 |
கட்டுரை
இரண்டகம் ஆதவன் தீட்சண்யா
படுக்கையில் சாவதானமாய் ஏறி
போர்வைக்குள் நுழைந்து
கால்களால் என்னை பின்னிக்கொண்டு தூங்கும்
என் செல்லமகளின் உரிமையோடு
கொடிவாகாய் வாலை படரவிட்டு
கழுத்திலொரு மண்டலமும் சுற்றி
உடலோடு அணைந்து படுத்து
காதோரம் தலைசாய்த்து கதை அனந்தம் பேசி
தூங்கவொட்டாமல் விளையாடிக் களித்தது
சர்ப்பம்
கொசுவலையடித்த ஜன்னலையும் மீறி
உள்நுழைந்த மாயம் பிடிபடவில்லை இன்னமும்
உறங்க வரும்முன்
நேஷனல் ஜியாகரபி சேனலில் கடைசியாய் பார்த்தது தான்
கனவில் வந்திருக்குமோ
நிஜமெனில்
அது
விலக்கப்பட்ட கனிக்கு இச்சையூட்டி
ஏவாளைத் தூண்டிய
முதல் கலகக்கார பாம்பாயும் இருக்கக்கூடும்
ஒருவேளை
பரமசிவனின் குண்டலமாய்
எந்நேரமும் விறைத்து கிடக்கப் பிடிக்காமலோ
ஆதிசேடனாய் திருமாலிடம் அழுந்தியிருக்கத் தாளாமலோ
தப்பியோடி வந்து தஞ்சம் புகுந்திருக்குமோ
யோசனையிலும்
கொத்தி நஞ்சேற்றி
கொன்றுவிடுமோவென்ற பீதியிலும்
தூக்கமற்று நான் நெளிந்து கொண்டிருக்க
பாம்போ
சீரான குறட்டையொலியுடன் தூங்கிக்கொண்டிருந்தது
விடிகையில்
இடுப்பிலிருப்பதே தெரியாத மென்மையில்
நெகுநெகுத்து மினுங்கும்
ஒரு புதிய பெல்ட் இருந்தது என்னிடம்
பாவம்,
தோலுரிக்கப்பட்டது தெரியாமல்
நிணம் கசிய
அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறது பாம்பு.
- ஆதவன் தீட்சண்யா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|