 |
கவிதை
மரணமே முழுமையாய்! அகரம் அமுதா
வித்தொன்றில் உருவாகி விளையாடும் கூடு!
விரும்பிநீ கைப்பற்ற விரைந்தோடும் காடு!
புத்திக்கும் தோன்றாத புதிரினைப் போலே
சித்துவிளை யாட்டாடும் மரணமே!நீ எங்கே?
தித்திக்கும் அமுதமா நஞ்சாஉன் வீடு?
திக்குறங்கும் இரவாநன் பகலாஉன் பாடு?
நத்தியுனைக் கூப்பிட்டோர்க் கொத்துழைக்க மாட்டாய்!
விட்டுவிடென் போரையும்நீ விட்டுவிட மாட்டாய்!
பத்திலொன்று குறைவாகப் பெருந்துளைகள் கொண்டும்
அத்துளைகள் வழிபுறத்தில்; வெளியேறாக் காற்றை
எத்துளையின் வழிபுகுந்து நீயெடுக்கக் கூடும்?
அத்துளையை நானறிய ஆசைமிகக் கொண்டேன்!
நித்திரையும் உனக்கான ஒத்திகையே போலும்!
ஓத்திகைவிட் டென்றுடலம் அரங்கேற்றம் காணும்?
அத்தினத்தை மனமெண்ணி அன்றாடம் ஏங்கும்;!
ஒத்துழைத்து நீவந்தால் முழுமையுறும் வாழ்வும்!
- அகரம் அமுதா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|