கல்வியைத் தடுக்கும் அப்பாவை கைது செய்யுங்கள்!
சேலம் கே.ஆர்.தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி சீருடையுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு கொடுத்தார். “எனது அப்பா, மது குடித்துவிட்டு என்னையும், எனது அம்மாவையும் அடித்துத் துன்புறுத்துகிறார். என்னை ஸ்கூலுக்கு போகக்கூடாது என்று மிரட்டுகிறார். என் அக்காவையும் மிரட்டி 11ஆம் வகுப்போடு நிறுத்தி விட்டார். நாங்க படிக்க வேண்டும். எங்க அப்பா மீது நடவடிக்கை எடுங்க” என்று கண்ணீர் மல்க கூறினார். இதுதான் தமிழ்நாடு! இதுதான் தமிழ்நாட்டின் கல்வி உளவியல். கல்வியைத் தடுத்தால் பெற்ற தந்தையானாலும் தண்டிக்கும் ‘மண்’.
புதிய சரித்திரம்; அரசே அகற்றும் மருத்துவக் கழிவுகள்!
நெல்லையில் கேரள எல்லையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை கேரள அரசு அதிகாரிகளே நேரில் வந்து லாரிகளில் ஏற்றிச் செல்லும் அதிசயம் – இப்போது தான் நடந்துள்ளது.
தமிழ்நாடு ஆட்சி தலையிட்டது! பசுமைத் தீர்ப்பாயம் கேரள அரசுக்கு உத்தரவிட்டது. கழிவுகளை கொட்டுவதற்கு இடம் தேடி தந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள அரசு அதிகாரிகளே 30 லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரங்கள் வைத்து இரண்டு நாட்களாக கழிவுகளை ஏற்றி கேரளாவுக்குத் திரும்பினர்.
மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது எடப்பாடி ஆட்சியிலும் நடந்தது. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- விடுதலை இராசேந்திரன்