அரசியல் சட்டத்தைப் பின்னுக்குத் தள்ளி விட்டு மனுஸ்மிருதியைச் சட்டமாக்கி விட்டது ஒன்றிய ஆட்சி என்று நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் நிகழ்த்திய உரை வரலாற்றுச் சிறப்புடையதாகும்.
“மனுஸ்மிருதி தான் நமது தேசத்தின் ஆன்மீகம் மற்றும் தெய்வீகப் பயணத்தின் குறியீடு. வேதங்களுக்குப் பிறகு மிகவும் வணங்குவதற்கு உரியது. நமது அரசியல் சட்டத்தில் இந்தியர்களுக்கு என்று எதுவுமில்லை” என்ற இந்துமகா சபைத் தலைவர் சாவர்க்கர் உரையை மேற்கோள் காட்டி தனது உரையைத் தொடங்கினார் ராகுல்.
“பிராமண” – “சூத்திர”ப் பாகுபாடுகளை விதியாக வகுத்துத் தருவது ’மனுஸ்மிருதி’. பிறப்பால் உயர்ந்த குலத்தவன் பிராமணன், சூத்திரன் அடிமை, இழிகுலம், வெறுக்கத்தக்கவன் என்ற கொடிய நஞ்சைக் கக்குவது மனுஸ்மிருதி. மனு சாஸ்திரத்தை தமிழ்நாடு முழுவதும் எரிக்கும் போராட்டத்தைத் திராவிடர் விடுதலைக் கழகம் அம்பேத்கர் பிறந்தநாளில் (ஏப் 14,2013) நடத்தியது. அதுவும் பெண்கள் தலைமையில் நடத்தியது. 1927, டிசம்பர் 25இல் அம்பேத்கர், மனுஸ்மிருதி எரிக்கும் போராட்டத்தை நடத்தினார். தனது பார்ப்பன நண்பரான கங்காதர் நீல்கார்க் கரங்களில் கொடுத்து எரிக்க வைத்தார்.
மனுஸ்மிருதியை எரித்த அம்பேத்கர் அரசியல் சட்ட வரைவுக்குழுத் தலைவராக இருந்து, சட்டத்தை உருவாக்கி அதில் முதன்மையான பங்கு வகித்தார், அம்பேத்கர் எரித்த மனு சாஸ்திரத்தையும், அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டத்தையும் இரு கரங்களில் ஏந்தி, ராகுல் அரசியல் சட்டத்தை மனுஸ்மிருதியால் ஒன்றிய ஆட்சி நசுக்குகிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.
ஒன்றிய ஆட்சி திணித்து வரும் ‘இந்துத்துவா’ என்ற அரசியல் கோட்பாடு மனுஸ்மிருதியின் மறு பதிப்பு தான் என்று உறுதியாகக் கூறலாம். அந்த அரசியல் சொல்லாடலை வழங்கிவரும் மனுஸ்மிருதியே நமக்கான சட்டம் என்று கூறிய சாவர்க்கர் தான்.
‘இந்துராஷ்டிரம்’ என்ற ‘இராமராஜ்ஜியம்’ மன்னர் ஆட்சி வழியாகவே நிறுவ முடியும். ஜனநாயகம் பேசும் இந்திய அரசியல் சட்டம் மன்னராட்சி முறையை ஒழித்துவிட்டது. எனவே சட்டத்தின் ஜனநாயகம் – மதச்சார்பின்மை என்ற கூறுகளைப் படிப்படியாகப் பலவீனப்படுத்தி, அதில் இந்துராஷ்ராவுக்கான ‘பாகுபாடு’ ஒடுக்குமுறைப் பிரிவுகளைச் சட்டத்துக்குள் புகுத்துவதற்கான முயற்சிகளே இப்போது நடக்கின்றன.
மதச்சார்பின்மை என்ற சொல் அதற்குத் தடையாக நிற்கிறது. அது அவசர நிலை காலத்தில் புகுத்தப்பட்ட சொல் என்பதால், நீக்கிவிட வேண்டும் என்கிறார்கள். மதப்பாகுபாடுகள் அரசியல் சட்டத்தில் (பிரிவு 15,25,28) தடை செய்யப்பட்டுள்ளதால், ‘மதச்சார்பின்மை’ என்ற ’ஸ்டிக்கர்’ ஒட்டத் தேவையில்லை என்று அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதத்திலேயே அதற்கு விளக்கமளித்து விட்டார்.
