 |
கவிதை
எதிரி வென்றான் தமிழ்சித்தன்
என்னரும் வன்னியை
எரித்தழித்தின்று
எதிரி வென்றான்.
மூல வேரறுத்தெறிந்தும்
"சூல்கொள்" உருவின்
கருவறை அறுத்தும்
சிறுகச் சிறுக எறும்புகள் போல
தமிழன் சேர்த்த
அனைத்தையும் அழித்து
எதிரி வென்றான்.
குழந்தைகள் தலைகளை
அறுத்தறுத்து எறிந்து
அவன் ஏற்றிய கொடியில்
உலகம் மகிழ்ந்தது.
பட்டினியிருந்தேனும் உயிருக்கு
பாதுகாப்பென்று எண்ணிய
குழிகளிற்குள்ளேயே
உயிரோடு புதைந்ததென்
தமிழனின் மூச்சு
தமிழர் சாதியின்
குருதியில் மிதந்த
கடைசிக்குடியிருப்பையும்
எதிரி எரித்தழித்தான்
பட்டினியோடு குற்றுயிராக்கி
வல்லமையிழந்த அந்த மனிதரைப்
பந்தாடிப் பந்தாடி
எதிரி பூரிப்படைந்தான்.
கண்முன்னே காலறுபட்டுக்
கையறுபட்டு முண்டமாய்ப்போன
தமிழர் பிணங்களை
உலகம் கொண்டாடியது.
என் மூதாதையரும்,
நானுமாய் வாழப்பிறந்த
மண்ணினில் இருந்தும்,
வயல்களிலிருந்தும்
கடல்களிலிருந்தும்
கடைத்தெருவிருந்தும்-என்
மக்களை விரட்டிய
பேய்களோடு கூடிப் புணர்ந்து
சன்னதம் ஆடின
உலகப் பிசாசுகள்.
உன் வம்சக் கொடிகளை
வேரறுத்தெறிந்த
துயரச் சுமைக்குள் தன்னினைவிழந்து
தவிக்கும் என் வன்னிதாயே
உன்னத் தேற்ற
வழியறிகிலேன் அம்மா!!!
- தமிழ்சித்தன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|