சென்னை பரப்புரைக் குழு: கிழக்கு தாம்பரம் வால்மீகி நகரில் சங்கராச்சாரியார் படத்தை சட்டைப் பையில் வைத்திருந்த வெங்கடேஷ் என்ற புதிய ஆதரவாளர் பரப்புரை பயணத்தைக் கூர்ந்து கவனித்து கூட்டம் முடிந்ததும் தோழர்களுக்கு தேநீர் வாங்கி கொடுத்தார். மேலும், “நான் ஆன்மிகவாதிதான். ஆனால் பக்தி வேறு அரசியல் வேறு” என்றும், “எனக்குப் பெரியாரை பிடிக்கும். பெரியார் இல்லை என்றால் நான் இன்றைக்கு இந்த டிராவல்ஸ் தொழிலை வைத்திருக்க முடியாது” என உணர்ச்சி பொங்க கூறினார்.
“இன்றைக்கு சீமான் போன்ற ஆட்கள் பெரியாரைப் பற்றி அவதூறு பேசுவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நீங்கள் இந்த மாறி அயோக்கியனை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துங்கள். பெரியார் இல்லை என்றால் இன்றைக்கு கல்வி கற்க முடியமா தமிழர்கள்” என்றும் கூறினார்.
அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் பரப்புரை வாகனத்திற்கு பெட்ரோலை கேனில் தர மறுத்தனர். வெங்கடேஷ் அவர்கள் சென்று கழகப் பிரச்சார ஜெனரேட்டர்க்கு 610 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கிக் கொடுத்தார். தமிழ்நாட்டில் பக்திமானாக இருந்தாலும் அவர்கள் பெரியார் பற்றிய சரியான புரிதலோடு இருக்கிறார்கள் என்பதற்கு தாம்பரம் பகுதி வெங்கடேஷ் போன்றோர் நிகழ்கால உதாரணங்கள்.
தாம்பரம் பெரியார் மார்கெட்டில் நெற்றியில் குங்குமம் வைத்திருந்த பழக்கடைக்காரர் தோழர்களுக்கு பழத்தைக் கொடுத்துவிட்டு பெரியார் வாழ்க! என முழக்கமிட்டார். ‘எனக்கு பெரியார் பிடிக்கும்ப்பா’ என்று சொல்லி வாழ்த்தி அனுப்பினார்.
பூக்கடைக்கார அக்கா ஒருவர், “அய்யோ என்கிட்ட பணமில்லையே! பூ தரட்டுமானு என்றூ கேட்க, வேண்டாம் என்று தோழர்கள் கூறினர். “அதெப்படி சும்மா அனுப்புறது” என்று சொல்லிவிட்டு, அருகே இருந்த கடையில் 50 ரூபாய் வாங்கிக் கொடுத்து ஊக்கப்படுத்தி அனுப்பினார்.
ஈரோடு: பரப்புரைப் பயணத்தை உற்று கவனித்த ஒருவர், தோழர்கள் பேசி முடித்த பிறகு, “அப்படின்னா கண்டிப்பாக இட ஒதுக்கீடு வேணுமுங்க தம்பி. நான் கூட இத்தனை நாளா இட ஒதுக்கீட்டாலதான் ஜாதியே உயிரோடு இருக்குதுன்னு நினைச்சேன்” என்றார். பரப்புரைப் பயணத்தின் கருத்துக்கள் மிக ஆழமாக மக்களிடையே விதைக்கப்படுகிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய இச்சம்பவம்.
கரூரைச் நவநீதகிருஷ்ணன் என்பவர் கழக கொள்கை பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்தார். புதிய தோழருக்கு “இறுதி மூச்சு அடங்கும் வரை யாருக்காக உழைத்தார் பெரியார்” என்ற நூலை வழங்கி வரவேற்றார். “ஏற்கனவே பெரியார் கருத்துக்களைப் படித்துள்ளேன். பெரியாரைப் பிடிக்கும் ஆனால் நான் சாலையில் வரும்போது எனக்கு முன் சென்றவர் சுயமரியாதை நமது அடையாளம் என்ற வாசகத்துடன் டீ சர்ட் அணிந்திருந்தார். அதைப் பார்த்து, அவரை பின் தொடர்ந்து வந்து இணைந்து கொண்டேன்” என்று கூறினார்.
சேலம்: சேலம் மாவட்டம் கொளத்தூர், காவலாண்டியூர் கிராமத்தில் பனையேறும் தொழிலாளர்கள் பிரச்சாப் பயணக் குழுவை பாராட்டியும், தங்கள் சமுதாயத்திற்கு பெரியார் ஆற்றிய நன்றிக் கடனுக்காக ஒவ்வொரு வருடமும் பெரியார் இயக்கத்திற்காக உதவிகளை செய்து வருகிறோம், இனியும் செய்வோம் என தெரிவித்து ரூ.25,000-ஐ தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் ஆகியோரிடம் வழங்கினார்கள். பத்திரிகையாளர் சிவசுப்ரமணியம் அவர்கள் 2000 ரூபாயும், இளம்பிள்ளை சதீஷ் குமார் அவர்கள் 1000 ரூபாயும் தன்னெழுச்சியாக வழங்கினர்.
திமுக தலைமைக் கழக பேச்சாளர் வெங்கடேஷ் தோழர்களுக்கு தங்கும் விடுதி, உணவு ஆகியவற்றை ஏற்பாடு செய்து கொடுத்தார். அவர் தொடர்ந்து பேசுகையில், “தான் சிறு வயதிலிருந்து திராவிடர் கழகத்தில் இருந்தவன். ஆகவே எனக்கு திராவிட இயக்கங்கள்தான் மிகவும் பிடிக்கும். நான் அரசியல் கட்சியான திமுகவில் இருந்தாலும் என்றும் தங்களின் ஆதரவாளராகவே இருப்பேன்” என்று பெருமையோடு கூறினார்.
சேலம் பேருந்து நிலையத்தில் கழகப் பரப்புரைக் கூட்டம் நடக்கும் போது, அங்கே கூட்டம் நடத்தக்கூடாது, நிறுத்த வேண்டும் என்று சங்கிகள் சிலர் சேலம் காவல் நிலையத்தில் முறையிட்டனர். காவலர்கள் வந்து தோழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கு பிரச்சாரத்தை முடித்துவிட்டு, காவல் துறையினர் அனுமதி கொடுத்த இடத்திலும் பிரச்சாரத்தை நடத்தினர். உதவி ஆய்வாளர் பேசுகையில், உங்கள் பிரச்சாரம் தொடர்ந்து நடக்கட்டும் அதற்கு நாங்கள் உறுதுணையாகவே இருப்போம் என்று கூறி வழி அனுப்பினார். மேலும் முதலில் சிறிது கடுமையாக நடந்து கொண்ட காவல் உதவியாளர் தோழர்களிடம் என்னை மன்னித்து விடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டு விடை பெற்றார்.
- பெ.மு. செய்தியாளர்