இந்த முறை கூட கடந்த மாதம் 25ஆம் தேதி குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து அமளி காரணமாக மக்களவை, மாநிலங்களவை தொடர்ச்சியாக முடங்கி வருகிறது. சூரிய ஒளி மின்சக்தி திட்டங்களை பெற தொழிலதி பர் அதானி இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்காக் கூறிய குற்றச்சாட்டு குறித்து விவாதம் நடத்த வேண்டுமென்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. ஆனால் இதற்கு அரசு மறுத்ததால் ஆரம்பத்தில் அமளி ஏற்பட்டது. இந்த அமளி ஓரிரு நாளில் அடங்கக் கூடிய சூழல் உருவான நிலையில், குற்றச்சாட்டைத் திசை திருப்பவும். அமளியை அடங்காமல் பாது காக்கவும், காங்கிரஸ் மேலிடத் திற்கும் அமெரிக்க தொழிலதிபர் சோரசுக்கும் தொடர்பிருப்பதாக வும் எந்த ஆதாரமும் இல்லாமல் பாஜ குற்றம்சாட்டியது.
இதுதொடர்பாக விவாதிக்க மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து மீண்டும் அமளி வெடித்தது. அரசியலமைப்பு குறித்து மக்களவையிலும், மாநிலங்களவையிலும் விவாதம் நடத்த தேதி குறித்த நிலையில், அதுதொடர்பான விவாதம் தொடங்கும் முந்தைய நாள் “ஒரே நாடு - ஒரே தேர்தல்” சட்ட மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கிறது. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் முறையாக நடந்து விடக் கூடாது என்பதில் பா.ஜ. பக்கா பிளான் போட்டு வேலை செய்வது உறுதியாவதாக எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவை நிறைவேற்ற அவை யில் 3ல் 2 பங்கு பலம் தேவை. இத்தகைய பலம் தங்களுக்கு இல்லை என்பது தெரிந்தும், எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கும் இந்த விவகாரத்தை கொண்டு வந்து நாடாளு மன்றத்தை செயல்பட விடாமல் முடக்கிவிட வேண்டுமென்பதுதான் பாஜவின் திட்டம். சரி ... எதற்காக இந்த அமளி உத்தி? அமளி நடக்க வேண்டும். அதன் மூலம் எதிர்க்கட்சிகள் எம்பிக் கள் வெளிநடப்பு செய்ய வேண்டும் அல்லது அவர் களை வெளியேற்றும் சூழலை உருவாக்க வேண்டும். அவை யில் குறைவான எம்பிக்களை கொண்டு மசோதாக்களை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்ற வேண்டும். இதுதான் பாஜ போட் டுள்ள பக்கா பிளான்.
இம்முறை 100 ஆண்டுகள் பழமையான கொதிகலன் சட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 90 ஆண்டு பழமையான விமான சட்டத் திற்கு பதிலாக புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. இதைப் பற்றி எல்லாம் அவையில் பெரிய அளவில் விவாதம் நடத்தவில்லை. இவ்வாறு விவா தம் நடத்ததால் மசோதாவில் என்ன கூறியிருக்கிறார்கள். என்னென்ன பாதகமான அம்சங்கள் உள்ளன என்பதை அறியாமலேயே நிறைவேற்றப்பட்டு விடுகின்றன. இதற்கு முந்தைய கூட்டத் தொடர்களில் அமளியை தங்களுக்குத் சாதகமாகப் பயன்படுத்தி பல முக்கியமான மசோதாக்களை பாஜக நிறைவேற்றி உள்ளது. இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. கடும் சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்கள் நிறைவேற்றியபோது கூட பெரிய அளவில் விவாதம் நடத்தவில்லை. அதைவிடக் கொடுமை அந்த சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதா, வெறும் 4 நிமிடத்தில் எந்த விவாதமும் இல்லாமல், அமளி துமளிக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது நினைவிருக்கலாம்.
