 |
கட்டுரை
எழுதுகோல்! அகரம் அமுதா
மையிட்டக் கோலதன்
மெய்ப்பிடித்து –ன்
செய்யிட்ட ஏறண்ண
சேறடித்து...
பொய்யற்ற மெய்கொண்ட
பொருள்விதைத்து –நாம்
உய்வுற்று வாழவோர்
உரைவகுத்து...
உடுக்கைகொள் பையெனும்
உறைகிடக்கும் -நற்
தடக்கைகொள் எழுதுகோல்
தகைவிரிப்பேன்!
ஆலிலை முனையொக்கும்
கோல்முனைகாண் -அது
சாலைக்கொண்டளவொணா
சமுத்திரம்தான்!
தோள்வலி இலானையும்
திறனாக்கிடும் -எழுத்
தாளனாய்ப் புலவனாய்
ஆளாக்கிடும்!
மாளிகை மண்ணாகும்
வகைகற்றகோல் -சிறு
தூளியைத் தூணாக்கும்
தொகைகற்றகோல்!
நாவென்று நாம்வாழ
நானிலத்தே ஓர்
தாவின்றிக் கற்பிக்கும்
தனிப்பெருங்கோல்!
மூப்பென்ற ஒன்றுடலை
மோகித்தப்பின் -கைக்
காப்பென்று ஆகும்மரக்
கம்பென்றகோல்!
அவ்வூண்று கோல்தாங்கி
அடங்கிடாமுன் -நம்
கையூண்றும் ஒப்பிலாக்
கோல்எழுதுகோல்!
எண்முனைந் தோதியதை
ஏற்றுஒழுகும் -பெண்
கண்முனை யொத்தகோல்
தாளிலழுகும்!
மாடிமனைத் துயின்றிடும்
மாந்தருக்கும் -தெருக்
கோடிமுனைத் துன்புறும்
கூட்டத்திற்கும்...
ஏட்டில்முனை வைத்தழுகும்
எழுதுகோலே –அவர்
பாடுயற பகுத்தறிவின்
திறவுகோலே!
- அகரம் அமுதா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|