 |
கவிதை
அம்மா என்றொரு அநாதை
ரசிகவ் ஞானியார்
அனுப்புனர்:
அம்மா என்றொரு அநாதை,
முதியோர் இல்லம்.
பெறுநர் :
நன்றி மறந்த மகன்,
நான் வாழ்ந்த இல்லம்
பொருள் : பொருள் மட்டுமே பொருள்
ஞாபகமிருக்கிறதா மகனே?
இன்று
அன்னையர் தினமாம்!
உனக்கு
அன்னையை விட்ட தினம்தான் ...
ஞாபகத்திலிருக்கும்!
நீ என்
விரல்பிடித்து நடந்தநாட்களை
கொஞ்சூண்டாவது உணர்கிறாயா?
என்னை விட்டுச்சென்ற
இந்த நாளில்...
நான் உணர்கின்றேனடா...
என்னைப் பிடித்து நடைபயின்ற
அதே விரல்கள்தான் ...
என்னை
இங்கேயும் அழைத்து வந்ததை
நான் உணர்கின்றேனடா...
பள்ளி வாகனம்
கண்விட்டு மறையும் வரையிலும்,
உன்னை
வழியனுப்பும் ...
விழிகளுக்குச் சொந்தக்காரி நான்!
இப்பொழுதோ உனது
புதிய வாகனத்தில்
நான் கண்விட்டு மறையவேண்டுமென...
இங்கே
விட்டுச் சென்றது நியாயமா?
நீ கல்லூரி செல்லும்பொழுதும்
வாசல் வரை வந்து
ஊட்டிவிட்ட ...
விரல்களுக்குச் சொந்தக்காரி நான்!
இங்கே
வயிறாற கிடைத்தாலும்...
வரிசைச் சாப்பாடுதான்!
சௌக்கியமா மகனே..?
வருகிறவர்களெல்லாம் ...
பரிதாபப்படுகிறார்கள்!
பரிதாபப்படவேண்டிய நீயோ
வர மறுக்கிறாய்!
உயிலோடு இருக்கும்போது வந்தாய்
உயிரோடு இருக்கும்போது வருவாயா?
உனக்காய் எழுதி வைத்த
சொத்துக்களை ...
திருப்பிக் கேட்கமாட்டேன்!
நான் செத்தால் ..
என் சாம்பல் கேட்கவேனும் வா!
என் சாம்பல்
ஈரப்பதமாய் இருந்தால் ...
பயந்து விடாதே!
அது நான் விட்ட
கண்ணீர்களின் கலவை
அவ்வளவுதான்..!
ஒரு வேண்டுகோள் மகனே!
தயவுசெய்து
உன் மகனை ...
துணைக்கு அழைத்து வராதே!
என் மகனுக்காவது
கடைசிவரை ...
தனிமையே கிடைக்க கூடாது !
மரணம் தவிர,
இப்படிக்கு,
அம்மா என்றொரு அநாதை
- ரசிகவ் ஞானியார் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|