கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினரையும் பணியில் அமர்த்து!

தமிழக அரசின் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் வேத, ஆகம, வழிபாட்டு முறை ஆகியவற்றைக் கற்று, உரிய சமயத் தலைவர்களிடம் தீட்சையையும் பெற்ற 206 பேர் கடந்த பல ஆண்டுகளாக பணி அமர்த்தப்படாமல் காத்துக் கிடக்கின்றனர். அவர்களது நியமனத்துக்கு எதிராக ஆதி சைவ சிவாச்சாரிகள் நல சங்கம் என்ற பெயரில் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு 2015 டிசம்பரில் தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டது.

அந்த தீர்ப்புக்குப் பின்னர்தான், கேரள அரசு 6 தாழ்த்தப்பட்டோர் உள்பட 36 பார்ப்பனர் அல்லாதாரை தேவஸ்வம்போர்டு கோயில்களில் நியமித்து, அவர்கள் பணியில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கிவிட்டார்கள். கேரள அரசைத் தொடர்ந்து கர்நாடக அரசும் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கப் போவதாக அறிவித்து விட்டது.

TN strike 600இந்த நிலையில், தமிழகம்தான் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த 90 ஆண்டுகளாக பல்வேறு வழிகளில் வலியுறுத்தும் மாநிலமாக இருந்து வருகிறது.

இனியும் தமிழக அரசு எவ்வித சலனமும் இன்றி அமைதி காக்கக் கூடாது; உரிய பயிற்சியில் தேர்ச்சி அடைந்துள்ள 206 பேரையும், மேலும் காலம் தாழ்த்தாது, தமிழக அரசின் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் உடனடியாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம், சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தினரால் ஒருங்கிணைக்கப்பட்டது.

30.10.2017 திங்கள் அன்று காலை 10 மணியளவில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு முன்புறம் கூடி, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் தலைமைச் செயலகம் நோக்கிப் புறப்பட்டபோது சிறிது தூரத்திலேயே காவல்துறை தடுத்து நிறுத்தி கைது செய்தது. 25 பெண்கள் உள்பட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் நாமக்கல் சாமிநாதன், காஞ்சிபுரம் இரவி பாரதி, திருப்பூர் முகில்ராசு, சூலூர் பன்னீர்செல்வம், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, மாநில பொருளாளர் திருப்பூர் துரைசாமி, விழுப்புரம் அய்யனார், ‘இளந்தமிழகம்’ செந்தில், ‘ஜாதி ஒழிப்பு விடுதலை முன்னணி’ ஜெயநேசன், ‘அனைத்துத் தமிழ்நாடு மாணவர் கழகம்’ சரவணன், ‘பெரியார் சிந்தனையாளர் இயக்கம்’ தீனா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கைது செய்யப்பட்ட அனைவரையும் சிந்தாதிரிப்பேட்டை சமூக நலக் கூடத்தில்  தடுத்து வைத்திருந்த காவல்துறை மாலை 6 மணிக்கு விடுதலை செய்தது.