 |
கவிதை
அப்பாவுக்கு ஒரு பார்வைக்கடிதம்... நிலாரசிகன்
தினமும் காலை
தாமதமாக எழுகையில்
திட்டும் அம்மாவிடம்
"எம்பொண்ணு ராஜகுமாரி
அவளத் திட்டாதே"
என்று இனி சொல்லமுடியாதப்பா
உங்களால்...
உயிர்வாங்கும் பரிட்சை
நாட்களில் புத்தகம் நடுவில்
முகம் புதைத்து நான்
தூங்கிப்போனால்
"எழுந்திரிடா செல்லம்
கட்டில்ல படுத்து தூங்குடா"
என்று இனி சொல்லமுடியாதப்பா
உங்களால்...
கதவிடுக்கில் விரல்
சிக்கி காயத்துடன் நான்
சாப்பிட தவித்த நேரம்
சோற்றைப் பிசைந்து
பாசம் ஊட்டி
"நல்லா சாப்பிடுடா" என்று
இனி சொல்லமுடியாதப்பா
உங்களால்...
இவை எதுவுமே சொல்ல
முடியாவிட்டாலும்
நீங்கள் சுறுசுறுப்பாய்
ஓடுகின்ற
இந்த திருமண கூட்டத்தில்
மேடையில் அமர்ந்திருக்கும்
என் விழிகளைத் தொட்டுச்
செல்லும் உங்கள் பாசப்பார்வை
சொல்கிறதப்பா
"நல்லா இரும்மா" என்று.
- நிலாரசிகன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|