கடந்த குளிர்கால கூட்டத் தொடரில், நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 146 பேரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து அந்தக் களேபரத்தைச் சாதகமாக பயன்படுத்தி, மிக முக்கியமான குற்றவியல் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதேபோல, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு பதிலாக ஒன்றிய அமைச்சரை இடம் பெறச் செய்யும் சட்ட மசோதாவும் அமளிக்கு இடையே விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது. இதுபோல இன்னும் பல உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இதுவா நாடாளுமன்ற ஜனநாயகம்? நாடாளு மன்றம் அமளி நடக்கும் இடமல்ல, ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடக்க வேண்டிய இடம். எதிர்க் கட்சிகளின் கருத்துகளை அரசு காது கொடுத்து கேட்க வேண்டிய இடம். ஆக்கப்பூர்வமான விவாதங்கள் மூலம் மசோதாவில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். இதை ஆளும் தரப்பின் தோல்வியாகக் கருதக் கூடாது. ஆனால் அத்தனையும் இன்று கேலிக்கூத்தாக்கி வருகிறது. நாடாளுமன்றத்தின் மீதான நம்பிக்கையை பா.ஜ. தனது சுயநலத்திற்காக பாழாக்கி வருவது தான் வேதனையான உண்மை.
அதிசய அவைத்தலைவர்
இதுவரை நாடாளுமன்ற வரலாற்றில் இல்லாத வகையில், மாநிலங்களவைத் தலைவரான துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை பதவியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீசைக் கொடுத்துள்ளன. இதற்கு காரணம், தன்கர் பா.ஜ. செய்தி தொடர்பாளரைப் போல் அவையில் நடந்து கொள்வதுதான் எனக் காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. மாநிலங்களவையில் விதிகளை விட அரசியலுக்கு முன்னுரிமைத் தரப்படுவதாகவும் கூறி உள்ளது. பக்கச் சார்பற்றவராக இருக்க வேண்டிய அவைத் தலைவர் பக்கா பா.ஜ. தலைவராக இருப்பது தான் பிரச்னைக்குத் காரணம்.
என்ன காரணம்?
எந்த மசோதா மீதும் விவாதம் நடத்துவதை பாஜ விரும்பவில்லை. விவாதம் நடத்தினால், அந்த மசோதா வை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படும். தங்களுக்கு வேண்டிய சில முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியாமலேயே போய்விடும். உதாரணத் திற்கு வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் இந்த மசோதா கடந்த கூட்டத்தின் போது நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இம்முறை கூட்டுக்குழு பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதால், இந்த மசோதா நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டு வர முடியாமல் போய் விட்டது. ஆகவே, மசோதாவை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுவதை பா.ஜ. விரும்பவில்லை. எனவே, இப்போதெல்லாம் விவாதமே இல்லாமல் நாடாளுமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்கள் டான்டான் என நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
விவாதம் வீண் வாதமா?
கடந்த 17ஆவது மக்களவையில் மொத்தம் 172 மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன. இவற்றில் பாதி எண்ணிக்கையிலான மசோதாக்கள் 2 மணி நேரத்துக்கும் குறைவாகவே அவையில் விவாதிக்கப் பட்டிருக்கின்றன.
172 மசோதாக்களில் மக்களவையில் 16, மாநிலங்கள வையில் 11 மசோதாக்கள் மீதான விவாதத்தில் மட்டுமே 30க்கும் மேற்பட்ட எம்பிக்கள் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 729 தனிநபர் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் 2 மசோதா மீது மட்டுமே விவாதம் நடந்துள்ளது.
2019 முதல் 2023 வரை 80 சதவீத பட்ஜெட் மசோதாக்கள் விவாதம் இன்றியே நிறைவேற்றப்பட்டுள்ளது. 2023இல் முழு பட்ஜெட்டும் விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது. 17ஆவது மக்களவையில் 35 சதவீத மசோதாக்கள் 1 மணி நேரத்திற்கும் குறைவான விவாதத்துடன் நிறைவேற்றப் பட்டுள்ளன. இவற்றில் பல விவாதங்கள் வெறும் சில நிமிடங்களில் முடிந்தவை. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைப்பதால், நாடாளுமன்றத்தில் எந்த மசோதாவையும் அரசால் நிறைவேற்ற முடியும். ஆனால், விவாதமே இல்லாமல் அதை நிறைவேற்ற வேண்டுமென ஆளும் தரப்பு நினைப்பது தான் வேதனை.
