சென்னை கழகத் தலைமை அலுவலகத்தில் 29.09.2024 அன்று நிமிர்வோம் வாசகர் வட்ட சார்பில் குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு நினைவுக்கூட்டம் நடந்தது. அடிகளார் படத்தைத் திறந்து வைத்து பொதுச்செயலாளர் உரை:
வரலாறு என்ற விளக்குகளின் வெளிச்சத்தில் தான் நிகழ்கால நடைமுறைகள் மற்றும் செயல்திட்டங்களை வகுக்க முடியும். வரலாறு என்பது நிகழ்வுகளின் தொகுப்பு மட்டுமல்ல, அது சமூக இயக்கங்களால் சாத்தியமாக்கப்படும் சமூக மாற்றத்தை உள்ளடக்கியதாகும். அந்த வரலாறுகளில் இருந்து நாம் பல பாடங்களைக் கற்றுக்கொண்டுள்ளோம். சமூகம் இவைகளை எப்படி கடந்து வந்திருக்கிறது என்பதைப் பற்றிய வெளிச்சத்தைத் தருவதாக அமைந்திருக்கிறது.
1925இல் பெரியார் சுயமரியாதை இயக்கத்தையும், குடிஅரசு இதழையும் தொடங்கினார். இதே ஆண்டில் தான் சேரன்மாதேவி போராட்டமும் நடந்தது. 1924இல் வைக்கம் போராட்டம் நடந்தது. இதனடிப்படையில் பார்த்தால் இது திராவிட இயக்கத்துக்கு மிக முக்கியமான ஆண்டாகும். இதைப் பயன்படுத்தி இளைஞர்களுக்கு பல வரலாற்று செய்திகளைக் கொண்டு செல்லவேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.
குறிப்பாக 1925, காலகட்டத்தில் எத்தகைய முரண்பாடுகள் சமூகத்தில் இருந்தது என்பதை அறிய வேண்டியது அவசியம். அன்றைக்கு எழுந்த முரண்பாடு என்பது பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் என்ற அடிப்படை முரண்பாடு தான் அதுவே முதன்மையாக இருந்தது. காரணம் பார்ப்பனர்கள் மட்டும் தான் அரசியலிலும், சமூகத்திலும், பதவிகளிலும் நூற்றுக்கு நூறு ஆதிக்கம் செலுத்தி வந்த காலகட்டம். இன்றைக்கு ஜாதிப் பெருமை பேசிவருகிற உயர்ஜாதி உட்பட பார்ப்பனரல்லாத, ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருமே அன்றைக்குச் சூத்திரர்களாக, இழி மக்களாக, கல்வி மறுக்கப்பட்டவர்களாகத்தான் வைக்கப்பட்டிருந்தனர். அந்தச் சூழ்நிலையில் தான் பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்ற பெயரில் நீதிக்கட்சி தொடங்கியது.
பார்ப்பனரல்லாதார் என்ற ஒரே குடையின் கீழ் அப்பிரிவுக்குள் அடக்கப்பட்டிருந்த தாழ்த்தப்பட்டோர் – பிற்படுத்தப்பட்டோர் – பெண்கள் – சிறுபான்மையினரை ‘பிராமணர்’ எதிர் ’சூத்திரர்’ என்ற சமூக முரண்பாடுகளோடு பெரியார் அணிதிரட்டினார். சூத்திர இழிவை நிலைநிறுத்தும் புராணங்களையும், இதிகாசங்களையும் கடுமையாக விமர்சித்தார். இராமாயணத்தை எதிர்த்த போது சைவர்கள் பெரியார் பக்கம் நின்றனர். பிறகு பெரிய புராணத்தில் அவர் கை வைத்த போது சைவர்களுக்குக் கோபம் வந்துவிட்டது. சுயமரியாதை இயக்கத்துக்கும் சைவத்துக்கும் மோதல் வெடிக்கத் தொடங்கிய போது இதைத் தவிர்க்கும் முயற்சிகளும் நடந்தன. மறைமலை அடிகளாரின் சீடர் இளவழகன் போன்ற சைவ நெறியாளர்கள், சைவத்துக்கும் சுயமரியாதை இயக்கத்துக்கும் இடையே மோதல்களைத் தவிர்க்க முயற்சித்தனர்.
