 |
கவிதை
இன்னும் சில நம்பிக்கைகள்
நிந்தவூர் ஷிப்லி
கத்தரிக்கப்பட்டாயிற்று
சிறகுகளோடு
சேர்ந்து
எங்கள் கனவுகளும்....
உயிரோடு
புதைக்கப்பட்ட
எங்கள் உரிமைக்குரல்
செத்துவிடவில்லை
இன்னும்
நேற்றைய
அவலங்களுக்கும்
நாளைய
அச்சுறுத்தலுக்கும்
இடையில்
கேள்விக்குறியாய்
வளைகின்றன
இன்றைய கணப்பொழுதுகள்
பிறப்பு
ஒருமுறைதான்
எத்தனை
முறைதான்
சாவது
உலகம்
இப்போது
கிராமமாகிவிட்டது
என்கிறார்கள்
எங்கள்
கிராமமே
ஒரு உலகம்தானே....
எத்தனை மகிழ்ச்சி
எத்தனை பரவசம்
உறவுகளெல்லாம்
கூடிக்களித்த
அந்த
ஆனந்த நிமிடங்கள்
விதவையொருத்தியின்
முதலிரவு நினைவுகளாய்
நெஞ்சில் கனக்கின்றன
மூட்டை
முடிச்சுகளோடு
நாங்கள்
வந்துவிட்டோம்
பாவம்
இப்போதும்
தனித்திருக்கிறது
பூர்வீகம்
சுமந்த
எங்கள் வீடு
புரண்டு திரிந்த
ஊரின் வனப்பு
வறண்டு கிடக்கலாம்
எல்லையில் நின்ற
நெல்லி மரம்
சரிந்திருக்கலாம்
கற்ற பள்ளி
தொழுத கோயில்
நடந்த தெருக்கள்
படித்த வயல்கள்
புழுதிக் காற்று
எல்லாமே
சிதைந்து போயிருக்கலாம்
ஊரில்
மீண்டும்
வசிக்கப் போகும்
எங்கள் கனவுகளையும்
நம்பிக்கைகளையும்
யாரால்
என்ன
செய்ய முடியும்?.
- நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை, இலங்கை ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|