 |
கவிதை
கொஞ்சம் உயிரும் காதலென சொல்லப்படுவதும் லஷ்மி சாஹம்பரி
உயிரின் கடைசி துகள்கள்
என்னை நீங்கத் தீர்மானித்த பொழுதில்
காற்றின் கரங்களைப் பற்றிக்கொண்டு
காலத்தின் கைபிடிக்குள் சிக்காது மீட்டு
மலைமுகட்டில் ஒரு கழுகுக்
கூட்டை என் இருபிடமாக்கினாய்
புள்ளியாய் மட்டுமே நீ தோன்றக் கூடிய தொலைவில்
புறப்படத் துவங்கிற்று என் பிரியத்தின் பிரவாகம்
உன் சுவாசத்தின் நெடி அறிய
புழுவாய் நெளிந்து நெருங்கவே
பறந்து விலகி உனக்கான தாகம் கூட்டினாய்
உன் நெருக்கத்தின் வெம்மை கிடைக்காது போயினும்
உன்னைப் பற்றிய அனுமானங்களோடு
பயணிக்கத் துவங்கினேன்
காதலின் ஆபத்தான பள்ளங்களில்
அறிவிப்பற்ற மழையாய் நீ என்னை
நனைக்கத் தொடங்கிய பொழுதில்
உனக்கான தாகம் வற்றத் துவங்கி
உன் இருத்தலை பெருந்துயராக்கிப் போனது
உன்னைக்காட்டிலும் போலியானது
என் காதலை கொழுத்து வளரவிட்ட
உன்னைப்பற்றியதான என் அனுமானங்கள்
என் அனுமானங்களுக்கு
உயிர் இருந்திருக்கலாம்
நான் மிஞ்சி இருக்ககூடும் ..
- லஷ்மி சாஹம்பரி ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|