 |
கவிதை
வீரப்பிரதாபம்! -தமிழ்சித்தன்-
ஊர் பற்றிய கதைகளை
யார் யாரோ பேசுகின்றனர்.
புனைகதைகளைப்போல
என் ஊர் பிய்த்தெறியப்படுகிறது.
கந்தகப் புழுதியினுள்
என் வயல்கள்......
அதன் கீழே என்மனிதர்கள் !
மாமிசத் தசைத்துண்டங்களால்
மண் மூடிப்போயிற்று!
கொத்துகொத்தாக
பீரங்கி வாய்களிலிருந்து
எரிமலைக்குழம்புகள்
என்னூரில் கொட்டப்படுகின்றன!
அத்தனை வெம்மைக்குள்ளும்
அழிகிறது நான்பிறந்தமண்.
எட்டாததூரத்தில்
குதியுயர்ந்த சப்பாத்தில்
நின்றுகொண்டு,
மைபூசிய சொண்டு குவித்து
மலர்வணக்கம்
சொல்கிறது தொலைக்காட்சி.
உரத்த குரலில் இன்னொருவன்
கவிதை வாசிக்கிறான்.
பின்புறத்தைதட்டிவிட்டு
விரல் சொடுக்கிப்பேசுகின்றான்
பேசவல்லவன்.
அடுத்துவரும் ஆட்சிக்கு
ஆள்ப்பிடிக்கின்றான் சூட்சுமக்காரன்.
அரசியல் காட்சி மாற்றங்களுக்காகவும்,
கதிரைகளுக்காகவுமே,
எரித்தழிக்கப்பட்ட தமிழனின்
அப்பாவிக் கொட்டில்கள்
காட்சிப்படமாகின்றன.
போர்காலத் துடுப்பெடுத்தாட்டத்தில்
எந்த
மரணங்களை யார் முந்தி
அறிவிப்பதென்பதில்
அவர்கள் தங்களுக்குள்
சிண்டைப்பிய்த்துக் கொள்கின்றனர் !
சிறகடிப்பை மறந்துவிட்டு
இரத்தம் பீறிட
இன்னமும் எஞ்சியுள்ளனவா புறாக்கள்?
ஆராய்கின்றன ஊடகங்கள்..
இரப்பையையும் எறும்புக்கு கொடுத்துவிட்டு
நாறிக் கிடக்கிற என்பூமியில்
கொடிபிடிக்கக் கையிருக்கிறதா??
என்று அவர்கள் விவாதம் நாடத்துகின்றார்கள்.
எல்லாக்கொடிகளும்,எல்லாச்சின்னங்களும்
என் இனத்தையும், மண்ணையும்
சூறையாடிச் சுடுகாடாக்கிவிட்டு
தங்கள் பதாதைகளுடன்
மேலுமொரு புதிய பிரமாணம்
எடுப்பர்.
புத்தம் புதிய அந்த
வீரப்பிரதாபப்
பிரமாணத்துள்
நான் இழந்த
என் குழந்தைகளையும், என்
உறவுகளையும், என் கருகிய
மண்ணையும் ,வழமையைப்போலவே
எல்லோரும் மறந்து போயிருப்பர்.
- தமிழ்சித்தன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|