 |
கவிதை
ஒருபுறச் சமன்பாடுகள்.. கார்த்தி.என்
உறைந்த குளிரிடம்
தோற்றிருந்த சூரியன்
சுரணை கொண்டு சுடத்
தொடங்கியவொரு
பிப்ரவரி மாதத்தைப்
பிளந்தவாறு நின்றது
அந்தக் காதலர் தினம்...
ஏறக்குறைய என்
வாழ்வியலையும்
நாம் நானென இரு கூறுகளாக்கி..
இதில்
நாம் என்று குறித்ததொன்றும்
கூடியிருந்ததன்
வெளிப்பாடன்று..
வெறுமனே ஒருபுறமானதொரு
சாத்தியக் கூறுகளின்
சமன்பாடெனக் கொள்ளலாம்.
அடுத்து வந்த அத்தியாயங்களில்
மனக்கணக்குகளைப்
புறக்கணிக்கும் முனைப்போடு
வாய்ப்பாடுகளுக்கு
வழிவகுத்திருந்தும்
குறிகள் தவறக்கூடிய
குளிர்கால இரவொன்றில்
நீ வந்து போயிருந்தது
லீப் வருடமென
நினைவுக்கு வந்தவனாய்..
வலப்புற வெற்றிடத்தில்
உனக்கான
இருபத்தொன்பதாம்
கவிதையை எழுதத் தொடங்கினேன்..
.......................................................................................................
முயன்று தொலைத்தல்...
குச்சி ஐஸைக்
கடித்துத் தின்றும்
கட்டணக் கழிப்பிடம்
தனியே சென்றும்
உரித்த தேங்காய்
உடைக்கத் தேர்ந்தும்
ஓணான் அடித்துத்
தானே திருந்தியும்
ஹீரோ பேனாவுக்கு
மை நிரப்பப் பழகியும்
முழுப்படம் ஒன்றைத்
தூங்காமல் பார்த்தும்
முயன்று தொலைத்திருந்த
பால்யத்தைக்
குண்டால் துளைத்தும்
கார் கொண்டு மோதியும்
எளிதாய்க் கடக்கின்றன
கம்ப்யூட்டர் கேம்
தாங்கிய குழந்தைகள்...
- கார்த்தி.என் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|