 |
கவிதை
நினைவுகளின் பாரம் ரசிகவ் ஞானியார்
"இந்தக் கால்சட்டை
உனக்கு பொருத்தமாக இருக்கின்றது"
சுற்றுப்புரத்தின்
ஓ... ஓ...
சப்தங்களுக்கிடையே
சிரித்துக்கொண்டே சொன்ன...
சீனியர் அக்காவும்,
"நீ அணிகின்ற
எல்லா ஆடையிலும்
இது மட்டும்
ரொம்ப அழகாய் இருக்குதுடா"
சொல்லிவிட்டு
நன்றியும் நட்பும் ...
வாங்கிவிட்டுச் சென்ற
வகுப்பறைத் தோழியும்,
"அந்த சட்டைக்கு
இந்த கால்சட்டைதான்
அழகாய் இருக்கும்" என்று
தனது தோழிகளுடன் அவள்
சாதாரணமாய் பேசியதை
நான் நிஜமாக்கி வந்தபொழுது
சிரித்து வெட்கப்பட்டு என்னிடம்
காதல் வாங்க முயற்சித்த
அவளும்,
ஏதோ ஒரு பெண்ணின்
புகைப்படம்
பாக்கெட்டில் இருப்பதாக
அம்மாவுக்குத் தெரியாமல்
என்னிடம் தந்துவிட்டு
எதையும் வாங்க முயற்சிக்காமல் சென்ற
வண்ணாணும்,
பேருந்தில் தொங்கிக்கொண்டே
வரும்பொழுது
காதல் கோட்டைகளை உருவாக்குகின்ற ...
பாளையங்கோட்டை அருகே
"ஏறுடா..உள்ள ஏறுடா"
என்று பலமாய் அடித்து
தூசி துடைத்த காவலரும்
ஞாபகத்தில் வருவதை ...
தவிர்க்க முடியவில்லை!
அளவு குறைந்துவிட்டதென்று
பழைய பாத்திரக்காரனிடம்
அந்தக் கால்சட்டையை
அம்மா கொடுக்கும்பொழுது..
அளவு குறைந்தது
கால்சட்டை மட்டும்தான்
நினைவுகள் அல்ல என்று
அம்மாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..
பழைய பாத்திரக்காரன்
புறப்பட்டுவிட்டான்
கனமான பாரங்களோடு..
- ரசிகவ் ஞானியார் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|