 |
கவிதை
அத்தமக செம்பருத்தி .... நிலாரசிகன்
பொட்டல்காட்டுல பூவு
ஒண்ணு பூத்துச்சு
அத்தவயித்துல அழகா
பொறந்தா ஆசமக செம்பருத்தி...
ஆத்துதண்ணி போல
வெரசா ஓடிப்போச்சு
வருசம் பதினாறு..
சோளக்காட்டு பொம்ம
போல வெடவெடன்னு
வளர்ந்து நின்னா ..
மாமன் எம்மேல ஆசவச்சு
அவசரமா சமஞ்சு நின்னா ..
கருவாட்டு சந்தைக்கு
அவ வந்தா
சந்தயெல்லாம் ரோசாப்பூவாசம்
வீசும்...
ஆலவிழுதுல அவ
ஊஞ்சல் ஆடுற அழக
ரசிக்க ஊருகண்ணெல்லாம்
போட்டி போடும்...
சைக்கிள் கம்பியில
உட்கார்ந்து என்
நெஞ்சுல சாய்ஞ்சுகிட்டு
பக்கத்தூரு கொட்டகையில
சினிமா பார்க்க வருவா ..
செம்பருத்திக்கும் எனக்கும்
ஓடக்கர அம்மன்கோவிலுல
கல்யாணம் நடந்துச்சு ....
நாப்பது கெடாவெட்டி
நாக்குருசிக்க
கறிச்சோறு போட்டு
அசத்திபுட்டா அத்தக்காரி !
வானவில்லுகூட வாழ
ஆரம்பிச்சேன்;
வசந்தமுல்ல ஒண்ணு அவ
வயித்துல வளர
ஆரம்பிச்சுது..
ஒலகத்துல அழகானது
நிலாவும் இல்ல
மழையும் இல்ல
புள்ளய சுமக்குற
புள்ளத்தாச்சியோட முகந்தான் .
தங்கம்போல தகதகக்குற
அழகுமுகம்;
வைரம்போல மின்னலடிக்குது
அவமுகம்.
காள பொறக்குமோ
பசு பொறக்குமோன்னு
தெரியலை ...
ஒம்பது மாசமாச்சு
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு யுகமா நகருது ....
வயக்காட்டுல நின்னாலும்
தென்னந்தோப்புல நின்னாலும்
உள்ளுக்குள்ள அவ நெனுப்பு
மட்டுந்தான் நிக்குது ....
உள்ளூரு மருத்துவச்சிக்கு
கையி நடுங்குதுன்னு
மேலத்தெரு மாணிக்கம்பய
சொல்லிட்டு போனதால ,
பக்கத்தூரு கவர்மெண்டு
ஆஸ்பத்திரியில் செம்பருத்திய
சேர்த்துபுட்டு வெளியில
நிக்கறேன்...
முள்ளுகுத்தினா கூட
தாங்கமாட்டா..
புள்ள பெக்குற வலிய
எப்படித் தாங்குவாளோன்னு
படபடன்னு அடிக்குது
நெஞ்சு ...
பொம்பளைக்கு புள்ளய
குடுத்துபுட்டு
ஆம்பளைக்கு வலிய
குடுத்திருந்தா கையெடுத்து
கும்பிட்டிருப்பேன் கடவுள ....
அய்யோ அம்மான்னு
கத்துறா என் உசிர
சொமக்கற மகராசி ...
தூரத்துல ஒரு
வேதகோயில் சிலுவ
தெரியுது
புள்ள நல்லா பொறந்தா
நூறு தேங்கா உடைக்கிறேன்
சாமீ..
புள்ள பொறந்த சேதிய
அழுக சத்தம் சொல்லிடுச்சு
ஓடிப்போயி பார்த்தேன்
கறுப்புகலருல காளைக்கன்னு
கண்ணுமூடி தூங்குது !
புள்ளய எங்கையில
கொடுத்துபுட்டு
இடிய எங்காதுல
சொல்லுறா நர்சு ...
புள்ள சத்தம் கேட்டநிமிசம்
செம்பருத்தி சத்தம்
நின்னுடுச்சாம் ...
என் கறுப்புத்தங்கம் வெரச்சு
கெடக்கே!
மாமன்நான் பக்கத்துல
வந்தால படக்குன்னு
எழுந்திரிப்பா ....
மடைமடையா அழுவறேன்
ஒரு அசைவும் இல்லயே!
.
கையில ஒரு பிள்ள
அழுவுது
தாய்ப்பாலுக்கு
சுடுகாட்டுல பொதச்சு
பாலு ஊத்தியாச்சு
ஒரு பிள்ளைக்கு !
பதினாறு நாள் விசேசம்
முடிஞ்சுபோயாச்சு ...
செம்பருத்திய பொதச்ச
இடத்துல புல்லுபூண்டு
வளர்ந்தாச்சு ..
கம்பியூட்டரு இருக்குன்னாக
செகப்பு வெளக்கு
வேன்வண்டி இருக்குன்னாக
என்ன இருந்து என்னத்த
செஞ்சாக..
பச்சபுள்ளைய மண்ணாக்கிபுட்டாக
வெள்ளச்சட்ட டாக்டர
நம்பினதுக்கு
கை நடுங்கின மருத்துவச்சிய
நம்பி இருக்கலாம் .
- நிலாரசிகன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|