கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

அவதூறு – ஆபாசப் பேச்சுகளுக்காக ஒரு வருடம் சிறைத் தண்டனைப் பெற்றுள்ளார் ‘ஆன்டி இந்தியன்’ ராஜா. ‘குற்றம்சாட்டப்பட்டவர்’ என்ற நிலையில் இருந்து ‘குற்றவாளி’ என்ற பதவி உயர்வை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. சொந்தக் கட்சியில் கிடைக்காத ஒன்று, நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருக்கிறது. பிணையில் வெளிவந்துள்ள ‘குற்றவாளி’ நீதிமன்ற வாசலில் ‘போர் முழக்கம்’ செய்திருக்கிறார்.

“திராவிடன் ஸ்டாக்குகளுக்கு எதிரான எனது தத்துவார்த்தப் போராட்டம் தொடரும்” என்கிறார். ‘சூனாபானா’ வடிவேலு மீசையை முறுக்குகிற காட்சிதான் நினைவுக்கு வருகிறது.

அண்ணா, நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்புமிக்க உரையில் பயன்படுத்தியச் சொல் ‘திராவிடன் ஸ்டாக்’ அதைத்தான் ‘இந்தக் காமெடி’ பார்ப்பனர் தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருகிறார்.

“2018இல் லெனினுக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு? திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது சரி; தமிழ்நாட்டில் ஈ.வெ.ரா சிலை” என்று ‘ட்வீட்’ ஒன்றை போட்டார். பா.ஜ.க. தலைவர் தமிழிசையும், பொன்.ராதாகிருஷ்ணனும் இது பா.ஜ.க. கருத்து அல்ல அவரது சொந்தக் கருத்து என்று முகத்தில் கரியை அப்பினார்கள். பிறகு இந்தத் தத்துவார்த்தப் போராட்ட சிங்கம், அது நான் போட்டது அல்ல; என் ‘அட்மின்’ போட்டார் என்று கர்ஜித்தது. இப்போது இந்த “பிராமணாள்” நான் அப்படி பெரியார் பற்றிய பதிவிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிமன்றத்தில் ‘பல்டி’ அடித்தது.

“ஆமாம். நான் அப்படித்தான் பேசினேன், எதிர் வழக்காடப் போவது இல்லை. நீதிமன்றம் எந்த அளவுக்கு அதிகபட்ச தண்டனை தருமோ, தரட்டும், ஏற்கத் தயார்” இதுதான் ஒவ்வொரு வழக்கையும் பெரியார் எதிர்கொண்ட முறை. பெரியார் நடத்திய வீரம் செறிந்த தத்துவப் போராட்டம்.

இந்த ‘கோமாளி’ பெரியாரை தரம் தாழ்ந்து பேசுகிறது.

ஒன்றியத்தில் தங்களுக்கு சாதகமான ஆட்சி என்ற திமிரில் “நீதிமன்றமாவது மயிராவது” என்று பேசிவிட்டு, பிறகு நீதிமன்றம் போய், “அய்யா, மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று மண்டியிட்ட “மாவீரன்” தான் இந்த “ஆன்டி இந்தியன்”.

இந்தத் தத்துவார்த்த சிங்கம், வேத காலங்களில் ஜாதிப் பாகுபாடுகளே கிடையாது என்று அதிரடியாக ஒரு பேட்டியளித்தது. கல்கி கிருஷ்ணமூர்த்தி எனும் ‘பிராமணர்’, எம்.எஸ்.சுப்புலட்சுமி என்ற கலைஞர் ஜாதியைச் சார்ந்த பெண்ணைத் திருமணம் செய்தார். அந்தத் திருமணத்தை எவரும் எதிர்க்கவில்லையே” என்ற ஒரு குண்டை வீசியது. நல்லவேளை ’கல்கி’ கிருஷ்ணமூர்த்தி குடும்பம் உயிருடன் இல்லை; இருந்திருந்தால் குடும்பத்தில் பெரும் குழப்பம் வெடித்திருக்கும். எம்.எஸ்.சுப்புலட்சுமி கணவர், ‘கல்கி’ சதாசிவம். கல்கி கிருஷ்ணமூர்த்தி அல்ல. கணவரையே மாற்றிய ‘அறிவுஜீவி’ இதற்கு அட்மின் பேர் கூறி தப்பிக்க முடியாது.

