சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தை, கோயில் தீட்சிதர்கள் ஏற்று நிர்வகித்து வருகின்றனர். இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. கோயில் வருமானத்தை தீட்சிதர்கள் சரியாக காண்பிக்கவில்லை. கோயிலுக்கு வரும் பக்தர்களை தீட்சிதர்கள் மதிப்பதில்லை. கோயில் கணக்கு வழக்குகளில் முறைகேடு உள்ளது. கோயிலில் தேவாரம், திருவாசகம் பாட அனுமதிப்பில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக அவ்வப்போது நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 

திருவிழா நேரங்களில் கோயில் கனகசபை மீது பக்தர்களை ஏற்றாமல் இருப்பது, தீட்சிதர்கள் தங்களது குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் செய்வது போன்ற குற்றச்சாட்டுகளும் எழுந்து அதுகுறித்த வழக்குகளும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியில் காரைக்கால் மாவட்டத்திலும், 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களை பொது தீட்சிதர்கள், முறையாக பராமரிக்கவில்லை என்பதால் அவற்றை மீட்டு பாதுகாக்க வேண்டும்.brahmins and templeஇதுதொடர்பாக முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பி உள்ளேன். அந்த புகார் கடலூர் கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், மாவட்ட கலெக்டர் விசாரணை கூட்டம் கூட்டிய போதும், அதன்பின் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியளிப்பதாகவும் கடந்த 2017-18 முதல் 2021-22 வரையிலான வரவு செலவு கணக்கு புத்தகங்களைத் தீட்சிதர்கள் தாக்கல் செய்ய வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அந்த அறிக்கையில், சிதம்பரம் நடராஜர் கோயில் நிலங்கள் தொடர்பாக விசாரணை நடத்த 09.03.1976ம் ஆண்டு சிறப்பு தாசில்தார் தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். அவர் விசாரணை நடத்தி 23.8.1979ல் ஓர் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் 295.93 ஏக்கர் நிலம் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. பின்னர் பொது ஏலம் மூலம் குத்தகைக்கு விடப்பட்டு, ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 215.65 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. 

இதன்மூலம் 506.97 ஏக்கர் நிலம் தற்போது சிறப்பு தாசில்தாரிடம் உள்ளது. தற்போது கோயிலுக்கும் சொந்தமாக 3,489.58 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் நஞ்சை நிலம் 2,594.40 ஏக்கரும், புஞ்சை நிலம் 895.18 ஏக்கரும் உள்ளது. கோயிலுக்கு நிலத்தை தானமாக எழுதி கொடுத்தவர்களின் வாரிசுகள் வசம் உள்ள 1,267.09 ஏக்கர் நிலத்தில் இருந்து கிடைக்கும் வருமானம் கோயிலுக்கும், தர்ம காரியங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மீதமுள்ள 271.97 ஏக்கர் நிலங்களின் மூலமாக கிடைக்கும் வருமானம் கோயிலுக்கு செலுத்தப்படுவதில்லை. எழுதி வைத்தவர்களின் வாரிசுகளே அந்த சொத்துகளை அனுபவித்து வருகின்றனர்.

சிதம்பரம் அறநிலையத் துறை ஆய்வாளர் தாக்கல் செய்த அறிக்கையில், 1984ம் ஆண்டு 113 கட்டளைகள் இருந்தன. கட்டளை நிலங்களை கட்டளைதாரர்கள் நிர்வகிக்கின்றனர். இவர்கள் தீட்சிதர்களின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படுகின்றனர். அதேபோல கட்டளைதாரர்கள் கோயிலுக்கு வழங்க வேண்டிய தொகையை தீட்சிதர்கள் வசம் அளிக்கின்றனர். அதற்கு எந்த முறையான கணக்கு விவரங்களும் இல்லை. இந்த தகவலைச் சிறப்பு தாசில்தார் விசாரணை நடத்தியபோது கட்டளைதாரர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக பதிலளிக்க தீட்சிதர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், அவர்கள் இதுதொடர்பான வழக்கு கடந்த 2017ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளனர். கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் 1221 பேர் குத்தகைதாரர்களாக உள்ளனர். அவர்களிடம் இருந்து கடந்த 8 ஆண்டுகளில் ரூ.36 லட்சத்து 41 ஆயிரத்து 191 வசூலிக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்காக மின்கட்டணம் கடந்த 8 ஆண்டுகளில் 26 லட்சத்து 29 ஆயிரத்து 763 ரூபாயை சிறப்பு தாசில்தாரே செலுத்தி உள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 18.52 ஏக்கர் நிலங்கள் கடந்த 1974, 1985 மற்றும் 1988ம் ஆண்டுகளில் தீட்சிதர்களால் மூன்றாவது நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதற்கான பத்திரப்பதிவு சேத்தியாதோப்பு மற்றும் சிதம்பரம் எண். 1 இணை சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலங்களை மீட்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொது தீட்சிதர்கள் ஒத்துழைப்பு அளிப்பது இல்லை. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடுமையான நடவடிக்கை தேவை

சிதம்பரம் கோயில் நிலங்களை தீட்சிதர்கள் விற்றதை ஆதாரங்களுடன் தமிழக அரசு அம்பலபடுத்திய நிலையில், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுநல சமூக அமைப்புகள் நீதிமன்றத்துக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளன. இதேபோன்று பிரசித்தி பெற்ற பல கோயில் நிலங்களின் சொத்துக்கள் தீட்சிதர்களால் விற்கப்பட்டதா? என்ற கள ஆய்வுகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

- விடுதலை இராசேந்திரன்