கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தமிழ்நாடு ஆளுநருக்கு ‘அய்ரோப்பிய இறக்குமதி’ என்றாலே சுத்தமா பிடிக்காது; அதனால் தான் ‘திராவிடம்’ என்றாலே அவருக்கு கசக்கும். ரிஷிகள் – முனிவர்கள் – சனாதனப் பெருமைகளைப் பேசிக்கொண்டே இருப்பார். இந்த புராணக் கால விஞ்ஞானிகள் பற்றி ஆராய்ச்சிக்கு ஒரு மயிலாப்பூர் குழுவே ஆளுநர் மாளிகையில் இருக்கிறது என்கிறார்கள்? சனாதனக் காலத்துலேயே மிகச்சிறந்த ‘தகவல் தொடர்பு சேவைகளை’ ரிஷிகளும், முனிவர்களும் கண்டுபிடித்து பயன்படுத்தினார்கள் என்று அவர்கள் அடித்துக் கூறுகிறார்கள்.

அந்தப் புனிதமான ‘தகவல் தொடர்புகளை’ எல்லாம் நம்மை அடிமைப்படுத்திய பிரிட்டிஷ்காரர்கள் அழிக்க சதி செய்தார்கள். ஆளுநரால் இப்போதும் அதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஆளுநர் அதற்காக கவலைப்படாத நாளே இல்லை. அதாவது அவர் தொடர்ந்து கண்ணீர் வடித்து கசிந்துருகி பேசிக்கொண்டே இருக்கிறார்.dvk posts letters to governor 1சதிகார பிரிட்டிஷ்காரன் என்ன செய்தான் தெரியுமா? முதலில் தபால் ஆபிஸ் என்றான். தந்தி என்றான். தொலைபேசி என்றான். செல்போன் என்றான். இப்போது ஈமெயில், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் என்று அய்ரோப்பியக்காரன் அட்டகாசம் செய்கிறான்.

இண்டெர்நெட் இல்லாமல், எலெக்ட்ரானிக் கருவிகள் இல்லாமல் தகவல் தொடர்பு கட்டமைப்பு நமது சனாதனத்திலேயே இருக்கிறது. அதற்குத் தேவையான பொருட்கள், மிகவும் மலிவு. உச்சிக்குடுமி, பூணூல் தோற்றத்துடன் வேதம் படித்ததாகக் கூறிக்கொள்ளும் வேதப் பண்டிதர் மற்றும் ஒரு தர்ப்பைப்புல் கட்டு, அதுவே போதுமானது. இதை வைத்துக்கொண்டு இறந்து போன நமது குடும்பத்தினரின் ஆவிகளுடன் ’அவாள்’களால் பேச முடியும். அதுவும் நமது மூதாதையருக்கு தெரியாத சமஸ்கிருத மொழியிலேயே பேசுவார்கள். நமது மூதாதையர் விரும்பும் உணவுகளை நேரடியாக அனுப்புவார்கள். ஆனால் அசைவத்தை தர்ப்பைப்புல் ஏற்றுக்கொள்ளாது. ‘டோர் டெலிவரி’க்கு ஆட்கள் வேண்டாம், வேத மந்திர சக்தியே ‘டெலிவரியை’க் கட்சிதமாக முடித்து விடும்.

இப்பக்கூட பாருங்க, மகாளய அமாவாசை நாளில் நமது மக்கள் ‘வேத பண்டிதர்களை’ நோக்கி ஓடுகிறார்கள். ‘எங்க அப்பா, அம்மா, அண்ணன், தம்பிகளோட பேசுங்க சாமி; நான் வந்திருப்பதை வேத மந்திர சக்தியால் கூறுங்க சாமி. உங்களுக்கு புண்ணியமா போகும். உணவுப் பொருட்களை எல்லாம் எடுத்து வந்திருக்கோம், இதையும் மந்திரம் ஓதி அனுப்புங்க. நீங்க எவ்வளவு தட்சணைக் கேட்டாலும் தருகிறோம்’ என்கிறார்கள். இந்தத் தர்ப்பைப்புல் சக்தி பூமியில் வேலை செய்யாது. இதுவரை ‘நாசாவில்’ இன்னும் பிடிபடாத ‘பித்துருக்கள்’ இடம் மட்டும் தான் பேசும்.

இந்த நிலையில் நமது ஆளுநரிடம் தொடர்பு கொள்ள என்ன செய்யலாம் என்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் கருப்புச்சட்டை இளைஞர்கள் கூடி ஆலோசித்து ஒரு முடிவை எடுத்தார்கள். சரி தர்ப்பை பயன்படாத போது அஞ்சலட்டை போட்டு ஆளுநருக்கு எச்சரிக்கை விடுக்கலாம் என்று முடிவெடுத்தார்கள். தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் என்ற இரண்டே வரிகளை அஞ்சலட்டையில் எழுதினார்கள். அந்த அஞ்சலட்டையில் இவர்கள் எழுதாமல் விட்ட வார்த்தைகளும் உண்டு. அந்த என்ன தெரியுமா?

“ஆளுநரே! அந்தத் தொலைக்காட்சி விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் ‘திராவிடம்’ என்ற சொல் விடுபட்டதற்கு நான் காரணமல்ல என்று பொய் பேசாதீங்க. குழந்தைகள் பாடலைப் பாடும் போது ஒவ்வொரு வார்த்தைகளையும் நீங்களும் உச்சரிச்சீங்க. திடீர்னு ‘தெக்கணமும் திராவிடமும்” விடுபட்ட போது குழந்தைகள் பக்கம் திரும்பி, ஒரு புன் சிரிப்பைப் பரிசாக வழங்குனீங்க. அந்தக் காட்சியை நாங்க நேரலையிலேயே பார்த்தோம். தெரியாமல் நடந்துவிட்டது என்று நீங்கள் தப்பிக்க முடியாது”. இவைகள் தான் எழுதாமல் விட்ட வரிகள்.

ஆளுநர் மாளிகையில் நாங்கள் அனுப்பிய அஞ்சல் அட்டைகள் கட்டுக்கட்டாக குவிந்திருக்கும்.

“அது காகித அட்டைகள் அல்ல, அதுக்குள்ளே புதைந்து கிடப்பது எங்கள் உணர்வுகளின் நெருப்பு; காலம் காலமாக எங்களை இழிவுபடுத்தும் சனாதனத்தின் மீதான வெறுப்பு; தன்மானத்தோடு விளையாடாதே என எச்சரிக்கும் ஆப்பு.”

- கோடங்குடி மாரிமுத்து