இந்து ராஷ்டிரத்துக்கு மற்றொரு தடையாக இருப்பது மொழிவழிப் பிரிந்துள்ள மாநிலங்கள். எனவே மாநிலங்களின் அடையாள அழிப்புக்குத் திட்டமிட்டு காய்களை நகர்த்துகிறது ஒன்றிய ஆட்சி. கல்வி. சுகாதாரம், வரி விதிப்பு, நிதி ஒதுக்கல், மாநில அரசுக்கான திட்டமிடும் உரிமைகள், சுற்றுச்சூழல் மற்றும் கனிம உரிமைகள் உள்ளிட்டவற்றில் தலையிட்டு ஒன்றிய ஆட்சி, கொள்கைகளையும், சட்டத் திருந்தங்களையும் திணித்துக் கொண்டிருக்கிறது. கிரிமினல் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் சூட்டப்படுகிறது. ஒன்றிய ஆட்சியின் திட்டங்களுக்கு ‘இந்து ராஷ்டிராவின்’ தெய்வீக மொழியான சமஸ்கிருதப் பெயர் சூட்டப்படுகிறது. மாநில மொழிகளுக்கான வளர்ச்சி நிதி ஒதுக்கீட்டில் மக்களே பேசாத சமஸ்கிருதத்துக்கு பல மடங்கு நிதி ஒதுக்கப்படுகிறது.
வர்ணாஸ்ரமத்தை மீறி தவம் செய்த ‘சூத்திரன்’ சம்பூகனுக்கு மரண தண்டனை வழங்கிய இராமனைத் தேசியக் கடவுளாக்கிக் கோயில் கட்டுகிறார்கள். நாடாளுமன்றத்தின் புதியக் கட்டடத்தை ‘வேத முறைப்படி’ ‘இந்து’ சடங்குகளோடு நடத்துகிறார்கள். நாடாளுமன்றத்தின் தலைவராக அரசியல் சட்டம் கூறும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவே இல்லை. காரணம் அவர் ‘சம்பூகன்’ வழிவந்த பழங்குடி சமூகத்தைச் சார்ந்தப் பெண்.
மக்களாட்சிக்கு மாற்றாக அதிபர் ஆட்சி முறையைக் கொண்டு வரும் நோக்கத்தோடு ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ என்ற மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வைதீகப் பார்ப்பனிய மதத்தின் பிடியில் இருந்துப் பல தலைமுறைக்கு முன் வெளியேறிய இஸ்லாமியர் – கிருஸ்துவர்களின் மத அடையாளங்களும், உரிமைகளும் பறிக்கப்பட்டு வருகின்றன.
1991ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தம், மத நிறுவனங்கள் இடிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது. 1947 – ஆகஸ்ட் 15க்குப் பிறகு கோயில், மசூதி, சர்ச்சுகள் உள்ளிட்ட வழிபாட்டு இடங்கள், அப்படியே நீடிக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு வந்துவிட்டது. நீதிமன்றத் தீர்ப்புக்காக நாடு காத்துக் கொண்டிருக்கிறது.
இஸ்லாமியர்களுக்கான நலத்திட்டங்கள் நிறுத்தப்படுகின்றன. வக்பு வாரியத்தில் இந்துக்களை உறுப்பினராக்க சட்டத்தைத் திருத்துகிறார்கள். ‘குடியுரிமை’ சட்டத்தில் மத அடையாளத்தைப் புகுத்திச் சட்டத்தைத் திருத்துகிறார்கள். பொது சிவில் சட்டம் கொண்டுவந்து சிறுபான்மையினரின் மத அடையாளங்களை பறிக்க வேண்டும் என்கிறார்கள். பாகுபாடுகளையும், இழிவுகளையும் சுமந்து கொண்டிருக்கும் இந்து சமூகத்தில் அனைவரையும் சமத்துவமாக்க பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர தயாராக இல்லை. காரணம் என்ன? இந்த ‘இழிவும்’ ’பாகுபாடும்’ தான்பார்ப்பனியத்தின் கொள்கை. இதுவே இந்துராஷ்டிரத்தின் நோக்கம்.
பொதுத்துறை நிறுவனங்களை அரசிடமிருந்துப் பறித்து அம்பானி - அதானி என்ற ’இந்துத்துவா’ தனியார் பெரு முதலாளிகளிடம் தாரை வார்க்கிறார்கள். மசூதிகள் ஒவ்வொன்றாக இடிக்க வேண்டும் என்றும், அதற்கு கீழே இந்துக் கோயில்கள் இருக்கிறது என்றும், ‘கடப்பாறை’ யை தூக்குகிறார்கள்.
எச்சரிக்கிறார் ராகுல்!
- விடுதலை இராசேந்திரன்