வேதத்தின் வடிவமாக தன்னைப் பாராட்டிக் கொள்ளும் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன். சனாதன மதம் தான் ‘இந்து மதம்’ இந்துமதம் என்ற ஒன்று இல்லை. நான் இப்பெயரை உச்சரிக்கவே மாட்டேன்” என்று உண்மையை கக்கினார்.

பேட்டிகளில், வர்ணாஸ்ரமத்தை வெளிப்படையாகப் பேசுகிறவர், ‘பிராமணர்களை’த் தவிர ஏனையவர் அர்ச்சகராவதை வேதம் அனுமதிக்கவில்லை என்று பேசினார். ஆகமப் பயிற்சிப் பெற்ற இரண்டு அர்ச்சகர்கள் நியமனத்தை எதிர்த்து வழக்குத் தொடுத்தார். மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன், இரண்டு அர்ச்சகர்கள் நியமனம் ஆகமத்துக்கு எதிரானது என்று கூறி அர்ச்சகர் நியமனத்தை ரத்து செய்தார்.

ஆகமும் வேதமும் பேசிய வேத பண்டிதர் ரங்கராஜன், துணை முதல்வர் உதயநிதி பற்றி அவதூறு பரப்பிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீ பெரம்புதூர் எம்.ஆர்.ஜீயர் என்பவர் தன்னிடம் பேசிய தொலைப்பேசி உரையாடலை மோசடி செய்துத் திருத்தி யூடியுப்பில் வெளியிட்டதாகப் புகார் கொடுத்தார்.

துணை முதல்வர் உதயநிதி தங்களிடம் ‘பிராமண தோஷம்’ கழிந்ததாக ஜீயர் கூறியதாக ரங்கராஜன் யூடியுப்பில் வெளியிட்டு ள்ளது உண்மையல்ல. அவ்வாறு தான் கூறவில்லை என்று ரங்கராஜன் மீது காவல்துறையில் புகாரில் கூறியிருந்தார். மத்தியப் பிரிவுப் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ரங்கராஜனை வீட்டில் கைது செய்து விசாரணை நடத்தினர். பிறகு நீதிமன்றத்தில் நிறுத்தி ரிமாண்ட் ஆணை பெற்று சிறையில் அடைத்தனர்.

எதிரிகளைச் சாகடிப்பதற்கு வேத மந்திரங்கள் இருக்கின்றன. அசுரர்களை (திராவிடர்களை) அழிப்பதற்கு பார்ப்பனர்கள் யாகம் நடத்தியுள்ளனர். வைக்கம் போராட்டத்தில் பெரியார் இறக்க வேண்டும் என்று சத்ரு சம்ஹார யாகம் நடத்தினர்.

யாகத்துக்கு சக்தி எல்லாம் ஒன்றும் கிடையாது என்று முடிவெடுத்த ரங்கராஜன் நரசிம்மன், யூடியுப் தான் வேதத்தை விட சக்தி மிக்கது என்ற முடிவுக்கு வந்தார். அதிலும் தில்லுமுல்லு செய்து வெட்டி ஒட்டுதல் செய்யவும் தயாரானார். இப்போது கைது செய்யப்பட்டு ஜாமீன் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஜாமீன் பெற வேத மந்திரம் இருக்கிறதா? என்பது தெரியவில்லை.

- விடுதலை இராசேந்திரன்