கேரளாவில் நடைபெற்ற பார்ப்பன சங்க மாநாட்டில் கேரள உயர்நீதிமன்ற நீதிபதியும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும் பங்கேற்றதைப்போல, பெங்களூருவில் சமீபத்தில் நடைபெற்ற பார்ப்பன சங்க மாநாட்டிலும் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண தீட்சித் என்ற பார்ப்பனர் பங்கேற்றுப் பார்ப்பனீயத்தைத் தூக்கிப் பிடித்துப் பேசி இருக்கிறார்.
‘பிராமண மகா சபையின் பொன் விழா’ இரண்டு நாட்கள் நடைபெற்றது. அம்மாநாட்டில் பேசிய அவர், “பிராமணர்கள் என்ற வார்த்தையை ஒரு ஜாதியாக பார்ப்பதைவிட, வர்ணாசிரம தர்மத்துடன் பார்க்க வேண்டும். வேதங்களை தொகுத்த வேதவியாசர், மீனவப் பெண்ணின் மகன்; ராமாயணத்தை இயற்றிய வால்மீகி, எஸ்.சி., அல்லது எஸ்.டி., பிரிவைச் சேர்ந்தவர். ஆனால், இவர்களை கீழானவர்களாக பிராமணர்கள் பார்த்தது இல்லை. ஹிந்து கடவுளான ராமரின் கருத்துக்கள், நம் அரசமைப்பிலும் இடம் பெற்றுள்ளன.’’ என்று பேசியுள்ளார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு நீதிபதி சிறீசானந்தா, “மக்கள் கல்வி, உணவுக்காக போராடும்போது, இதுபோன்ற பிரமாண்ட நிகழ்ச்சிகள் தேவையா என்று விமர்சிக்கின்றனர். இதுபோன்ற நிகழ்ச்சிகளே சமூகத்தினர் இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதுடன், பிரச்சினைகள் குறித்தும் பேச வைக்கிறது,” என குறிப்பிட்டார். இந்த மாநாட்டில் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரைப் பற்றியும் பேசி இருக்கிறார் ஒரு நீதிபதி.
பாஜகவின் ஆட்சி பார்ப்பனர்களுக்குக் கொடுத்திருக்கும் துணிச்சலே, இவ்வளவு வெளிப்படையாக பார்ப்பனர்கள் சங்க மாநாடுகளில் நீதிபதிகள் பங்கேற்கக் காரணமாக இருக்கிறது. இந்த நீதிபதிகளிடம் உச்சநீதிமன்றம் இதுவரை எந்த விளக்கமும் கேட்கவில்லை. இதுபோல திராவிடர் இயக்க மேடைகளில் எதாவது ஒரு நீதிபதி பேசியிருந்தால் இந்த பார்ப்பனக் கூட்டம் அமைதியாக இருந்திருக்குமா? ஊடகங்கள் மவுனித்திருக்குமா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். உண்மைக்குப் புறம்பாக விமர்சிக்கும் கயவர் கூட்டம்!
ஜாதியைத் தூக்கிட்டு வராதீங்க!
அமெரிக்காவில் வாழும் குஜராத்தைச் சேர்ந்த டயலன் பட்டேல் என்பவர், “டல்லாஸில் எனது சாதிக்கான (லியுவா படிதார் சமாஜ் சாதி) வாலிபால் போட்டி நடைபெறுகிறது. அமெரிக்காவில் 40,000 பேர் எங்கள் சாதியினர். அதில் 8,000 பேர் இங்கு உள்ளனர். குஜராத்தின் ஒரு சில பகுதியைச் சேர்ந்தவர்கள் நாங்கள். நாங்கள் அனைவரும் அமெரிக்காவில் ஒரே மாதிரியான வாழ்க்கை முறையை கடைபிடிக்கிறோம். நாங்கள் கிராமப்புற அமெரிக்காவில் மோட்டல் அல்லது பெட்ரோல் பம்ப் வைத்து உள்ளோம் என்று ஜாதி பெருமையுடன்” சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
இந்த பதிவுக்கு அமெரிக்காவில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. ஜாதிப் பெருமை பேசிய இந்தியர்களை கடுமையாக விமர்சனம் செய்து அமெரிக்கா அரசியல்வாதிகள் போஸ்ட் செய்துள்ளனர். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பிராண்டன் கில் செய்துள்ள பதிவில், “அமெரிக்கா என்பது தகுதி வாய்ந்தவர்களுக்கான நாடு. இதற்கு காரணம் நம்மிடம் சாதி அமைப்பு இல்லை. இந்தியா போன்ற வெளிநாட்டில் உள்ள வர்க்க வேறுபாட்டை, ஜாதி வேறுபாட்டை இங்கே இறக்குமதி செய்வதன் மூலம் அமெரிக்காவின் செழுமையையும் சுதந்திரத்தையும் நாம் சீர்குலைக்க போகிறோம். முறையற்ற குடியேற்றம் காரணமாக அமெரிக்காவின் தேசிய மற்றும் கலாச்சாரம் பாதிக்கப்படுகிறது” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
- விடுதலை இராசேந்திரன்