 |
கவிதை
மிகவும் நம்ப முடியாத அம்சம்! மூலம் : COLA FRANZEN _ CHILE / தமிழாக்கம் : புதுவை ஞானம்.
மிகவும் நம்ப முடியாத அம்சம் என்னவெனில்
நம்மைப் போன்ற மக்களாகவே
இருந்தனர் அவர்கள்.
நன்னெறியுடனும்
நற்கல்வியுடனும்
நற்பண்புகளுடனும்
நுட்ப அறிவியல் ஞானத்துடனும்
இருந்தனர் அவர்கள்.
இசை நாடக நிகழ்வுகளில்
இருந்தனர் அவர்கள்
உயர்ந்த இருக்கைகளில்.
ஒழுங்காக சென்றனர் பல் வைத்தியரிடம்
முறையான பரிசோதனைக்கு.
சிறந்த பள்ளிகளில் பயின்றனர்
கோல்•ப் பந்து விளையாடினர் சிலர்.
ஆம் , மக்களாக
உம்மைப்போல்
எம்மைப்போல்
குடும்பத்தினராக
தாத்தாவாக மாமாவாக
மற்றும் ஞானத்தந்தையாக
இருந்தனர் அவர்கள்.
ஆனால் . . . .
கிறுக்குப்பிடித்துவிட்டது
குழந்தைகளையும் புத்தகங்களையும்
கொளுத்தி மகிழ்வடைந்தனர்.
கல்லறைகளை அலங்கரித்து மகிழ்ந்தனர்
முறிந்த எலும்புகளால் செய்யப்பட்ட
மேசை நாற்காலிகளை வாங்கினர்
இளசான காதுமடல்களையும்
ஆண்குறியாம் விதைப்பைகளையும்
விருந்தாக உண்டு மகிழ்ந்தனர்.
வெல்லற்கறியவர் தாங்களென நம்பி
இக்கடமையில் கண்ணும் கருத்துமாய் இருந்தனர்
அறுவைச்சிகிச்சையாளர்கள் மற்றும்
கசாப்புக்கடைக்காரர்களின் மொழியில்
சித்திரவதை பற்றி உரையாடி மகிந்தனர்.
எங்கள் நாட்டிலும் உங்கள் நாட்டிலும்
படுகொலை செய்தனர் இளைஞர்களை.
‘அலைஸ்’ நகரில்
கண்ணாடி யன்னல் வழி பார்த்தும் -
யாராலும் நம்ப முடியவில்லை
நடை பழக முடியவில்லை
நீண்ட நிழற்சாலைகளில்
தங்கள் எலும்புகளில்
பயங்கரம் வெடித்துச் சிதறாமல்.
மிகவும் நம்ப முடியாத அம்சம் என்னவெனில்
நம்மைப் போன்ற மக்களாகவே
இருந்தனர் அவர்கள்.
மூலம் : COLA FRANZEN _ CHILE
தமிழாக்கம் : புதுவை ஞானம்.
பின் குறிப்பு : ஓர்க :
“மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாம் கண்டதில்.”
கயவர் என்பதனை ‘இனப்படுகொலையாளர்’ எனக் கருதவும் கூடுமோ !
- புதுவை ஞானம்([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|