20%க்கும் குறைவான மசோதாக்கள் ஆய்வு
கடந்த 17வது மக்களவை செயல்பாடு குறித்த புள்ளி விவரங்களின் படி, நிலைக் குழு உள்ளிட்ட நாடாளுமன்றக் குழுக்களின் ஆய்வுக்கு அனுப்பப்படும் மசோதாக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருப்பதை அறிய லாம். ஐக்கிய முற்போக்குக் கூட்ட ணி ஆட்சியில் 14வது மக்களவையில் 60 சதவீத மசோதாக்களும், 15வது மக்களவையில் 71 சதவீத மசோதாக்களும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதுவே ஒன்றியத்தில் பா.ஜ. ஆட்சிப் பொறுப் பேற்ற பிறகு 16வது மக்களவையில் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களின் எண்ணிக்கை 28 சதவீதமாகவும், 17வது மக்களவையில் 16 சதவீதமாகவும் சரிந்திருக்கிறது. விவாதம் நடத்தினால் தானே ஆய்வுக்கு அனுப்புவது?
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா?
நாடாளுமன்ற மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதான் ஒரே நாடு ஒரே தேர்தல். இதன் பொருள் மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்கள். அடுத்த 100 நாட்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்படும். ஆனால் அவ்வாறு நடக்க வேண்டுமானால் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான இரண்டு அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களுக்கு மோடி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இவை நாடாளுமன்றத்தின் இந்தக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் விரிவான ஆலோசனைகளுக்காக கூட்டு நாடாளுமன்றக் குழுவிடம் (ஜே.பி.சி) ஒப்படைக்கப்படும் என்று நம்பப்படுகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மோடி அரசு இரண்டு திருத்த மசோதாக்களைத் தயாரித்துள்ளது.
வரும் 2029ஆம் ஆண்டு முதல் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் அமலுக்கு கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த வரும் 2026ஆம் ஆண்டு டிசம்பருக்குள் 25 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். அதற்காக இரண்டு அரசியலமைப்பு திருத்த மசோதாக்கள் கொண்டு வரப்பட வேண்டும். அரசியலமைப்பில் மொத்தம் 15 திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். இதன் கீழ், புதிய விதிகள் சேர்க்கப்பட வேண்டும் மற்றும் தற்போதுள்ள விதிகள் திருத்தப்பட வேண்டும். ராம்நாத் கோவிந்த் குழுவின் கூற்றுப்படி, இந்த மசோதாக்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. இதற்கு மாநில அரசுகள் மற்றும் மாநில சட்டசபைகளின் ஒப்புதல் தேவையில்லை. இரண்டாவது மசோதா மாநகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கான தேர்தல்கள் மற்றும் தலைமை தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வாக்காளர்கள் பட்டியலைத் தயாரிப்பது தொடர்பானது. இதில் ஒவ்வொரு வாக்காளரின் விவரங்களும், அவர் எந்த தொகுதியில் இருந்து வாக்களிக்கத் தகுதியுடையவர் என்பது பற்றிய விவரங்களும் இருக்கும். ராம்நாத் கோவிந்த் குழுவின் கூற்றுப்படி, இந்த மசோதா சட்டங்களை உருவாக்கும் முதன்மைப் பொறுப்பு மாநில அரசின் விஷயங்களுடன் தொடர்புடையது. எனவே, இந்த மசோதாவுக்கு குறைந்தபட்சம் பாதி மாநிலங்களாவது ஒப்புதல் அளிக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு மற்றும் பல்வேறு சிக்கல்கள் உள்ளதால் ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
- விடுதலை இராசேந்திரன்