 |
கவிதை
விடுபடுதலின் பலி
தீபச்செல்வன்
படிகள் பிரிந்து விழுகின்றன.
உன்னிலிருந்து நான் விடுபடத்துடிக்கிற
எத்தணங்களில்
கனவிலிருந்தும் தூக்கத்திலிருந்தும்
அறிவுருத்தப்பட்டபடி சுலபமாக விடுபடுகிறேன்.
மீளவும் மீளவும்
நீ அச்சுறுத்தியபடியிருக்கிறாய்.
பக்கங்களை பூட்டிக்கொள்ளுகிறேன்.
நீ சொல்லி அனுப்பியபடி
கனவைத் துறந்து
நிறமற்றுக் கிடக்கிறது இரவு.
எழுதிய கவிதைகளினை புதைத்துவிடுகிறேன்.
வெளித்தள்ளுகிற
சொற்களை மலக்குழியில் களித்து
ஒதுங்கியிருக்கிறேன்.
என்னை கவர்ந்து செல்லக் காத்திருக்கிற
தெருவில் நீ நிரப்பி விட்டிருக்கிறாய்
பச்சை மோட்டார் சைக்கிள்களை.
சந்தேகங்களாலும் விசாரணைகளாலும்
அழைத்துக்கொண்டு
குருதி உறைந்த அறைகளை திறந்துகொண்டிருக்க
சிறகுகளில் விலங்கு அணிந்த
கனவின் பறவை துடித்து விழுகிறது.
நீ அழைக்க வந்து செல்லுகிறேன்.
துவக்குகளை
கூர்மையாக்கியபடி திருப்புவதைக் கண்டு
கனவுடன் நான் தூக்கங்களையும்
விடுவித்துத் திரிகிறேன்.
எனது உயிரை
உனது தொலைபேசி உறிஞ்சிக்கொண்டிருக்கிறது.
திறக்கப்பட இருக்கிற பாதையில்
முதலாவதாக நான் வெளியேறிவிடுகிறேன்.
எனக்கென்று இங்கிருந்தவைகளை
விட்டுச்செல்லுகிறேன்.
கனவை கைவிடுவது பற்றிய
உனது எச்சரிக்கை
மரணங்களின் வெளியில்
நிகழ்ந்தபடியிருக்கிறது.
இணைக்கப்பட்டிருக்கிற
நீண்ட தெருவில் அலைச்சல் காத்திருக்க
குறித்த திகதியில்
யாருக்கும் சொல்லாமல்
இருட்டில் நான் போய்விடுகிறேன்.
உன் வருகையினாலும்
திட்டங்களினாலும் நான் அகற்றப்படுகிறேன்.
எனது சனங்கள் காத்திருக்கின்றனர்
உனது விதிமுறைகளுக்குட்பட்ட
துவக்கால்
அகலப்படுத்தவிருக்கிற வாழ்வுக்காய்.
பிரித்தெடுக்கப்பட்ட கனவால் செய்யப்பட்ட
கேலித்தனமூட்டுகிற பொம்மையை
நிறுத்தி வைத்திருக்கிறாய் பேருந்து நிலையத்தில்.
நீ எல்லாவற்றையும் பறித்ததையும்
இங்கிருந்து என்னை துரத்துவதையும்
யாரிடமும் சொல்லாமலிருக்கிறேன்.
உனது துவக்கு எங்கும் ஊடுருவி நிற்கிறது.
இதனால் விளைகிற துக்கத்தையும்
இழப்பையும்கூட சுலபமாக மறைத்து
உனது நிகழ்ச்சி நிரலின் களிப்பில்
எந்த எதிர்ப்புமற்று என்னைப் பலியிடுகிறேன்.
அதிகாரத்தின் முன்னால்
விடுபடுதல் ஒரு பலியென நிகழ்கிறது.
படிகளில் வழிந்தோடுகிறது கனவு.
- தீபச்செல்வன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|