 |
கவிதை
கேள்போல் பகை!
பாத்தென்றல். முருகடியான்
ஒன்றுபட மாட்டார்; உருப்படவும் மாட்டாமல்
நண்டுகதை போன்றே நடந்திடுவார்! - மண்டுகளாய்
வெண்டா மரைத்தேனை வேட்காமல் வேற்றுமொழித்
தண்டுகளைத் தண்மலரென் பார்!
மூவேந்தர் ஆட்சி முடிந்து முளைத்தவிதை
சாவேந்திப் போய்வரையில் சாவாதோ? - தாவடிமைப்
பிட்டேந்தி உண்ணப் பெரிதும் விரும்பியெங்கும்
தட்டேந்து வார்தமிழ ரே!
தட்டிக் கொடுத்துவிட்டுக் கால்தொட்டுக் கைதொழு(து)
எட்டி உதைத்தால் இளித்துவிட்டு - மட்டிகளாய்
இன்னும் இறைதமிழை ஏற்றமுடி யாதிருக்கும்
மண்ணே மறத்தமிழர் மண்!
சூரியனின் சூடாய்ச் சுடுந்தொலைக் காட்சிவழி
ஆரியத்தோ டாங்கிலத்தின் ஆளுகையால் - வீரியமே
இல்லாத் தமிழ்பரப்பி ஏய்க்குந் தலைவ(ர்)களை
நல்லாராய் நம்புவதேன் நாம்?
ஆதித்தர், அண்ணா, அருந்தலைவர் மா.பொ.சி
சாதிக்க மாட்டாமல் சாவடைந்தார் - பாதிக்கப்
பட்டதெல்லாம் நீக்குவதாய்ப் பாலொழுக்கம் பேசிவிட்டு
வெட்டுகிறார் வெல்தமிழின் வேர்!
பிள்ளை மகுடமிட் பேரரெல்லாம் கொள்ளையிட்
நல்ல தமிழழிக்கும் நாடகத்தால் - கள்ளமுடன்
சேற்றில் அமுதமிட்டுச் செம்மொழியென் றார்ப்பரித்தல்
காற்றைக் கயிறாக்கல் காண்!
- பாத்தென்றல். முருகடியான் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|