 |
கவிதை
ஓணான் கொடி மாலதி மைத்ரி
கோபித்துக்கொண்டு செல்லும்
தன் தாயைப் பின்தொடர்ந்து செல்கிறாள் மகள்
ஒரு நிலையில் தாய் மறைந்து போக
குருட்டு வழி தன்முன் விரிந்து கிடக்க
குழம்பித் திரும்புகிறாள்
அழுதுகொண்டு வந்தவழியே
பெயர் தெரியாத புதரும்
மரங்களுமாய் நீண்டு செல்கிறது
பாதை முழுவதும் கூடு திரும்பும்
பறவைகளின் இரைச்சலுடன்
நீண்ட நேரமாய் மறைந்துகொண்டிருக்கும்
அடிவானச் சூரியன்
ஆடாதொடைப் புதரின் மேல்
வினோதப் பச்சையில் வலைப்போல் விரிந்து
இழை நரம்புகள் அந்தரத்தில்
ஊசலாடத் தளும்பிக்கொண்டிருக்கின்றன காற்றில்
வேரற்ற அதன் விசித்திரப் பச்சை
அவளைக் கவர
பறித்துத் தனது சீட்டிப் பாவாடையில்
கட்டிக்கொண்டு வீடு திரும்புகிறாள்
தனது தோட்டத்து வேலி முழுவதும்
நூல் நூலாய் எடுத்து இறைக்கிறாள்
தோட்டம் தனிப் பச்சையில் ஒளிர
ஊரார் அனைவரும் அதிசயித்து
ஆசைக்குக் கொஞ்சம் அள்ளிச் சென்று
இறைக்கின்றனர் அவரவர் தோட்டத்தில்
எல்லோரும் அதன் அழகிய வண்ணத்திலும்
உடல் மென்மையிலும்
வேரற்ற அதன் வாழ்வின் ரகசியத்திலும்
பின்னிக் கிடந்தனர்
பல மாதங்கள் கழித்து
பொங்கலுக்கு
அம்மாவை அழைத்து வந்தார் அப்பா
தோட்டத்தைப் பார்த்துவிட்டு
ஒரு மல்லிகைக் கொடியாவது நட்டிருக்கலாம்
காய்க்காமல் பூக்காமல்
என்னத்துக்கு என்றாள் அம்மா
ஊரே புதுப் பச்சையுடன் இருந்தது
வேறு எந்த நிறமுமில்லாமல்
சலிப்பும் அலுப்பும் பெருகி
வேரற்ற கொடியை ஒட்டடைபோல்
வழித்தெறிந்து வீச
மரம் செடிகளெல்லாம் பட்டுப்போய்
மண்ணில் கட்டைகளாய் நின்றுகொண்டிருந்தன
- மாலதி மைத்ரி ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|