 |
கவிதை
வனத்தின் வழிஅனுப்புதல் சுகிர்தராணி
வெடிகனியின் உலர்விதைபோல்
வருகையை முன்னறிவிக்காமல்
பறந்து உன்னுள் விழுகிறேன்.
திடுக்கிடாமல்
தளிர்வாசலை உட்புறம் திறக்கிறாய்.
கண்பாவை விரியாமல்
மெல்லிய இருட்டு பழக்கமானதும்
சுவர்களால் கட்டுறாத அறைகளை
ஒவ்வொன்றாகக் காட்டுகிறாய்
தகலெடுக்க இயலாத
ஒலிப்பேழையின் ஆதி இசை
உன்னிடம் நிரம்பி வழிகிறது.
சகலபட்சிகளின் இணைகள்
உன்முதுகைத் துளைத்துப்
பறந்து செல்லுகின்றன.
சரசரவென உட்புறம் உன்னை
அரிந்து காட்டுகிறாய்.
மண்ணுக்கு முந்திப் பிறந்ததைக்
காட்டுகின்றன வயதுக்கோடுகள்.
மெல்ல உன் பச்சையம்
என்மீது பரவத் தொடங்குகிறது
விடுபட்டு வேரின் நீர்க்கண்ணாடியில்
உருவம் பார்க்கிறேன்
முளைத்திருக்கின்றன
தலையில் நுனிமொட்டும்
அடியில் கிளைவேரும்.
- சுகிர்தராணி
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|