“வேதத்தை எழுதிய வேத வியாசர் ஒரு மீனவர்; வேதம் ஜாதிப் பார்த்ததா?” என்று மற்றொரு ‘அதிர்ச்சி’ தந்தார்.

‘அய்யா, தத்துவப் போராளியே, வேத வியாசர் எழுதியது மகாபாரதம்; இதுகூடவா தெரியாது’ என்று கேட்டால், “நீ திராவிடன் ஸ்டாக்” அப்படித்தான் பேசுவாய் என்று வேத மொழியில் (அதாவது கெட்ட வார்த்தைகளில்) மந்திரம் ஓத ஆரம்பித்து விடுவார்.

அண்ணாமலை தலைவராக வந்தவுடன் கட்சிக்குள் ஒரு ‘களை’ எடுப்பு நடந்தது. ‘பூணூல்களை” முகம் காட்டவிடாமல் ஓரம் கட்டிவிட்டார். பாஜகவின் பூணூல் முகத்தை மாற்றி “பிற்படுத்தப்பட்டோர்” முகமூடி போட்டு கட்சி நடத்துகிறார் அண்ணாமலை. பா.ஜ.க.வுக்குள் பார்ப்பன இனப்படுகொலை நடக்கிறது என்று புலம்புகிறார் எஸ்.வி.சேகர்.

‘ஆரிய ஸ்டாக்’ சர்மா ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நீர் சித்தாந்தப் போராட்டம் நடத்த வேண்டியது, உங்கக் கட்சிக்குள் தான். கே.டி.ராகவன் ஆதரவுக்கரம் நீட்ட மாட்டார். நாராயணன் திருப்பதியும், கேசவ விநாயகமும் பதுங்கி விடுவார்கள். காஞ்சி விஜயேந்திரன் வேண்டுமானால் ஆதரவு தரலாம். அதுவும் அவர் ‘மவுனநிலை’யில் இல்லாமல் இருக்க வேண்டும்.

2018இல் எச்.ராஜா ‘திமிர்’ கருத்து - எதிர்வினையாற்றிய தோழர்கள்

திரிபுராவில் லெனின் சிலை உடைப்பை நியாயப்படுத்தி, தமிழ் நாட்டிலும் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பதிவிட்டதைத் தொடர்ந்து அதற்கு எதிர்வினைகளும் எழுந்தன. சென்னையில் மயிலாப்பூர் பகுதியில் வர்ணாஸ்ரமத்தை அடையாளப்படுத்தி, தாங்கள், ‘பிராமண பிறப்பில்’ வந்தவர்கள் என்று அடையாளப்படுத்தும் ‘பூணூலை’ கழகத் தோழர்கள் சில பார்ப்பனர்களிடமிருந்து அறுத்து எதிர்வினையாற்றினர். இதில் இராவணன், உமாபதி, இராஜேஷ், பிரபாகரன் ஆகிய நான்கு தோழர்கள் காவல்துறையில் தாமாகவே முன்வந்து கைதாகினர்.

மயிலாடுதுறையில் ஆரிய இராமனை செருப்பாலடித்ததாக 14 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். மீத்தேன் எதிர்ப்பு கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்றதால் அவரும் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் மகேஷ், நடராசன், மகாலிங்கம், இளையராஜா, செந்தில் குமார், நாஞ்சில் சங்கர், விஜயராகவன், தில்லைநாதன், கார்த்திக், திராவிடன் ஜாஹிர், கவிஞர் முருகதாசன், சுப்பு மகேஷ் (தமிழர் உரிமை இயக்கம்), ராஜசேகரன் (மக்கள் அரசு கட்சி) ஆகிய 14 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். பூணூல் அறுப்பைக் கண்டித்து நடிகர் எஸ்.வி. சேகர் தலைமையில் மயிலாப்பபூரில் பார்ப்பனர்கள் பொதுக் கூட்டம் நடத்தினர். இராமன் படம் செருப்பால் அடிக்கப்பட்டதை எதிர்த்து மயிலாடுதுறையில் வணிகர்களை கடையடைப்பு செய்யுமாறு பா.ஜ.க.வினர் மிரட்டி கடைகளை மூட வைத்தனர். பல ஊர்களில் கழகத்தினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். தோழர்களின் போராட்டம் வீண் போகவில்லை.

- கோடங்குடி மாரிமுத்து