 |
கவிதை
நீண்ட ஒரு நாவலும் நீளும் ரணங்களும்
நிந்தவூர் ஷிப்லி
அது ஒரு நீண்ட நாவல்
இரண்டு தசாப்தங்கள் தாண்டியும்
இன்னும் முடிவதாயில்லை
பாதியில்தான் நான் படிக்கத் துவங்கினேன்
முழுக்கதையும் தொடர்ந்து படிப்பவர்கட்கே
சரி வரப் புரிவதாயில்லை
நாவலின் ஒவ்வொரு வரியிலும்
உயிர் துளைக்கும் உண்மை வலிகளின்
தத்ருபம் நிரம்பி வழிகிறது...
துண்டுச்சீட்டில் எழுதிவிடக்கூடிய
தம்மாத்துண்டு கதை அது...
ஒரு சிறுவனை ஒரு பெரியவன்
அடக்கத்துவங்கும்போது நேரும்
படிமுறைச்சிக்கல்கள் ஒவ்வொரு பக்கத்திலும்
பயங்கர விஞ்ஞானமாய் விரிந்து செல்கிறது..
இடையில் இன்னொரு சிறுவன்
வேண்டுமென்றே சீண்டப்படுகிறான்..
சிறுவன் சிறுவர்களாக
பெரியவன் பெரியவர்களாக
உரிமைக்கான போராட்டமொன்று பீறிடத்தொடங்குகிறது
இடையில்
பேச்சுவார்த்தை
வன்முறை நிறுத்தம்
உடன்படிக்கை என்று
நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை..
சீண்டப்பட்ட மற்றைய சிறுவர் கூட்டம்
காரணமின்றி
கொல்லப்படுகிறது
கொளுத்தப்படுகிறது
அடக்கப்படுகிறது
முடக்கப்படுகிறது
இந்த நாவலை சிலர்
அவ்வப்போது படிக்கிறார்கள்
சிலர் படிப்பதேயில்லை
வாசகர் வட்டம் பற்றிய எந்தக்கரிசனையுமின்றி
தொடர்ந்துகொண்டேயிருக்கிறது நாவல்
ஆயுதங்களே பிரதான பாத்திரங்கள்
எல்லாப்பக்கத்திலும்
கொலைச்செய்தியும்
இரத்த வாடையும் விரவிக்கொண்டேயிருக்கின்றன..
மர்ம நாவல் என்று சிலர் சொல்வதை
ஏற்க முடியவில்லை
முதலில் சிறுகதையாகத்தான் துவங்கியிருக்கும்
வலுக்கட்டாயமாக நாவலானதா
என்பது பற்றி எனக்கொன்றும் தெரியாது..
உடன்பாடுகளின்றி முரண்பாடுகளில்
வளர்ந்து செல்லும் அந்நாவலை
ஒற்றுமையாக்கி யாராவது சுபம் போடுங்களேன்..
இன்னும் இதன் பயணம் நீண்டால்
நாவலை படிக்கக்கூட யாருமிலர்
இவ்வளவு சொல்லிவிட்டேன்
நாவலின் பெயரைச்சொல்லவும் வேண்டுமா...???
- நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை, இலங்கை ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|