 |
கவிதை
படுகளம் மாலதி மைத்ரி
முன் இரவில் இறக்கத்தில்
நமது வாசலைக் கடந்து
இருட்டின் எல்லையை
நூல் பிடித்து வெளியேறுகிறோம்
அகன்ற வீதிகளை நோக்கி
தெருவிளக்குகள் எங்கோ ஒளிதெறிக்க
நமது நிழலின் முன்பின்
ஆட்டங்களில் தடுக்கிக்கொள்கிறோம்
இடுப்பில் துணிமூடிய சட்டியுடன்
நாய்கள் அங்கொன்றும்
இங்கொன்றுமாகக் குரைத்துப் பார்க்கும்
பழகிய வாசனைபிடித்து அடங்கும்
அவரவர் தெருக்களில் அவரவர்
பிரிகிறோம்
குடித்தனக்கார
ஆண்டைகளின் வாசலை நோக்கி
தெரு வாசலில் வெளிச்ச
சட்டத்துக்கு அப்பால் நின்று
குரலெடுப்போம்
அம்மா அன்னம் போடுங்க
கூடப்படிக்கும் பொடிசுகள்
எட்டிப்பார்த்துவிட்டுச் செல்லும்
ஏகாலி வந்திருக்காம்மா...
அம்பட்டவன் வந்திருக்காம்மா...
தோட்டி வந்திருக்காம்மா...
சக்கிலி வந்திருக்காம்மா...
குடிப்புள்ள வந்திருக்காம்மா...
ஏண்டி உன் அப்பன், ஆத்தா வரலியா
ஒனக்கு நேரங்காலமே தெரியாதா
இப்பத்தான் சாப்பிடப்போறோம்
இருட்டுல நின்னு பூதங்காக்காதே
தோட்டத்துப்பக்கமா வந்து ஓரமா நில்லு
ஐயா...
தஞ்சம் கொடு
உணவு கொடு
தண்ணி கொடு
வேல கொடு
மண்ணு கொடு
வாழ்வு கொடு
உயிரு கொடு
கொடு... கொடு... கொடு... கொடு...
வரிசைகள் நீண்டுகொண்டே இருக்கின்றன
உடலே பெரும் பிச்சைப் பாத்திரமாக
வாய்ப்பிளந்து நிற்கிறோம்
எல்லாக் காலங்களுக்குள்ளும்
எல்லாத் தர்மங்களும்
நமது பாத்திரத்தில்
இடப்படுகின்றன
அவை ஒரு பழகிய
விலங்கெனப் படுத்திருக்கிறது.
- மாலதி மைத்ரி ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|