 |
கவிதை
உன் ஓரத்தில் நான் அசரீரி
உன்னைப் பார்த்துக்கொண்டும்
உனக்குக் கால் நீட்டிக் கொண்டும் மெல்ல இருக்கிறேன்
கால் மயிர்களுக்குள்
படலைபோல அப்பியிருக்கிறது மண்
இன்னொருமுறை
காலத்தின் எந்தப் பதிவிலுமே கேட்க முடியாததாக
நீ உன்னை இசைத்துக் கொண்டிருக்கிறாய்
புதிது புதிதான மொழிகளிலும் சந்தங்களிலும்
ஒரு கோணத்தில்
உலகத்தின் ஈரமான கீழுதடு போலவும் தெரிகிறாய் நீ
உன்னில் கால்கழுவி நடந்து வரும்போது
மண் அப்புவதை உணர்ந்து
நெஞ்சுக்குள் தானாய் இடிக்கத் தொடங்குகிறது
பல மாதங்களின் பின்னென்றாகிப் போன
உனதும் எனதும் உறவும் பிரிவும்
இப்டித்தானே நிகழ்கிறது இப்போது
உன்னைப் பிரிந்து எழுந்து செல்லப் போவதன் குறியீடுதானது
இனியென்ன செய்ய முடியும் காலத்தை
என்ற கைசேதத்தில்
நீ அலையாகி அடிப்பதாகவும்,
தெரிந்தும் சடங்குக்காய் போகாதே என்பது போல
உப்புத் துளிகளை என் மீது தெறிப்பதாகவும் ஆறுதலுடன்
அடக்கிய பின் திரும்பப்பார்க்கக் கூடாத
மையத்துக்கான விதியையே
மனதுக்குள் உச்சரித்துக் கொண்டு
உன்னை விட்டும் எழும்பி நடந்து வருகிறேன்
நீயும் நானுமாகிய பொழுதின் அமைதிகளை
உனக்கருகில் அடக்கம் செய்த கனத்துடன்
உலகத்துக்குள் திரும்பவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|