 |
கட்டுரை
கருவறைக் காதலி ரசிகவ் ஞானியார்
கடலும் கண்ணீரும் தாண்டி - என்னை
நினைத்துக்கொண்டிருப்பவளே !
கருவறை முதலாய் என்னை
காதலிப்பவளே... அம்மா !
நான்
கருப்பையில் விக்கியபோதே நீ
தண்ணீர் குடித்தாய் !
என்மீது
ஈக்கள் மொய்த்தால்கூட நீ
கண்ணீர் வடித்தாய் !
என் கைகளில் குத்திய
ஊசியின் வலியை
மூளை உணர்த்தும் !
என் வயிற்றில் வருகின்ற
பசியின் நிலையை
நீயே உணர்வாய் தாயே !
என் இரண்டாம் மூளையே !
நான்
பசியோடு படுத்தால்
உணவுக்குழாயுக்குள் வந்து
ஊட்டி விடுவாய் !
எனக்கு
காய்ச்சல் என்றால்
நீயுமல்லவா
கஞ்சி குடிப்பாய் !
என்னை
தடவிக்கொடுக்கின்ற எல்லாகைகளுமே
விரல்நுனியில் ...
விஷத்தை வைத்திருக்கிறது !
உன்
விரல்கள் மட்டும்தானம்மா -
இந்தப் பாலையில்
என் பாதம்
பொசுங்குமுன்னே...
தோலாய் வந்து நிற்கிறது !
உன் சமையலை
குறைகூறியே சாப்பிட்ட நான்
இங்கே
குறைகளை மட்டுதானம்மா சாப்பிடுகிறேன்
தயவுசெய்து
நீ அனுப்புகின்ற
கடிதத்தில் ஒரே ஒரு
சோற்றுபருக்கையாவது ஒட்டு !
நானும் ஒரு அன்னப்பறவைதானம்மா
ஆம்
நீ அனுப்புகின்ற
இனிப்பு பொட்டலங்களிலிருந்து - உன்
இதயத்தை பிரித்தெடுக்கிறேன் !
உன்
கருப்பை மூலம் எனக்கு
இரப்பை கொடுத்தவளே !
உன் மீது
வெறுப்பை கொடுக்குமுன் - இறைவன் எனக்கு
இறப்பை கொடுக்கட்டும் !
ஆம்
நான் இறைவனிடம்
பிரார்த்திப்பதும் அதுதான்.
நான் கேட்டு
நீ மறுத்த நாட்களை
நான் சந்தித்ததேயில்லை...
அதுபோல
நீ கேட்டு
நான் மறுக்கும் நாளொன்றில்
என் பெயர் பிணம் !
- ரசிகவ் ஞானியார் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|