நான், அ.ஞா. பேரறிவாளன், ராஜிவ் கொலை வழக்கில் பொய்யாகப் பிணைக்கப்பட்டு, மரண தண்டனை சிறைவாசியாக அடைக்கப்பட்டுக் கிடப்பவன். எனது கருணை மனு, மேதகு குடியரசுத் தலைவரின் மேலான பரிசீலனையில் இருப்பதால், உயிர் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளவன். 19 வயதுச் சிறுவனாக அடைக்கப்பட்ட நான், 34 வயது நிரம்பிவிட்ட நிலையில் கடந்த 14 1/2 ஆண்டுகளைத் தனிமைச் சிறையின் மன இறுக்கத்திலும், துன்பப் பொருமல்களிலும் காலம் கரைப்பவன். வயதின் முதிர்ச்சியும், உயிர்க்காப்புப் போரின் அயர்ச்சியும் தந்துவிட்ட - மாறாத தழும்புகளைச் சுமந்து திரியும் பெற்றோரின் ஒரே புதல்வன் நான்.

இந்நிலையில், என்னுடைய வழக்குத் தொடர்பாக இரு வேறு முக்கியத் திருப்பங்கள் ஏற்பட்ட காரணத்தினால், இம்மடலை எழுதுகிறேன். முதலாவது காரணம், குடியரசுத் தலைவர் எமக்குக் கருணை காட்டும்படி அரசுக்குப் பரிந்துரைத்த செய்தி அறிந்த பிறகு கொண்ட நம்பிக்கையும், மகிழ்ச்சியும். இம்முறையீட்டு மடலுக்கான இரண்டாவது மிக முக்கியக் காரணம், எமது வழக்கின் முன்னாள் தலைமைப் புலனாய்வு அதிகாரியும், ‘பல்நோக்குக் கண்காணிப்புக் குழு'வின் அதிகாரியாகவும் அங்கம் வகித்து 2005 மார்ச் திங்களில் ஓய்வு பெற்றவரான ரகோத்தமன் - இக்கொலை தொடர்பாக, ‘குறுந்தகடு' ஒன்றை வெளியிட்டு, அது தொடர்பாக ஏடுகளுக்கு வழங்கிய பேட்டியே.
10.8.2005 நாளிட்ட ‘குமுதம்' வார இதழின் பேட்டியின் இறுதியில் ரகோத்தமன் சொல்கிறார்: ‘‘கொலை நடந்து இத்தனை வருடங்களுக்குப் பிறகும் இரண்டு கேள்விகளுக்கு மட்டும் இதுவரை விடை இல்லை. அவை, சிறீபெரும்புதூரிலிருந்து கொலைக்குப் பிறகு சிவராசனும் சுபாவும் ஆட்டோவில் தப்புகிறார்கள். அவர்களுடன் மூன்றாவது ஒருவரும் பயணிக்கிறார். அவர் யார் என்பது இன்று வரை தெரியவில்லை. மனித வெடிகுண்டு தனு பயன்படுத்திய வெடிகுண்டு பெல்டைத் தயாரித்துக் கொடுத்தது யார் என்பதும் தெரியவில்லை. உங்களில் யாருக்காவது தெரியுமா?''
ஆம். இதுவரை வெளிவராத, கண்டுபிடிக்கவே முடியாமல் உள்ள, பல்நோக்கு கண்காணிப்புக் குழு விசாரணைக்கான கருப்பொருளாக உள்ள இந்த வெடிகுண்டு பற்றிய ரகசியத்தோடுதான், எனது வாழ்வும் கல்வியும் பொய்யாகப் பிணைக்கப்பட்டு, என்னைத் தூக்குக் கயிற்றில் நிறுத்தியிருக்கிறது. எந்த வெடிகுண்டு பற்றி இதுவரை கண்டுபிடிக்கவே முடியவில்லை என்று தன்மைப் புலனாய்வு அதிகாரி இன்று சொல்கிறாரோ, அந்த வெடிகுண்டைச் செய்ததே நான்தான் என்பதாக, என்மீது பொய்யான பிரச்சாரத்தை - இதே மத்தியப் புலனாய்வுத் துறையினர்தான் 1991 ஆம் ஆண்டு, நான் கைது செய்யப்பட்டபோது ஏடுகள் வாயிலாகப் பரப்பினர்.
