 |
கவிதை
தமிழினத் தலைவனே ! வெ தனஞ்செயன்
தமிழினத் தலைவனே !
உன்னை வாழ்த்த
வார்த்தைகள் இல்லை - அனைத்தையும்
உனக்காக நீயே
எடுத்துக் கொண்டதால் - என்னிடம்
இருப்பது வசவுகள் மட்டுமே
ஏற்றுக்கொள் !
சங்கம் வைத்து
தமிழ் வளர்த்தது சரித்திரம் - ஆனால்
தமிழ் வைத்து - நீ
குடும்பம் வளர்த்தாயே - அது
எங்கள் தரித்திரம்;
ஆகாரத்திற்காய் மீன்கள்
அழுக்கை உண்டாலும் - அதிலே
குளமும் சுத்தமாக்கப்படுகிறது,
அதன் சுயநலத்திலே
பொதுநலமும் உள்ளதென்றாய் - ஆம்
நீ சுயநலத்திற்காய்
தமிழை தூக்கிப்பிடித்தாலும்
பேசப்படுவது தமிழ் என்பதால்
பெருமை கொண்டோம் !
ஊழல் வளர்த்தாய்
உன் குடுபம் வளர்த்தாய்!
ஊழலும், தொழிலுமாய்
உன் குடும்பம் பணக்காரப் பட்டியலில்
சேர்ந்த அதே தினத்தில்தான் - நாங்கள்
இலவசங்களுக்கு கையேந்தும்
ஏதிலிகள் ஆக்கப்பட்டோம்;
சுயநலமும், சூட்சும அரசியலுமாய்
மூன்று தலைமுறைக்குள்
முற்றாக துடைத்துவிட்டாய்
தியாகத்தை!
இப்போது
ஆளுங்கட்சி, எதிர்கட்சி
என எதிலும் எவனும் இல்லை
தன்னிகரற்ற தலைவனாய்;
ஆயினும் எங்களிடம்
எதிர்ப்புகள் ஏதுமில்லை!
உயிரரியும் வலியில்
துடிக்கிறான் ஈழத்தமிழன்,
எட்டும் தொலைவிலிருந்தும்
எதுவும் செய்யமுடியவில்லை,
கையறு நிலையில் - உன்னிடம்
காப்பாற்ற முறையிட்டால் - நீ
இறுதித்தீர்மானம் என்றாய்,
ஏட்டிக்கு போட்டியாய்
இயக்கம் வைத்தாய்,
ஒற்றுமையாய் போராடுவோம்
என்றாய் - ஆட்சியை
அபகரிக்க சதி என்றாய்
பேரணி, ஊர்வலம் என்றாய்
உன்பின்னால் வந்தவர்களை
கைது செய்தாய்;
பள்ளி மாணவர்களை
போராட அழைத்தாய்;
கல்லூரி மாணவர்களை
காலவரையற்ற விடுமுறையால்
போராடாமல் கலைத்தாய்
'ஐயகோ எரிகிறது
ஈழம்’ என்றாய் - அதை விட
என் முதுகுவலி கொடுமை என்றாய்!
உன் சுயநல ஒப்பாரியால்
ஈழ்த்தமிழனின் மரண வாக்குமூலத்தை
மறைக்கப் பார்க்கிறாய்;
இப்பொழுதும் எங்களுக்கு
திராணியில்லை
உன்னை
உனது சுயநல அரசியலை எதிர்க்க,
அதனால்தான்
தட்டி கேட்க வேண்டிய தமிழன்
கெஞ்சிக் கேட்டு
கரிகட்டை ஆகிக் கொண்டிருக்கிறான்;
ஒட்டுமொத்த தமிழகமும்
உங்களுக்கெதிராய்
உங்கள் அரசியலுக்கெதிராய் - இருந்தும்
என்ன செய்துவிட்டோம்?
வாக்குச்சீட்டில் கூட
எதிர்ப்பை உமிழ முடியா
இயலாமையில் நாங்கள்;
கூட்டணிக்குட்டில்
எல்லோரும் திருடர்களாய் !
யாரை ஆதரிக்க ?
யாரை எதிர்க்க ?
எதிர்வரும் தேர்தலில்
பூசப்படும் மை
கைவிரலில் இல்லை -எங்கள்
முகத்தில்தான்
என்ன செய்ய?
ஒன்று மட்டும் நிச்சயம்
அறுபது ஆண்டுகாலம் - நீ
அரசியலில் நடித்து வாங்கிய,
தமிழினத்தலைவன் பட்டத்தை
முத்துகுமார் ஒற்றை வரியில்
திருத்தி எழுதி விட்டான் - நீ
உன் குடும்பத் தலைவன்
- வெ தனஞ்செயன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|