குன்றக்குடி அடிகளாருக்கும் பெரியாருக்கும் இருந்த உறவு!
குன்றக்குடி அடிகளார் சைவத்தில் மூழ்கிப் போன ஒருவர். சைவ மடம் அனைத்துமே சைவத்தைப் பரப்புவதற்காக உருவாக்கப்பட்டவை. அந்த மடங்களிலே மடாதிபதிகளாக வரக்கூடியவர்கள் யாரென்றால் ஒரு குறிப்பிட்ட சைவ ஜாதியைச் சேர்ந்த உயர் வகுப்பினர் தான் அதில் மடாதிபதிகளாக வர முடியும். சைவம் என்பது பார்ப்பனியத்தை எதிர்த்து நின்றிருக்கிறது என்பது வரலாறு. அந்தச் சைவ அமைப்புகளுக்குள்ளேயே கருத்து மாறுபாடுகளும் இருந்தன.
சைவர்களில் மூன்று பிரிவினர் இருந்தார்கள். கடும் சைவர்கள், இடைநிலை சைவர்கள், சுயமரியாதை இயக்கச் சைவர்கள். தீவிரமான சைவர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் வர்ணாசிரமத்தையும், ஜாதிக் கட்டமைப்பையும் மிகத் தீவிரமாகத் தூக்கிப் பிடித்துக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் பல மாநாடுகளை நடத்தி வர்ணாசிரம அமைப்பை நியாயப்படுத்தி பேசியிருக்கிறார்கள். தீண்டாமையை நியாயப்படுத்தி தீர்மானம் போட்டிருக்கிறார்கள்.
சைவத்தில் இரண்டாவதாக உள்ள இன்னொரு பிரிவானது, வர்ணாசிரமத்தையும், ஜாதி அமைப்பையும் நியாயப்படுத்தக் கூடாது. அவைகளைத் தவிர்த்துவிட்டு சைவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது. முன்றாவதாக இருந்த ஒரு பிரிவானது, பெரியாரின் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை, பார்ப்பன – வைதீக எதிர்ப்புக் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்று சொன்னது.
சைவம் குறித்து பெரியார் கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்பினார்.
1. பார்ப்பன வேதம், பார்ப்பன புராணம் மற்றும் சங்கராச்சாரிகளை எதிர்ப்பதாகவும், அவற்றோடு எங்களுக்கு ஒட்டு உறவு கிடையாது என்று கூறும் சைவ சமயத்துக்காரர்கள், தங்கள் கடவுளான சிவனுக்கு மட்டும் கந்த புராணம், சிவ மகா புராணத்தில் இருந்து ஆதாரம் தேடுவது ஏன்? இந்தப் புராணங்களை ஒதுக்கிவிட்டால் சைவத்தில் சிவனுக்கு எதாவது இடம் இருக்கிறதா?
2. சைவம் உள்பட இந்து வைணவக் கடவுள்களை எல்லாம் எடுத்துக் கொண்டால் அந்தக் கடவுள்கள் எல்லாம் தேவர்களின் யாகத்தை எதிர்த்து வந்த அரக்கர்களை அழித்தவர்கள் என்கிற அடிப்படையில் சித்தரிக்கப்படுபவர்களாக தானே இருக்கிறார்கள். அதாவது அரக்கர்களை அழிப்பது, வேதத்தை எதிர்த்தான், தேவர்களுக்கு தொல்லை கொடுத்தான் ஆகவே அவர்களை அழிப்பதற்காக நான் வந்தேன் என அவதாரம் எடுத்த கடவுளர்களாக உள்ளனர்.
