‘தலித் முரசு' அதன் கடைசிக் கட்டத்தில் இருக்கிறது. பலமுறை எழுதியும் இதுவரை சிறு பலனும் இல்லை. பல்வேறு சோதனைகளுக்கு மத்தியில் கடந்த 14 ஆண்டுகளாக ஓர் இதழ்கூட இடைவெளி இல்லாமல் கொண்டு வந்திருப்பது, மாற்று இதழியல் வரலாற்றில் ஒரு சாதனை என்றாலும் - ஒவ்வொரு இதழும் துயரமான பல சவால்களை கடந்து அச்சாகி வருகிறது. எந்த இயக்கத்தின் பின்புலமோ, சந்தை மோகமோ, விளம்பர வலிமையோ இன்றி... அவ்வளவு ஏன் யாருக்காகப் போராடுகிறோமோ அந்த மக்களின் ஆதரவுகூட இல்லாமல் சில தோழமை சக்திகளின் தார்மீக ஆதரவோடு மட்டுமே இதழை நடத்த - 'தலித் முரசு' எத்தனையோ இன்னல்களை சந்தித்து வருகிறது.
இன்றைய ஊடகச் சூழலையும் சமூக விடுதலையின் சவால்களையும் ஒரு சேர புரிந்தவர்கள் மட்டுமே உணரக்கூடிய வேதனை அது. நிலையான அலுவலகமின்றி இடம் விட்டு இடம் துரத்தப்படுகிறோம். கடுமையான நிதிச் சுமையில் கடன் ஏறிக் கொண்டே போகிறது. ஒடுக்கப்பட்டோருக்கான ஒரே குரலாக இயங்கி வருகிறோம். உரிமை மீறல் எங்கு, எந்தச் சூழலில், எத்தகைய வடிவில் நிகழ்ந்தாலும் அதை எதிர்க்கிறோம். கொள்கைக்கான இந்த பிடிவாதத்தால் இழப்புகள் மட்டுமே பரிசுகளாக மிஞ்சியிருக்கின்றன. சமரசத்தை சிறு துரும்பளவில் ஏற்றுக் கொண்டாலும், அதன் பின் சமரசமே வாழ்வாகிப் போகும் என்ற தெளிவே எங்கள் உறுதிக்கு காரணம்.
இச்சூழலில் இறுதி முயற்சியாக மக்களிடம் வருகிறோம். 'தலித் முரசை' காப்பாற்ற வேண்டியது தலித் மக்களின் உரிமை மட்டுமின்றி, மனித உரிமையில் நம்பிக்கை கொண்ட அனைவரின் கடமையாகும். பெரிய இயக்கங்கள் எல்லாம் இப்போதும் மக்களிடம் நிதி வசூல் செய்யும்போது, மக்கள் விடுதலைக்காகவே இயங்கி வருகிற "தலித் முரசை' காப்பதற்கான நியாயமானதொரு திட்டத்தினை முன்வைக்கிறோம். "தலித் முரசு காப்பு நிதியம்' என்பது அதன் பெயர். இதற்கென தனி வங்கிக் கணக்கு உருவாக்கப்படும். மாவட்டம்தோறும் ஆர்வமுள்ள பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். அவர்கள் நகர, ஒன்றிய அளவில் பொறுப்பாளர்களை நியமிப்பார்கள். இப்பணி செப்டம்பர் - 2010 முடிவடையும். ஒவ்வொரு நகர ஒன்றிய பொறுப்பாளர்களுக்கும் பணித்திட்டம் தரப்படும். அதனடிப்படையிலும் பொறுப்பாளர்களின் பணியாற்றும் தன்மையிலும் "தலித் முரசு காப்பு நிதியம்' என்னும் இயக்கம், அதன் ஒரே குறிக்கோளான நிதி சேர்ப்புப் பணியினை அக்டோபர் மாதம் செய்து முடிக்கும்.
இதில் உடன்பாடுள்ள தோழர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற, ஆலோசனைக் கூட்டங்களை நடத்த, திட்டங்கள் வகுக்க, சரியான காலத்தில் இலக்கை அடைய - இதன் ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள தோழர் யாழன் ஆதியைத் தொடர்பு கொள்ளுங்கள் : 94431 04443;
- ஆசிரியர் குழு