 |
கவிதை
ஊமச்சி நிலாரசிகன்
எம் பேரு ஊமச்சி
பேச்சு ஒண்ணும்
கெடயாது
காதுரெண்டும்
கேட்காது
குயில பாத்திருக்கேன்
குயில்பாட்டு
கேட்டதில்ல
சின்னபுள்ளைக சிரிப்ப
பாத்திருக்கேன்
எச்சிவாயி மழலை
பேச்சி கேட்டதில்ல
பள்ளிக்கூடம் போனதில்ல?
என் சைக மொழி
புரியாம வேலைவெட்டி
கிடைச்சபாடில்ல
கஞ்சித்தண்ணி குடிக்க
வழியுமில்ல
வயுத்துக்கு வயசாகல
ஒடம்புக்கு ஆகிப்போச்சு
ஆடியோட முப்பது
கஞ்சிக்கே வழியில்ல
கல்யாணத்துக்கு
ஆள்தேடி ஊர் ஊரா
அலையுது
ஆத்தாகெளவி
ஊமச்சிய கட்டிக்க
உள்ளூருல ஆளில்ல
செவிட்டுபுள்ளன்னு
சொல்லிட்டுப்போனான்
செக்கம்பட்டி சின்னராசு
ஊமச்சிய கட்டிக்கிட்டா
பொறக்குற புள்ளக்குட்டிக்கும்
பேச்சுவராதுன்னு ஜோசியம்
சொல்லிச் சிரிச்சுட்டுப்போனான்
துரையூரு முத்துச்சாமி
கட்டிக்கிட்டா என்ன
வெச்சுக்கிட்டா என்ன
ஊமச்சிக்கு ஏது மனசுன்னு
நெனச்சு நடுவூட்டுல
நாற்காலி போட்டு
உட்கார்ந்தான்
உள்ளூரு மைனரு
ஆத்தாவுக்கு ஒண்ணும்
புரியல
எங்கப்பன் போட்டோவுக்கு
முன்னால நின்னு
அழுவுது
மெதுவா தலைய
உசத்தி என்ன
பார்த்து ஏதோ
கேட்டா என்ன
பெத்த ஆத்தா.
பெட்டி படுக்கைய
எடுத்துகிட்டு
மைனருகூட
புல்லட்டு வண்டியில
ஏறிபுட்டேன்.
இந்த ஊமச்சிக்கு
மனசு இருக்கறது
ஊரு ஒலகத்துக்கு
தெரியாது
ஆனா
இந்த ஊமச்சிக்கு
வயிறு பசிக்கும்னு
எங்க ஆத்தாவுக்கு
மட்டுந்தான்
தெரியும்.
ஒத்த வேள
கஞ்சிக்கு
பத்துவேள
பாய விரிக்கறது
தப்பா ரைட்டான்னு
தெரியல...
இடி விழுந்தா
கூட கேட்காத
காதுக்கு
பொல பொல ன்னு
எங்க ஆத்தா
சிந்தற கண்ணீருசத்தம்
மட்டும் கேட்டுக்கிட்டே
இருக்கு!
- நிலாரசிகன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|