3. சைவ சமயத் தலைவர்களும் (கடவுள்) கூட வேதங்களையும் யாகங்களையும் காப்பாற்றுவதற்கும், அவற்றை எதிர்த்தவர்களை அழிப்பதற்கும் தோன்றியவர்கள் தான் என்பதை உங்களால் மறுக்க முடியுமா? வேதம், யாகம் ஆகியவற்றைக் காப்பாற்ற வந்த கடவுள்கள், ஆரியர்களால் புனையப்பட்ட புராணங்கள் ஆகியவற்றை ஒதுக்கி விட்டால் சைவம் என்ற ஒன்று இல்லை என்பதை உங்களால் மறுக்க முடியுமா?
4. நீங்கள் பாடுகிற தேவாரத்திற்கோ திருவாசகத்திற்கோ தமிழ் மறைக்கோ சைவத்தில் எங்காவது இடம் இருக்கிறதா என்று பெரியார் கேட்டார்.
ஆக சைவம், ஆகமம், தேவாரம், திருவாசகம் போன்ற வார்த்தைகளும் சைவக் கடவுள்களின் பெயர்களும், கடவுள்களின் மனைவி, பிள்ளைகளின் பெயர்களும் முற்றிலும் ஆரியத்தின் மொழியிலேயே ஏன் இருக்கிறது? அப்பெயர்களுக்கு புனையப்படும் கதைகளும், புராணங்களும் பெரும்பாலும் ஆரிய மூலத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டதாக இருப்பது ஏன்? என்ற கேள்வியைச் சைவத்தை நோக்கி எழுப்புகிறார் பெரியார்.
ஆரியத்துடன் பின்னிப் பிணைந்ததாகவே நீங்கள் பேசும் சைவம் இருக்கிறது. உதட்டளவில் நாங்கள் ஆரியத்தை எதிர்க்கிறோம், பார்ப்பனியத்தை எதிர்க்கிறோம் என்று சொல்லிவிட்டு நீங்கள் பார்ப்பனியத்திற்கு துணை போகிறவர்களாகவே இருக்கிறீர்கள் என்று கேட்டார் பெரியார். மறைமலை அடிகள் தீவிர சைவராக இருந்து பிறகு கருத்தை மாற்றிக்கொண்டார். திரு.வி.கவும் சைவத்தில் இருந்தவர்தான், பெரியாரோடும் பயணித்துள்ளார். சைவர்களுக்குள்ளேயே சண்டைகள், மோதல்கள் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகள் உண்டு.
இந்தப் பின்னணியில்தான் தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கும் தந்தை பெரியாருக்கும் எப்படி உறவு ஏற்பட்டது என்பதை நாம் பார்க்க வேண்டியுள்ளது. பெரியார் ஒரு அடிப்படையான செய்தியைச் சொல்கிறார். நான் பகுத்தறிவு பேசுகிறேன், அடிகளார் மதத்தைப் பற்றிப் பேசுகிறார். நாங்கள் இருவரும் எப்படி ஒன்றாக சேர்ந்து பயணிக்க முடியும்? என்ற கேள்வியைப் பெரியார் எழுப்பி அதற்கு பதில் கூறுகிறார். மதத்திற்கும் பகுத்தறிவுக்கும் என்ன தொடர்பு என்பதைப் பற்றி ‘உண்மை’ இதழில் ஒரு கட்டுரை எழுதினார். குன்றக்குடி அடிகளார் படத்தை அட்டைப் படமாகப் போட்டு சிறப்பிதழாக வெளிவந்தது. அந்தக் கட்டுரையில் நாங்கள் ஏன் குன்றக்குடி அடிகளாரை ஆதரிக்கிறோம் என்பது குறித்தும், தங்களுக்கும் பகுத்தறிவுக்கும் மதத்துக்கும் உள்ள தொடர்பு என்ன என்றும் விளக்குகிறார் பெரியார்.
