 |
கவிதை
ஓட்டம்
கவிதா நோர்வே
நொடிகள்
துப்பாக்கி ரவைகளைப்போல்
என்னுள் பாய்ந்து
என் முதுகின் பின் மாய்கிறது
சில நொடிகளையாவது
பிடித்துவிடும் ஆர்வத்தில்
முன்நோக்கி நகர்கிறேன்
நிமிடங்களாய்
நாட்களாய்.. வருடங்களாய்
அத்தனை நொடிகளும்
என்னை உரசியபடி
என் பின்னால் மரணிக்கின்றன
என்னுடன் சேர்ந்து
பலரும் ஒடிக்கொண்டிருக்கின்றனர்
என் முன்னே ஓடியவர்கள்
யாரும் திரும்பவில்லை
வழிநெடுக பல சினேகிதர்கள்
தொலைந்து போயினர்
சிலர் அறிமுகமாயினர்
ஓடும் அவசரத்தில்
தடுக்கி விழும் பொருட்களில்
அள்ள முடிந்ததை அள்ளிக் கொண்டு
நானும் ஓடுகிறேன்
சிலர் கைகளில் பூக்களும் புன்னகையும்
சிலர் கைகளில் துப்பாக்கி
பலர் வெடித்துச் சிதறுண்டு போயினர்
எனக்கு முன்னே ஓடிய சிலர்
மரணித்தும் போயினர்
ஓடுகையினூடு சிலரால் தென்றலையும்
சூர்யோதயத்தையும் தரிசிக்க முடிகிறது
குருதி தெறித்து,
மனித மாமிசம் முகத்தில் அறையும்
காற்றை முகர்ந்தபடி
சில சமூகம் கதறியோடுகிறது
வாய்பிளந்து
அலற முயற்சிக்கிறேன்
எனக்கு மட்டுமாய் கேட்ட
சத்தம்...
யாருக்குமே கேட்காமல்
போன சில சப்தங்களோடு
அடங்கிவிடுகிறது...
தூக்கத்திலிருந்து நான்
துள்ளி எழுந்தாலும்
இது கனவல்ல.
- கவிதா நோர்வே ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|