 |
கவிதை
ஒரு புயலும் சில பூக்களும் சமீலா யூசுப் அலி
உணர்வின் வேர்கள்
தாகிக்கும்
இரவுக்கர்ப்பத்தில்
என் மெளன விசும்பல்!
புத்தகங்களுக்குள்
வசிக்கும்
விழிகளில்...
யுகங்கள் அழுத வலி!
தொண்டைக்குள்
தூண்டில் முள்ளாய்
என் இதயம்!
பொங்கிப்பிரவகிக்கும்
என்
ஞான சமுத்திரம்
தாளில் இறங்குகிறது...
துளித்துளியாய்...
ஒவ்வொரு வரியும்
சமூகத்தின் முள்வேலிகளில்
கிழியாமல் பிறக்கட்டும்!
சில கனவுகளும்
வானுயர்ந்த இலட்சியங்களும்
நினைவுகளில் மட்டும்
நிரந்தரமாய்....
தயவு செய்து
என்னை
சுவாசிக்க விடுங்கள்!
தளைகள் அறுந்த
கரங்கள் வேண்டும்
அணு அணுவாய்
என்
இதயம் பெயர்க்க...
நினைக்கும் போது மட்டும்
சாப்பிடும்
சுதந்திரம் வேண்டும்!
நீளும் இரவும்
நானும்
ஒரு தொழுகைப் பாயும்
சில விழி நீர்த்துளிகளும் போதும்
என்
உயிர் பூக்க...
ஒவ்வொரு
மொட்டின் மலர்விலும்
ஒவ்வொரு
இலையின் உதிர்விலும்
தேடல்!தேடல்!
வற்றாத நீர்ச்சுனைகளை
உறிஞ்சிக் கொண்டே
ஓடிக் கொண்டிருக்கும்
என் வேர்களில்...
தாகம்!தாகம்!
இடையில் இடறும்
சில`கற்கள்`
`நீ வெறும் வேர் தான்`
உறுத்தும்!
ஓடிக்கொண்டிருக்கும்
வேருக்கு
ஒரு புயலும்
சில பூக்களும் சொந்தம்!
வளைந்தோடும்
நதிக்கு...
கரையோர நாணல்களின்
கேள்விகளுக்கு
பதிலளிக்க நேரமேது?
இது முடிவிலிப் பாதை!!!
- சமீலா யூசுப் அலி, மாவனல்லை, இலங்கை. ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|