‘உண்மையான மதம், உண்மையான பகுத்தறிவு ஒன்றுபட்டு செயல்படுவது கேடு ஆகாது. ஆனால், உண்மையான மதம் என்ற ஒன்று நாட்டில் இருக்கிறதா? இல்லை. தான் வாழ்வதற்கும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் மதம் மக்களைப் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறதே தவிர, மக்கள் வாழ்கைக்கும், மக்களின் முன்னேற்றத்திற்கும் மதம் பயன்படுவது கிடையாது. மதத்தைச் சார்ந்தவர்களின் குலத் தொடர்பு ஒன்று இருக்கிறது.
சைவம் என்றால் சைவத்துடனும், வைணவன் என்றால் வைணவர்களுடனும், இந்து என்றால் இந்துக்களுடனும் தொடர்பில் இருப்பார்கள். ஆனால், பகுத்தறிவு என்பது அனைத்து மதத்தைச் சேர்ந்த மக்களோடும் தொடர்பு கொண்டு இருக்கிறது. சைவம் என்றால் விபூதி பூசிக்கொள்ள வேண்டும், கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிய வேண்டும் எனச் சில நெறிகள் உள்ளது. வைணவம் என்றால் நெற்றியில் நாமம் இட வேண்டும் என்ற நெறி உள்ளது. இப்படி உங்களுக்கு என்று தனித்தனியாக நெறிமுறைகளைப் பிரித்துக் கொண்டே செல்கிறீர்கள்’ என்று எழுதுகிறார்.
அதாவது மதம் Exclusive. ஆனால், பகுத்தறிவு என்பது Inclusive. எல்லா மதத்துக்கானதாகவும், எல்லா மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்வதாகவும் இருப்பது பகுத்தறிவு. மதம் தன்னுடைய Survival -க்காக மட்டுமே போராடுகிறது. பகுத்தறிவு அனைத்து மக்களுக்குமான Survival-க்காக போராடுகிறது.
மேலும் தொடர்ந்து எழுதுகிறார்.
‘இரண்டு வெவ்வேறு துருவங்களாக அடிகளாரும் நானும் ஏன் கைகோர்த்துள்ளோம். அடிகளார் மதவாதி, நான் பகுத்தறிவுவாதி. எப்படி கைகோர்த்துள்ளோம் என்றால், ஆடும் புலியும் ஒன்றாக இருக்காது. ஆனால், சர்க்கஸில் ரிங் மாஸ்டருக்கு பயந்து ஆடும் புலியும் ஒன்றாக இருப்பது போல கொஞ்சிக் குலாவும். அதேபோல மக்கள் நலன் என்னும் ரிங் மாஸ்டர் எங்கள் இருவரையும் அடக்கி ஒடுக்கி செயல்படுங்கள் என செயல்பட வைத்துள்ளது’ என்று பெரியார் விளக்குகிறார்.
குன்றக்குடி அடிகளார் தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர். 1952ஆம் ஆண்டு அவர் குன்றக்குடி மடாதீபதியாக வருகிறார். அவர் வந்தவுடனேயே மகா சன்னிதானங்களைப் பல்லக்கில் அமர வைத்து ஊர் முழுவதும் சவாரி செய்யும் பட்டணப் பிரவேசம் வழக்கத்தை ஒழித்துவிட்டார். மதம் என்ற எல்லையைக் கடந்து தமிழ், தமிழ் இலக்கியம், தமிழர் பண்பாடு என்ற துறைகளில் குன்றக்குடி அடிகளார் படிக்க ஆரம்பித்தார், சிந்திக்கவும் ஆரம்பித்தார். அதே நேரத்தில் ஒரு தீவிரமான சைவராகவே அவர் இருந்துள்ளார். பேரறிஞர் அண்ணா பெரிய புராணத்தைக் கடுமையாக விமர்சித்து திராவிட நாடு பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதுகிறார். உடனே குன்றக்குடி அடிகளார் ‘தார்மீக இந்து’ என்ற பத்திரிகையில் அண்ணாவைக் கடுமையாக தாக்கி பெரிய புராணத்தை நியாயப்படுத்தி ஒரு கட்டுரை எழுதுகிறார்.
(தொடரும்)
- விடுதலை இராசேந்திரன்