மரண தண்டனையின் கொடுங்கரங்கள் எனது வாழ்வைச் சின்னாபின்னப் படுத்தியிருப்பினும், எனது குடும்பத்தார் வாழ்வைத் துன்பக் கடலில் ஆழ்த்தியிருப்பினும், மனிதநேயத்தின் அடிப்படையில் இம்மரண தண்டனையை மாற்றியமைக்க வேண்டும் என்று நான் கோரவில்லை. பிறகு நான் ஏன் தண்டனைக் குறைப்பைக் கோருகிறேன் எனில்,
‘‘...எனக்கு நன்றாகத் தெரியும் - தலைச்சேரியில் இளம் வழக்குரைஞராக விசாரணை வழக்குகளில் பணி செய்து கொண்டிருந்தபோது பார்த்துள்ளேன். குற்றமற்றவர்கள், நூற்றுக்கு நூறு நிரபராதிகள் தூக்கிலிடப்பட்டார்கள். அவர்கள் ஒரு பாவம் அறியாதவர்கள். அவர்களுக்காக இப்போதும் என் இதயத்தில் குருதி வழிகிறது''
-என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர், 25.6.1998 அன்று திருவனந்தபுரத்தில் மரண தண்டனைக்கெதிரான மாநாட்டில் பேசியதற்கு - உதாரணமாக எனது வாழ்வு அமைந்து விட்டதே என்ற வேதனையோடு என் வழக்கை வைத்துள்ளேன்.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்ட பிறகு நிரபராதி எனத் தெரியவந்த - உலகின் எத்தனையோ நீதியியல் தவறுகளை நாம் கண்டு வருகிறோம். தமிழகத்தில் பாண்டியம்மாள் கொலை வழக்கை எவரும் மறந்திருக்க முடியாது. கொலை செய்து விட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த கணவன் கூண்டில் நிற்க, கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட பாண்டியம்மாள், நீதிமன்றத்தில் தோன்றிய காட்சியை நாடு இன்னும் மறந்து விடவில்லை.
முடிவாக என் வழக்கின் சாரத்தைத் தருகிறேன் : 1. வழக்கு ‘தடா' சட்டப்படி நடந்தது 2. சாதாரண சட்டங்கள் வழங்கிய அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன 3. இறுதியில் இவ்வழக்கிற்கு ‘தடா' பொருந்தாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது 4. அதன் பின்னரும், ‘தடா' வாக்குமூலம் எனும் காவல் துறை அதிகாரி பதிவு செய்த ஆவணத்தின் அடிப்படையிலேயே தண்டனை 5. அந்த வாக்குமூலத்திலும்கூட, சதிச்செயல் எனக்குத் தெரியும் என்பதற்கோ சிவராசன், தனு, சுபா ஆகியோரில் எவரேனும் கூறினர் என்பதற்கோ எவ்வித ஆதாரம் இல்லை.
இவற்றுக்கெல்லாம் மேலாக ‘தடா' எனும் கொடூரச் சட்டத்தால், நீதிமன்ற முறையீட்டு வாய்ப்பு ஒன்று (High Court Appeal) பறிக்கப்பட்டது. மேலும் ஒரு சட்ட வாய்ப்பு எனக்குக் கிட்டியிருக்குமானால், நான் விடுதலை பெற்றிருப்பேன். இந்நிலையில், அந்த முறையீட்டை உங்கள் முன் நான் வைக்கிறேன். நல்லதொரு தீர்ப்பு நல்குங்கள். குற்றமற்ற மனிதனைத் தூக்கிலிடும் கொடுமையிலிருந்து தடுத்தாட்கொள்ள முன்வாருங்கள்!
வழக்கின் புலனாய்வுத் துறையினரும், அவர்களின் செல்வாக்கால் செய்தி ஊடகங்களும், என் குறித்துப் பரப்பிய பொய்யான பரப்புரைகளைப் புறந்தள்ளி, உண்மைக்காக ஏங்கும் இம்மனிதனின் உயிர்ப் போராட்டத்திற்கு உதவுங்கள்.
(அ.ஞா. பேரறிவாளன்)