 |
கவிதை
வெறுமை ஸ்ருதி ரமணி
பூடகமாகத்தான் இருக்கிறது வாழ்க்கை
புரியாத புதிர்தான்
இறுக்கமான அமைதியில்
விரும்பி நிலைக்கும் தனிமையில்
அலைபாயும் எண்ண ஓட்டங்கள்
குவியும் வெற்றிடப் புள்ளியில்
சுற்றிலும் புலப்படாத உருவமற்ற வெளி
உணர முற்பட்டு
உணர்ந்ததாக பாவித்து
உயிர்ப்பித்துக் கொள்ளும் தன் முனைப்பு
புள்ளியே புதிராய்த் தோன்ற
புரிய நிற்பது எது?
தேடுதல்தான் வாழ்க்கை
தேடித் தேடிச் சலிப்பதும்
மீண்டும் மீண்டும் தேடுவதும்!
கைப்பிடியில் இழுபடும்
லகானின் மறுமுனையில்
காலக் குதிரை
கட்டறுத்துக் கொள்ளத்
துடிக்கிறது!
ஒவ்வொருவருக்கும் ஒன்றொன்றென்ற
புள்ளியை நோக்கிய
பயண இடுகையில்
விரட்டி இழுக்கிறது
வீணாகும் பொழுதுகள்
எவ்வளவுதான் பயணித்தாலும்
எத்தனைதான் தேடி நின்றாலும்
எல்லாமும் அடங்குவது
எங்கென்று சொல்ல?
பிரமையும் பிரேமையும்
பிய்த்தெறியும் வாழ்க்கை!!
- ஸ்ருதி ரமணி ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|