 |
கவிதை
அழகுக்கு சொந்தக்காரி உதயகுமார்.ஜி
நிழல் கொடுத்து மலர்
தாங்கி நிற்கும் மரங்கள்
எல்லாம் உன் புன்னகையை
ஏந்தி நிற்கின்றன.
அதன் பாதைகளில் நீ
நடந்து வரும் வேளைகளில்
எல்லாம் "நான் தான் அசைந்து
காற்றைக் கொடுப்பேன்" என
கிளைகள் ஒன்றோடு ஒன்று
மோதி அடித்து கொள்கின்றன.
உன் முகம் காணமுடியாமல்
பூமியில் புதைந்து விட்டதற்காக
அழுது கிடக்கின்றன,
மரத்தின் வேர்கள்.
அவை மண்ணைப் பார்த்து
உன் பாத அழகை பற்றி
நலம் விசாரிக்கின்றன.
மண் பாவம்!
உன் உச்சந்தலை அழகைப்
பற்றி வானத்திடம்
விசாரித்துக் கொண்டிருக்கிறது.
வானம் சூரியனிடம் கெஞ்சிக்
கொண்டிருக்கிறது!
"ஒரேஒரு முறை
அவளைச் சுட்டெரி.
உன்னைக் கோபமாய் அவள்
பார்க்கையில் முகத்தைக்
கொஞ்சம் பார்த்துக்
கொள்கிறேன்" என்று
நிழலுக்காக மரங்களில்
கூடுகட்டி வசித்து வரும்
பறவைகள் எல்லாம் உன்னைக்
கண்டதும் உன் நிழலில்
ஒதுங்குகின்றன.
"எத்தனை பறைவைகளைத்
தான் தாங்கும் ஒரு
பறவையின் நிழல்"
சில பறைவைகளுக்கு
ஏமாற்றம் தான்.
கூவிக் கொண்டிருந்த
குயில்கூட கூவலை நிறுத்தி
நீ பேசுவதை கூர்ந்துக்
கேட்டு ரசிக்கிறது.
காற்றுக்கு கூட
உன்மீது காதலடி.
அடிக்கடி உன்
கூந்தலை கலைத்து
விளையாடி களைப்பாகிறது.
இறைவனின் படைப்புகள்
எல்லாம் என்னைப்
பார்த்து பொறாமைப்
படுகின்றன.
உன்னை நான்
அடைந்ததற்காக
- உதயகுமார்.ஜி ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|