 |
கவிதை
முடிவில்லாததொரு பயணம்
கோகுலன்
எங்கு ஆரம்பித்ததென்று
தெரியவில்லை என் பயணம்
தூக்கம் விழித்துப் பார்த்தால்
பசியெடுத்த குழந்தையாய்
வீறிட்டு அழுது கொண்டிருக்கிறேன்
புகைவண்டியொத்த
இந்த வாழ்க்கைப் பயணத்தினூடே
அடுத்தடுத்த நிறுத்தங்களில் ஏறிக்கொண்டு
பக்கத்து இருக்கையில் அமர்ந்தோரெல்லாம்
அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்
அண்ணன் எனவும் மனைவி எனவும்
பிள்ளை எனவும்....
பயணங்களினூடே அன்பும் காதலும்
பரஸ்பரம் பரிமாறப்பட்டாலும்
எனது கடைசி நிறுத்தம் வரை
என்னுடன் யாரும்
துணைக்கு வருவதாய் தெரியவில்லை!
அவரவர் நிறுத்தங்களில்
அவரவர் இறங்கிக்கொள்ள
இறுதி நாளுக்கப்பாலும்
தொடர்கிறது என் பயணம்
நான் பயணித்த வண்டிகூட இல்லாமல்!
- கோகுலன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|