் 22 ஆவது பக்கம்).
“ஆரியன் என்கிற பதம் இந்தியாவின் புராதனக் குடிமக்களிடமிருந்து தங்களைப் பிரித்துக் காட்டுவதற்காக ஆரியர் ஏற்படுத்திக் கொண்ட பதம்”. .
“தஸ்யூக்கள் என்பது இந்தியப் புராதனக் குடி மக்களுக்கு அவர்கள் (ஆரியர்கள்) கொடுத்த பெயராகும்.” - (1922 ஆம் வருடம் பிரசுரிக்கப்பட்ட கேம்பிரிட்ஜ் ‘பழைய இந்தியாவின் சரித்திரம்’ புத்தகம்).
ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர் (சூத்திரர்)கள் என்றும், தஸ்யூக்கள், அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆரியருக்கும் ஆரியரல்லாதாருக்கும் இருந்துகொண்டிருந்த அடிப்படையான பகைமையைப் பற்றி ரிக்வேதத்தில் பல இடங்களில் காணலாம். “இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும் அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகைக்குக் காரணமாகும்.” - (டாக்டர் ராதாகுமுத முக்கர்ஜி எம்.ஏ, பி.எச்டி. எழுதிய, ‘இந்து நாகரிகம்’ புத்தகத்தில் 62 ஆவது பக்கம்).
“தமிழர்கள் என்பவர்கள் இந்தியாவின் தென்கிழக்கிலும், இலங்கையின் சில பாகத்திலும் வசிக்கும் ஆரியரல்லாத திராவிட மக்கள் ஆவார்கள். தமிழ் என்பது மேற்படியாளர்களால் பேசப்படும் பாஷை” - (சர் ஜேம்ஸ்மர்ரே எழுதிய இங்கிலீஷ் அகராதியின் பக்கம்).
“ஆரியர்கள் தங்கள் மொழியை ஆரியரல்லாதாருக்குள் புகுத்த முயற்சித்து, முடியாமல் போனதால், ஆரியரல்லாதாருடைய பாஷைகளைக் கற்றுக் கொண்டு, அவர்களது நாகரிகத்தையும் பின்பற்ற வேண்டி வந்தன” - (பண்டர்காரின் கட்டுரைகள் வால்யூம் -3 பக்கம் 100).
“தமிழர்கள், ஆரியர்களை வடவர், வடநாட்டார் என்று அழைத்தார்கள், ஏனெனில், ஆரியர்கள் வடக்கே இருந்து வந்தார்களானதால்” - (டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார், எம்.ஏ. பி.எச்.டி, அவர்கள் எழுதிய ‘தென்னிந்தியாவும் ‘இந்தியக் கலையும்’ என்ற புத்தகத்தில் 3 ஆவது பக்கம்).
“இராமாயணத்தில் தென்னிந்தியா (திராவிட தேசம்) தஸ்யூக்கள் என்ற ராட்சதர்களுக்குச் சொந்தமாக இருந்தது.
இவர்கள் (தென் இந்தியர்கள்) வட இந்தியாவில் இருந்து வந்த ஆரியர்களைப் போலவே நாகரிகம் அடைந்தவர்களாய் இருந்தார்கள்.” -(பிடிசீனிவாச அய்யங்கார் எழுதிய ‘இந்திய சரித்திரம், முதல் பாகம்’ புத்தகத்தில் 10ஆவது பக்கம்).
ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களை, தங்களுடைய புத்தகங்களில் திராவிடர்கள் - தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
“ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில், ஆரியர்கள் திராவிடர் நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து, ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்.” -(C.S. சீனிவாசாச்சாரி, M.A.,M.S., ராமசாமி அய்யங்கார் M.A., ஆகிய சரித்திரப் போதகர்கள் எழுதிய, ‘இந்திய சரித்திரம், முதல் பாகம்’ என்னும் புத்தகத்தில் “இந்து இந்தியா” என்னும் தலைப்பில் 16,17 ஆவது பக்கங்கள்).
“ஆரியர்களின் சமஸ்கிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்குக் கணவாய் வழியாக நுழைந்து, வட இந்தியாவை அடைந்தார்கள். அங்குத் தங்களை விட முன்னேற்றமான திராவிடர்களைக் கண்டு அவர்களிடமிருந்து பல நாகரிகங்களைக் கற்றுக் கொண்டார்கள்.” -(H.G வெல்ஸ் எழுதிய உலகத்தின் சிறு சரித்திரம் புத்தகம் 105வது பக்கம்).
“வட இந்தியாவில் இருந்த திராவிடக்கலை, நாகரிகம் முதலியவை யாவும்ஆரியர்களால் அழிக்கப்பட்டு விட்டன. ஆனால்,தென்னிந்தியாவில் அவ்விதம் நடக்கவில்லை.” - (தமிழ்ப் பேராசிரியர் K.N. சிவராஜ பிள்ளை B.A., எழுதிய ‘பண்டைத் தமிழர்களின் வரலாறு’ என்னும் புத்தகம் 4 ஆம் பக்கம்). ஆரியரல்லாத இந்த நாட்டுப் பழங்குடி மக்கள் ஆரியர்களால் காடுகளுக்குத் துரத்தப்பட்டார்கள். இதுவும் போதாதென்று அவர்களை இராட்சதர்கள், அசுரர்கள் என்றும், ஆரியர்களும் ஆரியப் புரோகிதர்களும் நூல் எழுதி வைத்தார்கள். ஆரியரல்லாதார்களுக்கு இவர்கள் ஆதியில் இட்ட தஸ்யூக், ஆரிய எதிரி என்ற பெயர்கள் தான் நாளடைவில் பிசாசு, பூதம், ராட்சதன் என்ற பெயர்களாக மாறி விட்டன.” -(சர் வில்லியம் வில்சன்ஹண்டர் K.C.S.I.,C.I.E.,M.A., L.L.D. எழுதிய ‘இந்திய மக்களின் சரித்திரம்’ என்னும் நூலின் 41 ஆவது பக்கம்).
இராமாயணமும், மகாபாரதமும் இந்தோ - ஆரியர் காலத்தையும், அவர்களுடைய வெற்றிகளையும், உள்நாட்டுச் சண்டைகளையும் பற்றிக் கூறுவதாகும். இவைகள் உண்மையென்று நான் நம்பவேயில்லை. “பஞ்சதந்திரம்”, “அராபியன் நைட்” முதலிய கற்பனைக் கதைகளைப் போன்றவை என்பதே என் கருத்து.” -(பண்டிட் ஜவகர்லால் நேரு அவர்கள் எழுதியுள்ள “டிஸ்கவரி ஆஃப் இந்தியா” (Discoverey of India) பக்கம் 76-77).
- விடுதலை இராசேந்திரன்